Sunday, December 3, 2017

குருதி



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

குந்தி பார்கவியுடன் அஸ்தினபுரி வருவதில் தொடங்கும் எழுதழல் அவர்கள் இருவரும் இந்திரப்பிரஸ்தம் திரும்புவதில் முடிகிறது.  குந்தி அம்பாதேவியின் ஆலயத்தில் வெள்ளாட்டை தன் கையால் பலி கொடுக்கிறாள்.  நிருதர் உடுக்கை மீட்டி அம்பையின் கதையைப் பாடுகிறார்.  கருவறை தழல் ஆகிறது.  இறுதி அத்தியாயதில் குந்தி “நிலம்வென்று கொடியும் முடியுமாக வாழ்வதே ஷத்ரிய வாழ்க்கை. அன்றி அது வாழ்வே அல்ல, அதைவிட இறப்பே பெருமை” என்கிறாள்.  தன் வஞ்சத்தை இளையவர்கள் மீது திணித்த கொடியவளாகத் தோன்றுகிறாள் குந்தி.  உபபாண்டவர்கள் எவருமே நிலத்தின் மீது பெரும் விழைவுகள் கொண்டவர்களாக இல்லை.  அம்பாதேவிக்கு வெள்ளாட்டை பலி கொடுத்த அவள் மாயைக்கு அவர்களை பலி கொடுக்கிறாள்.  "மானுடப்பலியே கொடுக்கப்பட்டிருக்கலாம்" என்று பார்கவி எண்ணுவது கொடுத்தாகி விட்டது என்று உணர்த்துகிறது. 

வெவ்வேறு தெய்வங்கள் வெறிகொண்டெழுந்து மறையும் ஆலயப்பூசகி குந்தி.  அவள் தனக்கேற்ற தெய்வங்களை தெரிவு செய்து கொண்டவள்.      

அஸ்தினபுரியில் நெருப்பைக் கண்டு அஞ்சுகிறாள் பார்கவி.  இந்திரப்பிரஸ்த்தில் நீருள் மூழ்குவதுபோல மூச்சடைகிறது அவளுக்கு.  அங்கு பகை எரிக்கும் இங்கு குடி முழுகும்.  “வஞ்சங்கள் பொருளற்றவை. ஆனால் மறுக்கப்பட்டோரின் வஞ்சங்களினூடாகவே அவர்களுக்கான உரிமைகள் ஈட்டப்படுகின்றன.” - குந்தியின் உறுதியான நிலைப்பாடு.

நிர்மித்ரன் மரணத்தைக் குறித்து அஞ்சுவது அச்சிறுவன் மீது மிகுந்த பரிவு உண்டாகிறது.  எனினும் புனைவுக்குள் புகுந்து அருவமாக நடமாடுவதின் எல்லைகள் காரணமாக அதற்குள் அவன் காக்கப்பட முடியாமல் போனாலும் இதோ இந்த அருவக் கரங்கள் பற்றி ஆடியின் இப்பால் குதித்துவிடு.....சாவு நிஜம் அல்ல என்று கூற விரும்புகிறேன்.  அவனைத் தவிர்த்து உபபாண்டவர் அனைவரும் பக்குவம் அடைந்தவர்கள், முற்றிலும் ஏற்பு உடையவர்கள்.  சதானீகன் தன் வாழ்வின் இனிய நாளை - கண்ணனின் பேரருளை கணமேனும் பருகும் வாய்ப்பைத் தரும் தருணத்தைப் பெறுகிறான்.  இங்கு எல்லாவற்றிற்கும் கண்ணன் தான் காரணம் என்று வீண் பழி போடுகிறோம் என்று தோன்றுகிறது.  மனிதர்கள் தங்கள் வஞ்சத்தால் ஆணவத்தால் அழிந்தால் அவன் என்ன செய்வான்? அவன் எப்போதும் தன் அருளால் அனைவரையும் அரவணைத்தவாறேதானே இருக்கிறான்?               


அன்புடன்
விக்ரம்
கோவை