வெண்முரசின் கட்டமைப்பு
அன்புள்ள ஜெ
வெண்முரசு பற்றிய வாசிப்புகளில் மிக முக்கியமானது நாகராஜ் எழுதிய வெண்முரசின் கட்டமைப்பு என்ற கட்டுரை. மிகவிரிவாக அனைத்தையும் தொட்டுச் செல்கிறது. இந்தக்கட்டுரை, அருணாச்சலம் மகாராஜனின் கட்டுரை, ராஜகோபாலனின் கட்டுரை போன்றவை வெண்முரசுக்கு மிகச்சிறந்த வாசிப்புகள் நடந்துகொண்டிருப்பதைக் காட்டுகின்றன. இந்த வட்டத்துக்கு வெளியேஇதையெல்லாம் கவனிக்காமல், எதுவும் தெரியாமல் சத்தம்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த வாசிப்பு நிற்கும். இது ஒரு கல்லூரிப்படிப்பு போல இன்றைக்கு ஆகிவிட்டிருக்கிறது
நாகராஜன் சொன்னதில் முக்கியமானது இதுதான். இது ஒருநவீன நாவல். இதன் அடிப்படை யதார்த்தம். ஃபேண்டஸியைக்கூட யதார்த்தத்தில் கொண்டுவந்து நிறுத்தியாகவேண்டிய இடத்தில் இருக்கிறது வெண்முரசு. அதற்கு பலவகையான நுட்பமான உத்திகளை அது கையாள்கிறது. இது ஒருநவீன நாவல் என்பதனால்தான் என்னைப்போன்றவர்கள் இதை வாசிக்கிறோம். அதேகாரணத்தால்தான் இன்னொரு கூட்டத்துக்கு இது பிடிகிடைக்கவில்லை. மனக்கசப்பும் உருவாகிறது
இந்த நாவலுக்கு மகாபாரதம் ஒரு கச்சாப்பொருள் மாதிரித்தான். அது ஒரு மாபெரும் என்சைக்ளோப்பீடியா. கதைகளின் தொகுப்பு. அதைக்கொண்டு இன்னொரு கதையை இந்நாவல் உருவாக்கி முன்னால்வைக்கிறது. இதன்வழியாக இந்நாவல் இன்னொரு அறிவுத்தளத்தை உருவாக்கி அளிக்கிறது. ஆகவேதான் இதை வாசிக்கிறோம். மகாபாரதத்தை வாசிக்க மகாபாரதமேபோதும் அதற்கு யாரும் உரை எழுதவேண்டிய அவசியமில்லை.
இந்நாவல் ஒரு வரலாற்றுப்பார்வையை ஒரு மனித உளவியல்பார்வையை ஒரு ஆன்மீகப்பார்வையை ஒட்டுமொத்தமாக முன்வைக்கிறது. அதைத்தான் என்னைப்போன்றவர்கள் வாசித்துக்கொண்டிருக்கிறோம்
எஸ்.சரவணன்