Thursday, July 30, 2020

வெண்முரசின் உடனடிபயன்

 

அன்புள்ள சார்,

வெண்முரசு முடியப்போகிறது என்ற பதட்டத்திலிருந்து, முடிந்தேவிட்டது என்னும் உண்மை புரிய சில நாட்கள் தேவைப்பட்டது. கப்பலின் நங்கூரம் தரையை தொடும்போது கடலின் ஆழம் தெரிவதுபோல, முடிந்தபின்னரே எவ்வளவு தூரம் உங்களுடன் ஓடி வந்திருக்கிறோம் என்பது மலைப்பாக இருக்கிறது. ஏழு வருடம் நீங்கள் முன்னால்  ஓட உங்களை ஒரு நாள் விடாமல் துரத்தி வந்த பெரும் வாசகர் படையும் இந்த  மாரத்தானில் சத்தம் இல்லாமல் பங்குபெற்று சாதனை புரிந்துள்ளது. 

சிவகாமியின் சபதம் தொடராக வந்த போது என் தந்தை அவற்றை பேப்பர் கட்டிங்காக எடுத்து வைத்ததையும் ஒரு இதழ் கூட தவறாமல் வாசித்ததையும் ஒருவித சாதனை புன்னகையோடு பகிர்த்துக்கொள்வார், ஆனால் அதை விட பல மடங்கு மகத்தான ஒரு படைப்பை ஏழு வருடம் பின்தொடர்ந்ததை, இப்போது உயிருடன் இருந்திருந்தால் அறிந்து மகிழ்ந்திருப்பார். போரும்  அமைதியும் வெளிவந்த காலத்திலேயே அதை வாசித்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

பெரும் முயற்சிகளையும், சாதனைகளையும்  சமகாலத்திலேயே அறிந்து அவற்றை பின்தொடர்தல்  என்பதும் ஒரு வரம் தான், ஏனென்றால் அவை தலைமுறைதோறும் நிகழ்வதில்லை,  என் தந்தைக்கு சிவகாமியின் சபதம் மட்டுமே இருந்தது (இது வெண்முரசுவுடனான ஒப்பீடல்ல, என் தந்தையின் அதிகபட்ச சாதனை) அந்த நான்கு  புத்தகங்களையும் பள்ளி படிக்கும்போதே ஒரே வாரத்தில் படித்து முடித்தேன் ஆனால் என் மகளிடம் சொல்வதற்கு மிக பிரமாண்டமான ஓன்று உள்ளது அவள் தலைமுறையில் நிகழ வாய்ப்பற்ற ஓன்று. இனி அதை புத்தகங்களாக வாங்கி அவளுக்காக சேர்க்கவேண்டும்.

வெண்முரசு எனக்கு என்ன அளித்தது என்று என்னால் இன்னும் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை அது உள்ளேயே இருந்து முளைக்கும்போது தான் தெரியும் போலும். உடனடியாக தெரிவது இரண்டு விஷயங்கள். ஒன்றை மேலே கூறிவிட்டேன். பைபிளில் வரும் இயேசுவின் மகத்தான போதனைகளில் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஓன்று உண்டு "தீர்ப்பிடாதீர்கள்". 
திட்டவட்டமாக எழுதப்பட்ட பத்து கட்டளைகளை கொண்ட ஒரு சமூகத்தில் அதை மீண்டும் முன்வைக்கும் இயேசு, விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை "நானும் தீர்ப்பிடேன்" என்று அனுப்பிவைக்கிறார். தீர்க்கமான அந்த பத்து கட்டளைகைளில்  ஒன்றை மீறியபோதுகூட. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் அவர்கள் கீழிறங்கும் இடமும், சறுக்கும் தருணங்களும் உண்டு என்பதை உணர்ந்து, உடனே கல்லெடுத்து எறியவரும் கும்பலிடம் "நீங்கள் பாவமற்றவர்கள் எனில் முதல் கல் எறியலாம்" என்று கூற நிச்சயமாக எளிய மனிதர்களால் முடியாது. 

மாபெரும் மனிதர்களை கொண்டே கட்டமைக்கபட்ட மகாபாரதத்தில், அவர்களின் மேன்மைக்கு நிகராகவே சரிவுகளும் உள்ளன, குற்றவுணர்வு ஒன்றே மானுடர்கள் செய்ய இயலும் பிழையீடு. கல்லெடுத்து எறியவரும் கும்பலில் ஒருவனாய் இருந்த எளியவனுக்கு கிடைத்த தரிசனமாகவே வெண்முரசை பார்க்கிறேன். காலம் செல்ல செல்ல இன்னும் பல தரிசனங்கள் எழுந்துவரலாம், முதல் தரிசனம் எப்போதுமே கிளர்ச்சி ஊட்டக்கூடியது. ஆசிரியருக்கு நன்றி.

அன்புடன்,
ஆல்வின் அமல்ராஜ்