Sunday, July 26, 2020

வெண்முரசு சந்திப்புகள்



அன்புமிகு ஜெயமோகன் சார் அவர்களுக்கு,


வெண்முரசு முடிந்து விட்டது...


1. ஏழு ஆண்டுகளாக பின்னிரவு 2.30 மணிவரை கண் விழித்து படித்த ஒரு பேரனுபம் ; வெண்முரசு என்னுள் ஏற்படுத்திய தாக்கம் விவரிக்க இயலா ஒன்று.


2. இந்த 7 ஆண்டுகளில் பார்ப்பவரிடமில்லாம் வெண்முரசைப் பற்றிப் பேசினேன். ஒரு ஆயிரம் பேரிடமாவது வெண்முரசை பரிந்துரை செய்திருப்பேன்.



3. ஆனால், இங்கே மலேசிய சூழலில் பாதி தமிழர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. மேலும் வெண்முரசின் அடர்த்தியின் பொருட்டும் என் நண்பர்கள் பலர் ‘வெண்முரசு முழுமை வாசிப்பினை’ தொடர முடியவில்லை.


4. உங்கள் பெரும்பணியின் ஒரு சிறு அணிலாக, சென்றாண்டு ஏப்ரல் மாதம் என் நண்பர்களுக்காக ‘வெண்முரசு வகுப்பு’ ஒன்றினை நான் வசிக்கும் கிள்ளான் நகரில் ஏற்பாடு செய்து நடத்தினேன் ; 3 மணி நேரம் என 6 வாரங்கள். 60 பேர் கலந்துக் கொண்டனர்.


5. வெண்முரசு இன்னும் நிறைய பேரிடம் சேர வேண்டும். வாய்ப்பிருப்பின் அடுத்தாண்டும் இன்னொரு கலந்துரையாடல் வகுப்பினை நடத்தலாமென எண்ணியுள்ளேன்.உங்கள் ஆசி வேண்டும் ஆசானே



6. இறுதியாக, நன்றி பகர்ந்து உங்கள் பெரும்பணியை குறுக்க விரும்பவில்லை.
வெண்முரசு எனும் பெரும் காவியம் யாத்தளித்த உங்களின் திருக்கரங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்.

📌 வெண்முரசு வகுப்பின் சில படங்களை கீழே இணைத்துள்ளேன். அன்புடன்,
இராவணன்.
( மலேசியா )>
ravanan.m@gmail.com

அன்புள்ள ராவணன்

நீங்கள் தொடர்ந்து வெண்முரசு சந்திப்புகளை நடத்துவதை நேரில் சொன்னீர்கள். சைதன்யாவும் உங்களை சந்தித்துப் பயணம் செய்தபோது பேசியதைப்பற்றிச் சொன்னாள். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

இப்போது வெண்முரசு முடிந்துவிட்டது. அதைப்பற்றிய வகுப்புகள் பயனுள்ளதாகவே இருக்குமென நினைக்கிறேன்.

ஜெ