Friday, July 17, 2020

பெருமழை


அன்புள்ள ஆசிரியருக்கு,

நலமா? Corona காலமாக இல்லையென்றால் வெண்முரசின் இறுதி ஒரு விழாவில் முடிந்திருக்கும் , தங்களையும் நேரில் சந்தித்திருக்கும் வாய்ப்பும் அமைந்திருக்கும். எனினும் தங்களுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் தங்களின் அண்மையை எனக்கு உணரவைக்காமல் இருந்ததில்லை. அதனால் இக்கடிதமும் எனக்கு நிறைவையே அளிக்கிறது. 

வெண்முரசு பெருமழையென பெய்து நிறைத்துச் சென்றதன் பயனை நானும் அடைந்திருக்கிறேன். சிறிது காலத்திற்கு முன்னர் வரை எனக்கு தீவிர இலக்கிய வாசிப்பு அனுபவமோ, இந்திய ஞானம் குறித்த புரிதலோ சரியாக இருந்ததில்லை. இதனால் வெண்முரசு வாசிப்பின் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் தங்களின் தளத்தில் வந்த பல்வேறு கட்டுரைகளும், தங்களின் காணொளிகளும் மற்றும் 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்'  புத்தகமும் நாவலுள் செல்ல எனக்கு பேருதவி புரிந்தன. தற்பொழுது 'காண்டீபம்' வாசித்து வருகிறேன். 

இதுவரையிலான அனுபவத்தில் நான் உணர்ந்தது இந்நாவல் வரிசை என் ஆயுளுக்குமான வாசிப்பிற்கு உரியது. நீங்கள் 'திருக்குறள்' உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள் 'குறள் வாழ்வின் சில கணங்களில் தானாக எழுந்து வரும்' என்று. அதைப்போலவே வெண்முரசின் எண்ணற்ற வரிகள் பல சமயங்களில் எழுந்து அந்தந்த கணங்களை அர்த்தப்படுத்தியிருக்கின்றன.  மேலும் ஒவ்வொருமுறையும் சவாலான எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன்னரும்  வெண்முரசிற்கான தங்களின் உழைப்பை நினைத்துக்கொள்கிறேன். 

முடிவற்ற ஞானத்தை அளிக்கும் வெண்முரசிற்காக ஆசிரியருக்கு இச்சமயத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளை சொல்வதில் நிறைவுறுகிறேன். 

அன்புடன்,
சூர்ய பிரகாஷ்
சென்னை