Wednesday, July 29, 2020

கடத்தல்


அன்பு ஜெமோ சார்,

வெண்முரசு நாவல் நிரை நிறைவு பெற்றது.வெண்முரசின் தீவிர வாசகி எனக் கூறிக் கொள்வதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.மகாபாரதத்தின் மீதிருந்த ஈர்ப்பால் வெண்முரசுக்குள் நுழைந்தவள் நான்.காண்டீபம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் முதற் கனல் தொடங்கினேன். மொழியை விட தொன்மக் கதைகளும் அவற்றின்  உள்ளீடாகவிருந்த தத்துவங்களும் சவாலாக இருந்தன.மழைப்பாடலும், வண்ணக்கடலும் வாசிக்கும் தருணத்தில் வெண்முரசு எனும் கடலுக்குள் துமியாய் துளியாய்  உணர்ந்தேன்.‌

ஆனால் நீலம் என்னை வெளியே தள்ளியது. முயன்றும் நுழைய இயலவில்லை.நீலத்தை வாசிக்காமலே விட்டு பிராயாகை சென்றேன்.மீண்டும் கடலில் கலந்த உணர்வு. இந்திர நீலம்
வரும் போது நீலத்தை  வாசிக்க இயலுமென்றும் நீலம் வாசிக்காமல் இந்திரநீலம் வாசிப்பதில் பொருளில்லையென்றும் தோன்றியது.‌

இம்முறை நீலத்தை வாய்விட்டு சத்தமாக வாசிக்கத் தொடங்கினேன்.உள்ளிழுத்துக் கொண்டது. வீட்டிலுள்ளோர்  'என்ன நீலம் படிக்கிறியா' எனத் திரும்பிப் பார்த்து கூறுவர்.நீலம் முழுமையையும் வாய்விட்டே வாசித்து முடித்தேன். பன்னிருபடைக்களம் முடிக்கையில் தளத்திலும் எனக்கும் வெண்முரசில் இடைவெளி. சொல்வளர் காடு நிகழும் போது கூடவே பயணம். வெண்முரசு விவாதங்கள் தளம் அந்நாவலைத் தொடர இருளுக்குள் ஒளி விளக்காய் அமைந்தது.

கிராதம் வாசிப்பதில் மீண்டும் சவால். நினைவு தெரிந்த நாளாய் இருந்த அச்சத்தையும் அருவருப்பையும் கடக்காமல் நாவலைத் தொடர இயலாது என்பது தெளிந்தது. வாசிப்பு பெருஞ்சவாலாகிப் போனது இக்காலகட்டம்.கடந்தேன்.‌

வாழ்வின் கடின காலகட்டங்களை வெண்முரசைப் பற்றிக் கொண்டு கடந்திருக்கிறேன்.இனி நடக்க இயலுமா என கால்களில் சிக்கல் வந்த போதிலும் குறைந்தது ஆறு மாதத்திற்கு ஊன்றுகோலின்றி நடக்கவியலாத நிலையிலும் வெண்முரசு இல்லையென்றால் என்னவாகியிருப்பேன் தெரியவில்லை.‌

கிருஷ்ண ஜெயந்தி பூஜை முடிந்து நிறைவான நாளின் இரவில் விவாததளத்தில் முதல் கடிதமும் அதற்கான தங்கள் பதிலும் வந்தது.மிகுந்த உளஎழுச்சியான தருணமது.‌

நிகழுந்தோறும் கூட பயணித்தது பெரும்பேறு. பெருந்துயரிலிருந்து விடுவிக்கும் விடியல் தேவயானிக்கு நேரும் . தளத்தில் எழுச்சியான காலை பற்றிய பதிவு வரும். இமையத் தனிமையும் இமைக்கணக் காடும் ஒருங்கே முகிழ்ந்த தருணங்களை கூட பயணித்த வாசகரே அறிவர்.‌

வாழ்நாள் முழுமைக்கும் இதோ வெண்முரசு என்னிடமுள்ளது. வாசிக்குந் தோறும் பெறும் அறிதல்கள் தீரப் போவதேயில்லை.


இரா. சிவமீனாட்சி செல்லையா

 

அன்புள்ள சிவமீனாட்சி,

உண்மையில் எழுதியவனுக்கும் அவ்வாறு நீலம் கிராதம் சொல்வளர்காடு உட்பட பல நாவல்களில் நுழையவும் வெளியேறவும் சிக்கல் இருந்தது. அதில் கொஞ்சமேனும் வாசகர்களுக்கும் வேண்டுமே

ஜெ