அன்புள்ள
ஜெ
சாத்யகி
ஏன் திருஷ்டதுய்ம்னனைக் காணச்சென்றான்? அங்கே சென்று நீங்கள் எனக்காகச் சம்மதம் சொல்லவேண்டாம்,
நீங்கள் மறுத்தாலும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சொல்கிறான். உண்மையில் அந்தத்தருணத்தில்
எவரும் சொல்வதுதான் அது. ஆனால் அதைச் சொல்ல ஏன் தோன்றுகிறது. அதிலும் தாழ்வுணர்ச்சிதான்
வெளிப்படுகிறதா? தனக்கு ஒன்று ஒரு கருணையால் கிடைக்கக்கூடாது என்று நினைப்பதும் கருணையாக
நினைத்துவிடுவார்களோ என்று சந்தேகப்படுவதும்கூட தாழ்வுணர்ச்சிதானே? இதே மாதிரி நம்
அன்றாடவாழ்க்கையில் பலரும் நடந்துகொள்வதை நான் பார்த்திருக்கிறேன். சாத்யகிக்கு தன்
மைந்தர்கள் மேலான திறமைகொண்டவர்கள் என்ற எண்ணம்தான் உள்ளூர இருக்கிறது. ஆகவேதான் அரசகுடியிலுள்ளவர்களுடன்
சென்று பழகும்படிச் சொல்கிறான். ஆனால் அவர்கள் தாழ்ந்தநிலையில் உள்ளவர்களிடம் பழகினால்
என்ன சொல்வான்? அவர்களை அவனால் ஏர்றுக்கொள்ள முடியுமா? தாழ்வுநிலைச்சிக்கல் கொண்டவர்களுக்கு
உயர்வுமனப்பான்மையும் கூடவே இருக்கும். கீழே உள்ளவர்களை அவர்கள் தாழ்வாகவே நடத்துவார்கள்.
சாத்யகியின் கதாபாத்திரத்தில் இந்த அம்சம் இன்னும் வரவில்லை
ஸ்ரீனிவாசன்