Tuesday, July 21, 2020

மகாபாரத உரையாடல்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நலம் அறிய ஆவல்.

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இந்த நாட்களில் சக ஊழியர்களை, காப்பி சாப்பிடும், பிங்க் பாங்க் விளையாடும் இடம் என்று பார்த்து பேச முடியாது என்பதால், ஸ்லாக் (wathsApp equivalent) எனும் மெஸ்ஸெஞ்சரில் virtual coffee என்று யாரையாவது ஒருவரைத் தேர்வு செய்து வாரத்திற்கு ஒருமுறை பேச வைக்கும். தான் தனிமைப் படுத்தப்பட்டு விட்டோம், வெவ்வேறு விதமான எண்ணங்கள் வந்து மன உபாதைகளுக்கு யாரும் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக எங்கள் அலுவலகம் செய்திருக்கும் ஒரு ஏற்பாடு. 

இன்று எனது மேலாளருடன்  (அனி குஜாராத்தி, புனேவைச் சேர்ந்தவர்), அப்படிப்பட்ட சந்திப்பு இருந்தது. அலுவலகம் செல்லும் நாட்களில், நானும் அவரும் தற்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று, மதிய உணவின்போது , உரையாடுவோம். அவருக்கு, நான் தங்களது வாசகன் என்று நன்றாகவே தெரியும். இன்றைய உரையாடலில், வெண்முரசு முடிவுக்கு வருகிறது என்று சொன்னேன். ஏழு வருடங்கள், 26 புத்தகங்கள், 25,0000 பக்கங்களின் சாதனையையும், நவீன நாவல் வடிவில் எழுதப்பட்டுள்ள அதன் விபரங்களையும் சொன்னேன். கர்ணன் பற்றி எப்படி எழுதியிருக்கிறார் என்றார்? அது தனி புத்தகம் என்றேன். அந்த நூலை அனுப்பச் சொன்னார். நான் தளத்திலிருந்து வெய்யோன் பாகங்களையும், அமேசான் கிண்டில் வடிவத்தையும் அனுப்பி வைத்தேன். அவர் , முடிந்த அளவு , கூகுளின் உதவியுடன் மொழிபெயர்த்து வாசிக்கிறேன் என்றார்.  ரஞ்சித் தேசாய் மராத்தியில் எழுதியுள்ள ராதேயா அவருக்குப் பிடித்த நாவல் என்றார். எனக்கு வெண்முரசு வாசித்து துரியோதனன் கூட பிடித்தவன் ஆகி,  தனக்குச் சமமானவன் என்று  பீமனுடன் போர் புரிந்ததைச் சொன்னேன், அவரும் வீட்டில் , மகாபாரத கதைகளை கேட்டு வளர்ந்தவர். அவரது தாத்தா, துரியோதனனை ஆரம்ப கால வடிவங்களில், சுயோதன் என்றே அழைப்பார்கள், பிற்காலத்தில்தான் அவன் பெயர் துரியோதனன் என்று மாற்றப்பட்டுவிட்டது என்று சொல்வாராம். கிருஷ்ணனின் ரசிகன் என்றார். அவன் லீலைகளைச் சொல்லிப் பேசாமல் ஒரு நாளும் கடக்காது என்று நினவு கூர்ந்தார். சிசுபாலனின் 100 குற்றங்களை ஏற்றுக்கொண்டதையும், 101-வது குற்றத்தில்தான் தண்டிக்கப்பட்டான் என்று சொல்லி, ட்ரம்பும் 100 குற்றங்களை இன்னும் கடக்கவில்லை போலும் என்று குறுநகை புரிந்தார்.

அன்புடன்,
வ. சௌந்தரராஜன்

அன்புள்ள சௌந்தரராஜன்

மகாபாரதம் ஒரு வாழும் காவியம். நூலில் நவிலும் வடிவம் மட்டுமல்ல. வாய்மொழி மரபுகளில் நாட்டார் கதைகளில் பல்வேறு கலைவடிவங்களில் அது மறுபிறப்பெடுத்துக்கொண்டே இருக்கிறது இப்போதுகூட இந்நாவலில் எழுதப்பட்டவை குறைவு. எழுதப்படாத கதைகளே மிகுதி. உதாரணமாக, இதில் அல்லியர்ஜுனா கதை இல்லை

சொல்லிக்கொண்டே இருப்போம்

ஜெ