சித்தி என்பது சாதாரணமாக மனிதர்களால் செய்ய முடியாத ஒரு செயலைச்செய்யக்கூடிய அறிய திறன் என்று கொள்ளலாம். உலகின அனைத்து மக்கள் சமூகத்திடமும் இத்தைய சித்திகள் கைவரப்பெற்றவர்களைப்பற்றிய கதைகள் உள்ளன. இவற்றில உண்மை இருக்குமா என்பதைப் பற்றி சிந்திக்காமால் இது உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் சிந்திக்க விழைகிறேன்.
இத்தகைய சித்தியை ஒருவர் தன் ஆற்றலையெல்லாம் ஒருங்கு குவித்து அடைவதாக இருக்க வேண்டும். அதற்கு அவர் தன்னுடைய அற்ப விருப்பு வெறுப்புகளை தாண்டிசென்றவராக இருக்க வேண்டும். ஆகவே ஒருவர் அந்தச் சித்தியைப் பெற்றிருந்தாலும் அதை தன் சுயநலனுக்காக பயன்படுத்துபவராக இருக்க மாட்டார். இத்தகைய சித்திகள் இயற்கையை மீறியதாக இருப்பதால் சாதாரண விளைவுகளுக்காக அதை பயன்படுத்தமாட்டார் அல்லது மிக அரிதாக இயற்கையின் சூழலை எவ்விதமும் மாறுபடுத்தாத வகையிலும் மட்டுமே பயன்படுத்துவார். மற்றவரின் வேண்டுகோளுக்காக அதை பயன்படுத்தினார் என்றால் அது உண்மையிலேயே அவர்களுக்கு தேவைப்படுகிறதா என முற்றிலும் அறிந்தே அச்சித்தி பயன்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்தக் கருதுகொள்களை மனதில் கொண்டு இன்றைய வெண்முரசில் நிகழ்த்தப்படும் அரிய சித்தி ஒன்றை நாம் கவனிக்கலாம்
ஏகாக்ஷர் தொலைவில் நடப்பதை கண்டு கூறும் சித்தி கைவரப்பெற்ற சித்தராக உள்ளார். அந்த அரிய சித்தியைப் பயன்படுத்தி காந்தாரி முதலிய அஸ்தினாபுர அரசிகள் படைக்கள நிகழ்வுகளை அறிந்துகொள்ள விழைகிறார்கள். ஏகாக்ஷர் இந்தச் சித்தியை தன் சொந்த சுயநலனுக்காகவோ அல்லது மற்றவர்களின் அற்ப நலன்களுக்காகவோ இதை பயன்படுத்தப்போவதில்லை. ஆனால் இந்த சித்தியில் பயனை அஸ்தினாபுரத்தின் தகுதியுடைய அரசியர் மட்டுமே பெற வேண்டும் என நினக்கிறார். அதற்காக அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.
“அரசி, அங்கே இருக்கும் கௌரவ அரசிகளில் எவர் இந்த பத்து நாட்களில் ஒருமுறையேனும் ஒரு துண்டேனும் இனிப்பு உண்டார்களோ அவர்கள் உடனே விலகிச்செல்ல வேண்டும்” என்றார் ஏகாக்ஷர்.
உண்மையில் தம் மனம் தன் துணைவனிடத்தில் வைத்து நினைவு முழுதும் போர்க்களத்தின் நிகழ்வுகள் மீது வைத்திருப்பவர்களே இந்த அரிய சித்தியைன் பயனைப்பெற தகுதியானவர்கள் என நினக்கிறார். அப்படி தன் துணைவனின் நலனன்றி வேறு எந்த சிந்தனையும் இல்லாதிருக்கும் அரசியரை தேர்ந்தெடுப்பதற்கு அவர் இனிப்பு உண்டிருப்பதை ஒரு அளவுகோலாக பயன்படுத்துகிறார். உடல் இருப்புக்கு காரணமான உணவை யாராலும் தவிர்த்திருக்க முடியாது. ஆனால் தம் நினைவு முழுதும் தன் துணைவன் நலத்தில் வைத்திருப்பவர்களுக்கு உணவில் சுவை தேவைப்பட்டிருக்காது. அல்லது எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் அந்த உணவின் சுவையை உணர்ந்திருக்கமாட்டார்கள். இனிப்பையே ஒருவேளை உண்டிருந்தாலும் அது இனிப்பென அவர்கள் அறியாதிருந்திருப்பர். ஆகவே இனிப்பை வேண்டி உண்டவர்கள், அல்லது தான் இனிப்பை உண்டோம் என அறிந்திருப்பவர்கள் இப்படி தன் துணை நலனுக்காக தன்னை முழுதளித்துக்கொண்டவர்களாக இருக்க முடியாது. இதுவே அவர்களை ஏகாஷர் வெளியேறச் சொல்வதன் காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
தண்டபாணி துரைவேல்