மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார்,
தாங்கள் எழுதுகின்ற வெண்முரசு மகாபாரதம் படித்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் ஒரு சிறிய சந்தேகம்.
முதல் கனலில் பீஷ்மர் வியாசர் உரையாடலின் போது சத்திரிய தர்மத்திற்காக வியாசர் சிபி சக்கரவர்த்தி கதையை பீஷ்மருக்கு உரைப்பதாக உள்ளது.
ஆனால் பொதுவாக சிபிச் சக்கரவர்த்தியை சோதிப்பதற்காக அக்னி புறாவாகவும் இந்திரன் பருந்தாக வந்ததாகவுமே கதை உள்ளது.
நான் வேறு சில மகாபாரதத்தைப் படித்தால் அதில் சிபி கதையே இல்லை.
வெண்முரசு தங்கள் புனைவும் சேர்ந்துள்ளதா இல்லை புனைவில்லா வியாச மகாபாரதமா?
தயவுசெய்து விளக்கவும்.
(பின் குறிப்பு:வியாச மகாபாரதத்தை தேடிப் படிக்க இயலாது. ஏனென்றால் எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.நீங்கள் விளக்கினால்தான் உண்டு)
அன்புடன்
கஜேந்திரன்.
சென்னை.
அன்புள்ள கஜேந்திரன்
மகாபாரதம் மூலம் பயில சம்ஸ்கிருதம் அறிந்திருக்கவேண்டியதில்லை. அருட்செல்வபெபெரரசன் கங்கூலியின் ஆங்கில மொழியாக்கத்தை தமிழாக்கம் செய்கிறார். ஸ்ரீனிவாசாச்சாரியாரின் தமிழாக்கம் [ஸ்ரீ சக்ரா பப்ளிகேஷன் ] உள்ளது
சிபியின் கதை மகாபாரதத்தில் உள்ளது வனபர்வம் 197 ஆம் அத்தியாயம். இந்தக்கதை அன்றி சிபியின் வம்ச வரிசை உத்யோகபர்வம், வனபர்வம் 194ஆம் அத்தியாயம் ஆகிய இடங்களில் உள்ளது. சிபி வடக்கே உசிநார குடியில் யயாதியின் குடிவழியில் தோன்றியவன் என்கிரது மகாபாரதம்
இதுவே சிபியைப்பற்றிய பழைய குறிப்பு. அதன்பின்னர் ஜைன நூல்களில் இக்கதை உள்ளது. இக்கதை மகாபாரதத்தில் இருந்தோ ஜைனமரபிலிருந்தோ தமிழுக்கு வந்திருக்கலாம்
புறநாநூற்றில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப்புகழ்ந்து பாடும் நப்பசலையார் சிபியின் கதையைச் சொல்கிறார். சிபியின் மரபு வந்தவன் என்கிறார். கோவூர் கிழாரும் அவ்வண்னமே குறிப்பிடுகிறார். இக்கதைகளில் சிபியின் மரபு வந்தவன் என்ற மங்கலக்குறிப்பு மட்டுமே உள்ளது
வெண்முரசு மகாபாரதத்தை ஒட்டியே அமைந்துள்ளது. புனைவுமுழுமையாகும்பொருட்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது வேறுபுராணங்களிலிருந்தும் கதைகள் எடுத்தாளப்படுகின்றன
ஜெ