Thursday, July 16, 2020

வெண்முரசின் நிறைவு



அன்புள்ள ஆசிரியர்க்கு,  வணக்கம். 

வெண்முரசு நிறைவுபெற இருக்கிறது அச்செய்தி முதலில் உருவாக்கியது துயரத்தையும் இழப்புணர்வையும் தான். ஆறு வருடங்கள். நீண்ட பயணம்.  எனக்கு நன்றாக நினைவிக்கிறது தங்களின் பத்மவியூகம் வாசித்துவிட்டு என்னுடைய இளையவன் சொன்னான் " தமிழில் மகாபாரத்தை முழுமையாக இவர் எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று. இத்தனைக்கும் அவன் அதிகம் வாசிப்பவன் இல்லை. பிறகு ஒருநாள் வெண்முரசு பற்றி அறிவிப்பு வந்ததும் மகிழ்ந்து போனோம். 

முதலில் காத்திருந்து விலைக்கொடுத்து நூலாக வாங்கி மட்டுமே வாசிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் அதுவே அந்நூலுக்கு உரிய மரியாதையாக இருக்கும் என்று எண்ணிணேன். முதற்கனல் செம்பதிப்பில் உங்கள் கையெழுத்துடன் தபாலில் வந்தது. நாள் முழுக்க நூலை வருடிக்கொண்டே இருந்தேன். அடுத்த இரு நாவல்களும் அவ்வண்ணமே. காலம் அவ்வண்ணம் எண்ணியது போல் செல்வதில்லையே.. விலை கொடுத்து வாங்க முடியாதபடியான சூழலும் வந்தமைந்தது ஆனாலும் பிடிவாதமாக இருந்தேன். 

ஒரு கட்டத்தில் நான் அச்சம் ஒன்றை  அடைந்தேன் இனி ஒருபோதும் வாசிக்க முடியாமலே போய் விடுமோ என்று. நிலை மீண்ட பின் வாங்கி விடலாம் இப்போதைக்கு இணையத்தில் தொடரலாம் என்று எண்ணி மீண்டும் வாசிக்க துவங்கினேன் இன்று வரை நிலை அவ்வாறே தொடர்கிறது. 

நீலம் நாவலை துவங்கும் போது தளத்தில் நீர்க்கோலம் சென்றுக் கொண்டிருந்தது. மிக தீவிரமான நாட்கள் அவை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது வாசிப்பேன். ஒரு சுழல் போல அவ்வாசிப்பு என்னை உள்ளிழுத்துக் கொண்டது உண்மையில் அச்சுழல் என்னை வேண்டாதவற்றிலிருந்து காத்தருளியது. உச்சக்கட்ட மனக்கொந்தளிப்புகளால் ஆனவை அந்த தினங்கள். மனஅழுத்தம், பொருளாதார நெருக்கடி துவங்கியவை அனைத்திலும் தோல்வி என சென்றுக் கொண்டுயிருந்தது. தற்கொலை அல்லது முழு மனப்பிறழ்வு இரண்டில் ஒன்று நிச்சயமாகியிருந்தது ஆனால் மூன்றாவதாக ஒரு வழியை எனக்கு காட்டியது வெண்முரசு. 

நான் இதை நெஞ்சில் கை வைத்து கண்ணீர் மல்க எங்கும் உரக்க சொல்வேன். ஒவ்வொரு நாளும் ஒரு விதமான குழப்பங்களுடனும் கேள்விகளுடனும் தான் நான் வெண்முரசை வாசிக்க அமர்வேன். எங்கோ ஒரு வரியில் ஒரு சொல்லில் எனக்கான விடை இருக்கும் எத்தனையோ தருணங்களில் எனக்கான சொல்லை நான் கண்டடைந்ததும் விழிநீர் வார மனதில் உங்களை நிறுத்தி கை தொழுதுயிருக்கிறேன். இன்றும் எதுவும் மாறிவிடவில்லை எதையும் நான் வெல்லவில்லை எவரையும் தோற்கடிக்கவுமில்லை. எனில் நான் எதை பெற்றேன்? மகிழ்ந்து இருக்கிறேன். ஆம் மகிழ்ச்சி. வெறுமனே மகிழ்ந்திருக்கிறேன்.

 எப்போதும் இறுகியிருக்கும் மனமும் முகமும் மலர்ந்து இருக்கிறது. நெஞ்சை அழுத்தும் துயர் என்று ஏதுமில்லை. இதற்கு முன் இப்படி ஒரு விடுதலை உணர்வை நான் அடைந்ததேயில்லை. என் மனம் எப்போதுமே இருநிலையிலேயே இருந்து வந்து இருக்கிறது ஒன்று இயல்பாக உலகியலில் உலாவுவது மற்றொன்று கொந்தளிப்புடன் நாற்புறத்திலும் முட்டி கொள்வது தத்தளிப்புடன் ஐயங்களுடன் வாழ்வது. கொதிக்கும் திரவம் இருக்கும் கலன் கை தவறுதலாக கொட்டி விடுவது போல வெளியிலிருந்து ஏதாவது ஒன்று உள்ளே சென்று விடும்போது மொத்தமும் கலங்கி விடும். அந்நேரங்களில் என் நிலையிலிருந்து பல படிகள் நான் கீழே இறங்கிவிடுவேன் சிதறி பரந்து இருக்கும் எண்ணங்களை இழுத்து நீவி அடுக்கிக் கொள்ள நாட்களாகும் இன்று அவை இரண்டையும் தள்ளி நின்று யாரோடையதோ என பார்க்க முடிகிறது அதனால் பிழைகளை எளிதில் கண்டுகொள்கிறேன் எனது எல்லையை நன்கு உணர்ந்தும் இருக்கிறேன் முக்கியமாக செய்ய கூடாதவனவற்றை தெரிந்துமிருக்கிறேன். 

வெண்முரசில் இருந்து நான் அடைந்தவை எதையும் என்னால் முழுமையாக சொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று சொல்ல முடியும் நான் எதை அடைந்தேனோ அதைக் கொண்டு இப்பிறப்பை கடந்துவிடுவேன். மொத்த வாழ்வையும் வெண்முரசுக்கு முன் வெண்முரசுக்கு பின் என்று தான் சொல்ல வேண்டும். ஆசிரியரே, உங்களுக்கு நான் நன்றி சொல்ல போவதில்லை ஒன்றை மட்டும் வாழ்நாள் முழுக்க செய்வேன் எப்போதேல்லாம் தெய்வங்களை வணங்குகிறேனோ அப்போது எல்லாம் உங்கள் பாதங்களை நினைவில் நிறுத்தி வணங்குவேன்.


மிக்க அன்புடன்
தேவி.  
.