இனிய ஜெயம்
தெய்வங்கள் ஏந்திய வில் குறித்து புராணங்களில் வரும் அதன் பெயர்கள் குறித்து ,தேடி வாசித்துக்கொண்டிருந்தேன் . சிவனின் கை வில்லின் பெயர் பினாகம் என்று சொல்லி ,தமிழ் இலக்கியங்களில் பினாகபாணி எனும் பெயர் பயின்று வரும் இடங்களை ,நாஞ்சில் நாடன் சுட்டிக்காட்டினார் . முதன் முதலாக சிவனின் கை வில் பெயரை கேள்விப்படுகிறேன் .
தொடர்ந்து இதோ இப்போது விஜயம் . வில்லுக்கொர் விஜயன் என சற்று தவறாகவே எப்போதும் என்னை வந்து தொட்ட புகழ் மொழி , வில்லுக்கோர் விஜயம் என்றே இருந்திருக்க வேண்டும் என உணர்கிறேன் . காண்டீபத்துக்கும் இந்த விஜயத்துக்கும் இடையேதான் எத்தனை வேறுபாடு.
விஜயம் கை சேரும்போதுதான் கர்ணன் முழு மனிதனாக மாறியதுபோல ஒரு உணர்வு . நெல்லையில் எப்போதும் நான் காணும் கர்ணனுக்கு இப்போது மேலும் பொருள் சேர்ந்திருக்கிறது .
//சன்னதி முன்பு கர்ணன் ,அர்ஜுனன் ,வீரபத்ரர் ,சிலைகளை நீண்டநேரம் ரசித்து நின்றோம் .விதானத்தின் ஒளிக்கான பிளவு ஒன்றின் வழியே ,சாய்கோணத்தில் காலை ஒளி கர்ணன் மேல் விழுந்து , முற்ற முழுதாக ,இக்கணம் உயிர் கொண்ட ,உடலே இது ,என சிற்பத்தின் கருமை , மானுட உடலின் சருமக் கருமை கொண்டு துலங்கியது . வலது கால் கட்டை விரலில் மிஞ்சி , போரின் போது அணியும் வெண்டயம்,தண்டை , கால்களின் குதிரைச்சதையை கெளவி அமையும் வளை, தொடை முதல் இடை வரை இறுக கட்டிய ஆடையின் மடிப்புகள் , ஆடைக்கான அலங்கார தையல் வேலைகள் , முழங்கால் துவங்கி இடை வரை மூன்று வெவ்வேறு , நுட்பமான செதுக்கு கொன்ட ஆரங்கள் ,தொப்புள் வரை புரளும் சங்கிலிகள் ,விரிமார்பின் மையத்தில் பதக்கம் ,அதற்கு மேலே அட்ட்டிககைகள் ,முத்து மாலைகள் ,கழுத்தை அணைக்கும் ஆரங்கள் , கரங்களின் மோதிரங்கள், மணிக்கட்டின் கங்கணம் ,கேயுரம் , புஜ வளைகள், தோள்வளைகள் , தோள் தொட்டு துவண்டு கிடக்கும் செவிக் குழைகள், முறுக்கிய மீசை ,இணைந்து நிற்கும் புருவங்களின் மத்தியில் தீபச் சுடர் என திலகம் ,இடக்கையில் வில் ,வலக்கையில் நாகம் ,மூடிய விழிகளின் புருவ மேட்டின் மேலும் ,கன்னக் கதும்பிலும் காலை ஒளி இழைய,....நெடிதுயர்ந்து நிற்கும் நாகபாசனின் முகத்தில் அது என்ன ?....கருணையா? துயரமா ? ....ஆம் துயரம்தான் ...கருணை கொண்ட துயரம் .இந்த வாழ்வு எனும் ,இணையே அற்ற தனிமையில் தனியே நிற்க அஞ்சி ,கிடைத்ததை எல்லாம் அள்ளிப் பற்றி ,பற்றிய அனைத்தையும் இழந்து விடுவோமோ என ,துயருற்று நிற்கும் மானுடத்தின் முன்பு , அதன் பேதைமை கண்டு துயருற்று நிற்கும் கருணை , அந்த சூரியன் போல , கொடுத்து ,கொடுத்து ,மட்டுமே வாழ்ந்து சென்ற கருணை ...//
மேற்கண்டவை இறுதியாக நெல்லையப்பர் கோவில் சென்று வந்த பின் உங்களுக்கான மடலில் எழுதி இருந்தவை . கார்கடலின் இந்த பத்து அத்யாயங்களுக்குள் மட்டுமே எத்தனை விதமான கர்ணன் எழுந்து வந்து விட்டான் .குடித்து குடித்தே சீரழியும் களிமகன் , மனைவியை இழப்பவன் , மைந்தர் அனைவரும் ஹஸ்தினாபுரி படையில் கீழ் நிலையில் அமைய , தனது இழிவு தனது மைந்தர்களையும் சூழ்வதைக் கண்டு ,கையறு நிலையில் கலங்கி கண்ணீர் உகுப்பவன் , எழு கதிரோன் என எழுபவன் ,அஞ்சேல் என்று அபயம் அருள்பவன் ,பூர்ணாலங்கார பூஷிதன் , அனைத்துக்கும் அனைத்துக்கும் மேல் விஜயம் ஏந்தியநாக பாசன் . ஆம் நாகபாசன் . பார்த்தனின் காண்டீபத்தின் கணை கூட ,விஜயம் கர்ணனின் கையில் திகழும் வரை ஆற்றல் ஓய்ந்து உதிரும் .
விஜயம் .
//“போர் தொடங்குவதற்கு முன்பு அங்கர் அங்கு வந்து, படைமுகப்பில் வைத்து ஆசிரியரின் தாள்முன் வில்தாழ்த்தியே போருக்கெழுவார், இது என் சொல்” என்றான் துரியோதனன்.//
விஜயத்தை தாழ்ந்து பணிய வைக்கும் அளவு வல்லமையோ ,ஆணவமோ கொண்டவராக துரோணர் இருக்கலாம் . அந்த ஆணவமும் வல்லமையும் விஜயத்தை துரோணர் நேருக்கு நேராக கண் நோக்கும் போது,என்ன நிகழும் என அறிய மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .
கடலூர் சீனு