Friday, June 29, 2018

போர்க்கோலம்


அன்புள்ள ஜெ,


அஸ்தினபுரியின் போர்க்கோலம் பற்றிய பேச்சில்தான் முதல்முறையாகப் பெரிய போரின் அபத்தத்தைப் பற்றிய நக்கல்கள் வருகின்றன. அதை போரில் கலந்துகொள்ளக்கூடிய, அதேசமயம் மானசீகமாக விலகி நின்றிருக்கக்கூடிய, பூரிசிரவஸ் போன்றவர்கள் சொல்லும்போதுதான் அர்த்தம் வருகிறது. இந்த பால்ஹிக அத்தியாயம் முழுக்கவே போருக்கு எதிரான நையாண்டியும் போரைவிடப் பெரிய ஒன்றை ஞாபகப்படுத்துவதுமாகவே உள்ளது. அமுதம் வழியும் மலையை போருக்கு சமானமான மறுபக்கமாக நிறுத்துகிறார்கள். கீழே இறங்க இறங்க பால்ஹிகர் பைத்தியமாக ஆவது அவர்கள் அஸ்தினபுரிக்கு வந்து மொத்த அஸ்தினபுரியே பைத்தியம் மாதிரி இருப்பதைப் பார்க்குமிடத்தில் நிறைவுறுகிறது. இந்த அபத்தத்தை டால்ஸ்டாயின் வார் ஆன் பீஸ் நாவலிலே காணலாம். அதைவிட ஃபார் ஹூம் தெ பெல்ஸ் டால்ஸ் நாவலில் காணலாம். மகாபாரதப்போரை பலபடியாக எழுதியிருக்கிறார்கள். அதை நவீன இலக்கியம் சந்திக்கும்போது இந்த அர்த்தமில்லாத தன்மையும் கிண்டலும் அபத்த தரிசனமும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். இப்பகுதிகள் வெண்முரசின் ஒட்டுமொத்தத்தையே வேறுமாதிரிப்பார்க்கச் செய்கின்றன

சிவராம்