Friday, July 17, 2020

மாயையை வேண்டுதல்

 


இன்று காலை ஒரு மந்திரம்போல சூழ்ந்துகொண்ட வரிகள் இவை.


இரண்டென்று எழுந்த மயக்கே,

இங்கு இன்று இவ்வண்ணமென்று அமைந்த சழக்கே,

இனியென்று ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே,

யானென்று எனதென்று எழுந்த பெருக்கே,

தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே,

மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே,

வாழ்வென்று சாவென்று காட்டும் பசப்பே,

காத்தருள்க என் மகவை!

கதிரை காத்தமைவது இருளின் பொறுப்பென்று உணர்க!


வழக்கமாக பிள்ளைத்தமிழ்களில் தெய்வங்களிடம் குழந்தைக்கான காப்பை கோருவதுண்டு. இதில் ஒன்றான பிரம்மத்தை இரண்டாக காட்டும் மாயையிடம்., இனி ஏது எதற்கு என்று துயர் வடிவாக வந்த காலத்திடம், யான் எனது என்று வந்த ஆணவத்திடம், தனித்து இருப்பதாகவும் உற்றார் சூழ்ந்திருப்பதாகவும் ஒரேசமயம் காட்டும் பந்தங்களிடம், மெய் என்றும் பொய் என்றும் காட்டும் அஞ்ஞானத்திடம்,வாழ்வும் சாவுமாக மாறிமாறி தெரியும் இருப்புணர்விடம் என் மகனை காத்துக்கொள்ளவேண்டுமென்று கேட்கிறாள். ஏனென்றால் அவன் தெய்வம். கதிரை இருட்டுதான் பாதுகாக்கவேண்டும் என்கிறாள்

 

வரதராஜன்