Thursday, July 30, 2020

எவருக்கானது?


அன்புள்ள ஜெ நலம்தானே,


முதலில் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.

எவரும் எண்ண துணியாத வெண்முரசை எடுத்து முடித்துக் காட்டி இருக்கிறீர்கள். பெருமகிழ்ச்சி.

சென்ற மாதம் எழுதி முடித்த வெண்முரசை நிறைவின்மையும் கொந்தளிப்பும் அடைந்து பிள்ளைத்தமிழ் உடன் நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்வில் பிள்ளைகளால் தான் மகிழ்ச்சியையும் நிறைவையும் பெற முடிகிறது போல.

கொற்றவையை படித்து முடித்தபின் இரு மாதங்களுக்கு வேறு எந்த புத்தகத்தையும் எடுக்கவில்லை. மற்றதில் வேறென்ன இருக்கமுடியும் என்ற வெறுமை.

காலம் சென்றது! முதற்கனல் கையிலும் கிடைத்தது. ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு எழுத்திலும் தன்னறத்தை காண்கிறேன். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னுள் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கின என்று சொன்னால் அது ஏதோ கடனுக்கு சொல்வது போலத்தான் இருக்கும். ஆனால் என்னால் மிக நிச்சயமாக உணர முடிகிறது. இப்பொழுது இருக்கும் நான், சில வருடங்களுக்கு முன்பு இருந்தவன் அல்ல. உங்களுக்கு நன்றி.

இப்பொழுது கேள்விக்கு வருவோம்,

வெண்முரசை படிக்க என் நண்பனை அழைத்தபோது, வெண்முரசை படிக்க ஆரம்பித்தால் அதிலுள்ள நாட்டத்தால் வேறு எதிலும் கவனம் செல்லாது, வேறு எந்த புத்தகத்தையும் படிக்க முடியாது. இந்த வேளையில், இந்த இளம் வயதில்(28) நான் படிக்க வேண்டிய, இலக்கியத்தை தாண்டிய பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை இன்று விட்டால் பிற்காலத்தில் படித்து பயன் இல்லை. பொருளாதார சிந்தனை மேம்பட, நிகழ்கால அறிவை செறிவாக்க இக்காலகட்டத்தில் அது தேவைப்படுகிறது என்கிறான். "நானும் இதில் உடன்படுகிறேன், ஆனால் இலக்கியங்களை முற்றாக மறுப்பது ஜன்னலோர காட்சிகள் அற்ற தொடர்வண்டிப் பயணத்தை போல ஆகிவிடும்" என்று சொன்னேன். [குறிப்பு: இலக்கியம் என்பதை நான் வெறும் காட்சிகள் என்று கூறவில்லை. ஒரு பதிலுக்காக அப்படி சொன்னேன்.]

ஆக ஒரு இலக்கிய புத்தகத்தையும், "Das Kapital" போன்ற புத்தகத்தையும் எடுத்துக்கொண்டால், எங்களை போன்றவர்களுக்கு முதல் தேர்வாக தாங்கள் கொடுப்பது எதுவாக இருக்கும்.

தங்கள் தேர்வை எதிர்பார்க்கிறேன். நன்றி.

-
மோகன்ராஜ் பொன்னம்பலம்
இராசிபுரம்

அன்புள்ள மோகன்

வெண்முரசு எவருக்கானது? வெறுமே பொழுதுபோக வாசிப்பவர்களுக்கானது அல்ல. போட்டித்தேர்வுகள் போன்றவற்றுக்கு தயார் செய்துகொள்பவர்களுக்கானது அல்ல. அரசியல் சார்ந்தே வாசிப்பவர்களுக்கானது அல்ல. சிக்கலான வடிவச்சோதனைகளை வாசிக்கும் கற்பனைகுறைவான வாசகர்களுக்குரியதும் அல்ல. 

அதை வாசிக்க மூன்று தகுதிகள் தேவை. ஒன்று, கற்பனையில் வாழ்க்கையை விரித்தெடுத்துக்கொள்ளும் திறமை இரண்டு, இந்திய வரலாறு மெய்யியல் தத்துவம் தொன்மவியல் சார்ந்த ஆர்வம். மூன்று ஆன்மிகமான ஒரு தேடல்.

மற்றவர்கள் வாசிக்காமலிருப்பதே நல்லது

ஜெ