Sunday, June 24, 2018

சாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்



அன்புடன் ஆசிரியருக்கு

தள்ளி நின்று பார்க்கக்கூடியவன் அறிகிற உலகு வேறாகவே இருக்கிறது. வெண்முரசில் வண்ணக்கடல் அப்படி விலகி நின்று அறியக்கூடியவர்களால் சொல்லப்படும் கதை. ஆனால் அக்கதைகளை சொல்கிறவர்கள் சூதர்கள். நிகழ்வுகள் அவர்களுக்கு கதைகள் மட்டுமே. வெண்முகில் நகரத்தில் விலகி நின்று பார்க்கிறவர்களாக பூரிசிரவஸூம்  சாத்யகியும் அறிமுகம் கொள்கின்றனர். ஒரு வகையில் இது மினிமலிசம். பிரயாகையில் திரௌபதியின் மணத்தன்னேற்புடன் கௌரவ பாண்டவர்களிடம் ஒவ்வொருவருக்குமான சுயம் குறித்த அறிதல்கள் முழுமை கொண்டு விடுகின்றன. அதன்பிறகு வெண்முரசின் முதன்மைப் பாத்திரங்களின் உணர்வுகள் பெரும்பாலும் நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. அது பிரதிபலிப்பின் ஊடாகவே வெளிப்படுகின்றன. இந்த வகையிலான வெளிப்பாடு முதன்மைப் பாத்திரங்களின் ஆகிருதியை முழுதாக வெளிப்படுத்துவதாகவும் அவர்களின் குணங்களை வாசக ஊகத்துக்கு விடுவதாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு திரௌபதியின் மணத்தன்னேற்பில் மனம் புண்பட்டு வஞ்சம் கொண்டவனாக திரும்பும் துரியோதனன் தயாளனாக அக விரிவு கொண்டவனாகத் தெரிகிறான். கிருஷ்ணனைப் பற்றிய வியப்பனைத்தும் சாத்யகியின் கண்களிலேயே நிகழ்கின்றன. 

குருதிச்சாரலும் கௌரவ பாண்டவரின் பிற மனைவியர் வழியாக சொல்லப்படுகிறது. 

செந்நா வேங்கையும் சாத்யகி பூரிசிரவஸ் என்றே தொடங்கியிருக்கிறது. தன் தலைவனுக்கு தன்னை முற்றளித்த சாத்யகி. ஆணவம் அழிந்த நிலையிலிருப்பவன். பூரிசிரவஸ் முழுமையான தன்முனைப்பு கொண்டவன். அவனது குணநலன்களை பிரதிபலிக்கும் சாட்சியாக வரும் வாள் முக்கியமான குறியீடு. அந்த வாள் ஒவ்வொரு முறையும் அவன் தன்னை தாழ்வாக உணரும் போது அவனால் எடுக்கப்படுகிறது. இந்த இருபதாண்டுகளில் அந்த வாள் தன்னை மாற்றிக் கொண்டும் இருக்கிறது.

இவ்வாறாக

"எந்தப் போர்க்களத்திலும் எவரையும் நான் வெட்டுவதில்லை. நான் கடந்து செல்லும்போது மெல்லிய வெள்ளி மின்னல்போல இந்த வாள் என்னைச் சுற்றி பறந்துகொண்டிருக்கும். தொலைவிலிருந்து பார்க்கையில் மின்னல் வளையங்களுக்குள் நான் செல்வது போலிருக்கும். என்னை சூழ்ந்திருப்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத எவராலோ உதைத்து வீழ்த்தப்பட்டவர்போல் விழுந்துகொண்டிருப்பார்கள். எவருக்கும் ஒரு சிறு முள்குத்தும் காயத்திற்குமேல் நான் அளித்ததில்லை. பாம்பு கடிப்பது போலத்தான். இறந்தவனைப் புரட்டித் தேடினாலொழிய எங்கு வாள் வெட்டியிருக்கிறதென்று கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் நெஞ்சுக்கும் தலைக்கும் குருதி செல்லும் முதன்மைக் குழாய்களிலொன்றை துண்டித்திருப்பேன்"

அவனுக்கு தன் மகனை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பே போர் குறித்த பேச்சுகளுக்கு இட்டுச் செல்ல வைக்கிறது. மலைகளின் பிரம்மாண்டத்தின் முன் தன் தாழ்வாக உணரும் அவன் சீற்றம் கொள்கிறான். தான் மேலானவன் என்பதை நிறுவுவதற்கென்றே தன் திறனை காண்பிக்கிறான். அதன் பின்னே அவனால் தன் மனைவியை அடைய முடிகிறது.

சாத்யகிக்கு அசங்கனுடனான உறவும் பூரிசிரவஸுக்கு யாமாவுடனான உறவும் ஒப்பிடத்தக்கவை. முன்னதில் அசங்கனுக்கு மணம் முடிவாகும் போது மிக மெலிதாக இருவருக்கும் இடையே ஒன்று உடைகிறது. பின்னதில் மகனிடம் இயல்பாக அமைந்த ஆற்றலை தாளவியளாமல் தானாகவே அவ்வுறவை பூரிசிரவஸ் துண்டிக்கிறான். சாத்யகி வளர்ந்த தன் மைந்தனை குழந்தையாக பாவிக்க விழைகிறான். யாமாவின் வருடலில் உறங்கும் பூரிசிரவஸும் குழந்தையே. இரண்டு இடங்களிலும் குழந்தை தான் சீற்றம் கொள்கிறது.

அன்புடன்

சுரேஷ்  பிரதீப்