அன்புள்ள ஜெயமோகன் சார்,
கர்ணனின் மனைவி சுப்ரியை ஒரு வித்தியாசமான கிளாசிக்கான கதாபாத்திரம்.அவள் தனது அந்தஸ்திற்கும் அரசியலுக்கும் சரிபட்டுவரும் ஜயத்ரதனை கண்மூடிதனமாக காதலிக்கிறாள். அவனிடமே தனது கர்ப்பபை நிறைய வேண்டும் என ஆசைபடுகிறாள்.ஜயத்ரதன் அவளிலும் மிகுந்த ஆணவம் மிக்கவன். கர்ணனிடம் அவமானப்படும் அவன் கர்ணனை மிகவும் வெறுக்கிறான். துச்சளையோடு தனது குழந்தையை கொண்டு வரும்போது கர்ணனை அவமானபடுத்துகிறான். இது எல்லாம் அவளுக்கு தெரிந்தே இருக்கும். சூதன் ஒருவன் ஷத்ரியனை அவமானபடுத்துவதா? என கொந்தளித்து இருப்பாள். கர்ணனால் சிறைபிடிக்கபட்டு அங்கத்தின் அரசியாய் வந்ததை அவள் ஏற்றுகொள்ளவே இல்லை. அங்கதுக்குள் கலிங்கம் என ஒரு தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறாள்.தனது குழந்தை பிறந்த செய்தியை முதலில் ஜயத்ரனுக்குதான் தெரிவிக்கிறாள். அவளது அணுக்கத்தி அவளை விட ஒரு படி மேல். ஆனால் விதி எல்லாரையும் ஒருகட்டுக்குள் கட்டி விளையாடுங்கள் என அனுமதிக்கிறது.
இன்னோருக்கு மனைவியான ஒருத்தி தன் மனதில் தனது காதலன்தான் இருக்கிறான் என கணவனுக்கு காட்டிக்கொண்டே இருக்கிறாள். கர்ணன் அவளிடம் எதுவும் கேட்கவேயில்லை,என்ன கேட்க?. ஆனால் அவளை விலக்கவே இல்லை. ஆனால் இப்போது தன்னிடம் மன்றாடவரும் அவளை அவமானபடுத்தி கர்ணன் துரத்துகிறான். ஏன் இப்போது வருகிறாள்? ஒருவேளை பாஞ்சாலியை ஜயத்ரதன் கடத்திகொண்டுபோனது இப்போதுதான் தெரியவந்து அவன் மீது அவளுக்கு வெறுப்பு வந்து இருக்கும் என நினைக்கிறேன். அம்பையும் அவளது காதலனால் வெறுப்புற்றுதான் பீஷ்மரிடம் மன்றாட வருகிறாள்.அன்று பீஷ்மர் அம்பைக்கு செய்ததை இன்று கர்ணன் சுப்ரியைக்கு செய்கிறான். சூதன் சூதன் என கர்ணனை அவமானபடுதியவள் அத்தனை சூதர்கள் முன் அவமானபட்டு செல்கிறாள்.
ஸ்டீபன் ராஜ்