Sunday, January 6, 2019

கௌரவர் சோதனைக்குழாய் குழந்தைகளா?


அன்புள்ள ஜெ

இச்செய்தியை வாசித்தேன். ஆந்திர பல்கலைக்கழகத் தலைவர் இப்படிப்பேசியிருக்கிறார். அதாவது கௌரவர்கள் எல்லாரும் சோதனைக்குழாய் குழந்தைகள் என்று

https://tamil.thehindu.com/india/article25918200.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

இந்த வகையான நம்பிக்கைகள் எப்படி வருகின்றன?

சாம்

அன்புள்ள சாம்

மகாபாரதம் ஒரு செவ்வியல்பிரதி. தொல்செவ்வியல் என்பது தொகைத்தன்மை கொண்டது. வம்சகதை, குழந்தைக்கதை., மாயக்கதைகள், நீதிக்கதை, உதாரணக்கதைகள், நேரடி வரலாறு , தத்துவ உருவகங்கள் என பலவகையான கூறுமுறைகளின் பெருங்கலைவை அது. வெண்முரசு ஒரு பின்நவீனக் காலகட்டத்து மாற்றுச்செவ்வியல் படைப்பு என்னும் வகையில் இத்தகைய பலவகையான கதைமுறைகளை இயல்பாக ஒன்றுகலந்து தன் கூறுமுறையை அமைத்துக்கொண்டிருக்கிறது

குழந்தைக்கதைகள்தான் பரவலாக சென்றுசேர்கின்றன. ஏனென்றால் அவை குழந்தைப்பருவத்திலேயே சொல்லப்படுகின்றன. நாடகம் போன்ற வடிவங்களில் கிடைக்கின்றன. மகாபாரதம்போன்ற செவ்வியல்பிரதிகளை அகவை முதிரமுதிர மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். அவ்வாறு வாசிக்காமல் குழந்தைப்பருவத்தில் கேட்டவற்றையே நினைவில்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அகவை முதிர்ந்ததும் வரலாற்றுணர்வு உருவாகிறது. வரலாற்றையும் குழந்தைக்கதையையும் இணைத்துக்கொள்கிறார்கள்

மகாபாரதத்தில் காந்தாரி தசைப்பிண்டத்தைப் பெற அதை வியாசர் கலங்களில் வைத்து வளர்த்த கதையும் உள்ளது. திருதராஷ்டிரர் காந்தாரியின் பத்து சகோதரிகளை மணந்து நூறு பிள்ளைகளைப் பெற்றார் என்றும் உள்ளது. அந்த அரசிகளின் பெயரும் உள்ளது. முதல்கதை குழந்தைக்கதை. இரண்டாம்கதை வரலாறு. வெண்முரசு முதல்கதையை ஒரு சூதர் சொல்லாகக் கடந்துசெல்கிறது. இரண்டாம்கதையை விரித்துரைக்கிறது

மகாபாரதவாசிப்பு இல்லாமல் செவிசார்ந்தே யோசிப்பதன் அபத்தம் அந்த துணைவேந்தரின் பேச்சு

ஜெ