Wednesday, July 22, 2020

பூர்ணிமை





இனிய ஜெயம் 

கடந்த வாரம் நண்பர்களுக்கு சில மருத்துவ உதவி வேண்டி அலைச்சல். மருத்துவமனை பணிகள் போல உளம் சோர செய்யும் பிறிதொன்றில்லை. மருத்துவமனை பணிகள் காரணமாக என்னை நானே ஒரு வாரம் தனிமை செய்து கொண்டேன். துல்லியமாக அந்த நாளில் ஜலதோஷம் பிடித்தது. இணைந்து மெல்லிய காய்ச்சல். நண்பா கடைசியா உன் முகத்தை வீடியோ காலில் காட்டு என்று நண்பர்களின் sms.  பொதுவாக இங்கே கடலாரில் ஒருவருக்கு தொற்று வருமா என்றெல்லாம் சந்தேகிக்க வேண்டாம். எப்போது என்று வேண்டுமானால் காத்திருக்கலாம். 

என்னளவில் கிளம்பி போனால் நான் இழக்க இங்கே ஏதும் இல்லை. வெண்முரசு வரிசையின் இறுதி நாவல் வாசிக்காமல் இந்த விளையாட்டு பாதியில் முடிந்து போகும் என்பது மட்டுமே ஒரே கவலை. காரணம் எந்த நிலையிலும் அதன் இறுதி அத்யாயம் வரை வாசிப்பேன் என்பது நான் உங்களுக்கு அளித்த சொல். சொல் வெல்லும். நிற்க.

இன்றைய நாள் என் வாழ்நாளின் இனிய நாள்.வெண் முரசு ஆசிரியருடன் ஏழு மணிநேரம். வித விதமான வாசகர்கள். கேள்விகள். கிட்டத்தட்ட பொதுவாக வெண்முரசு சார்ந்த ஒட்டுமொத்தத்தில் குறுக்கு வெட்டு தோற்றம் வழியே உங்கள் குரல் வழியே பயணம் செய்ய முடிந்தது .

தோழி சொல்ல கேட்டு தினமும் கதையை தொடரும் தமிழ் அறியா வாசகர், ஒன்பதாவது படிக்கும் மாணவ வாசகர், கருவிலே குழந்தைக்கு கதை என்று வாசித்த இல்லத்தரசிகள், தனது மகளுக்கு இந்த நாளில் ஆசி கேட்ட வாசகர் இன்னும் பலப் பல என்று நிறைவான நாள்.

பொதுவாக இந்த உள்ளிருப்பு நாட்களில் இந்த சூம் இணைய சந்திப்புகளை தவிர்த்தே வருகிறேன். எனக்கு இலக்கியம் அதன் அரட்டையும் சந்தோஷமும் எல்லாமும் நண்பர்களின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து நிகழ வேண்டும். ஐம்புலனால் அள்ள வேண்டிய இன்பம் அது. அவ்வாறே எனக்கு வேண்டும். இந்த இணையம் வழங்கும் virtuval reality உலக தொடர்பு ஒரு மாயை. பசித்த குழந்தை பாலூறும் முலைக்கண்ணை தேடும்போது, இந்தா இப்போதைக்கு இந்த கட்டைவிரலை சப்பிக்கொள் என்கிறது போலவே தோற்ற நிலை மெய்மை உலகு. 

இருப்பினும்.... 

வந்து youtube இல் நண்பர்களை கண்டேன். ஒரு மில்லி மீட்டர் சதுரத்தில் கேட்ஜட் கிருஷ்ணமூர்த்தி. லண்டன் கிரி. ஆஸ்டின் சௌந்தர். ஜெகன்நாத் ராஜு. நண்பர் பழனியை கண்ட கணம்...

ஊட்டி முகாமில், மாடியில் கண்ணாடி சாளரம் வழியே குளிர் பொழியும் நிலவை வேடிக்கை பார்த்தபடி நாங்கள் பேசிப் பேசியே இரவை புலரவைத்த கடந்த வருட முகாம் நாள் நினைவில் எழுந்து தொண்டை கட்டி கண் கலங்கி விட்டது. இன்றைய காணொளியை துண்டித்த கணம் மிக்க உவகையும் தனிமையின் மன சோர்வும் சமன் கண்ட உணர்வு ஒன்று மனதில் கவிகிறது. இதோ இந்த மின்னஞ்சல் வழியே அதையும் உங்கள் காலடியில் வைத்து விட்டு, அறைக்கு வெளியே காயும் நிலவின் கீழ் நிற்க, மாடிக்கு செல்லப் போகிறேன். பௌர்ணமி. குரு பௌர்ணமி. ரமணர், ராமகிருஷ்ணர், குரு நித்யா, வியாசர், ஜெயமோகன்.  மாயை வழியே எனினும் இன்று உங்களை கண்டது மகிழ்ச்சி. நன்றி ஜெ. நிலவும் இரவும் அழைக்கிறது. செல்கிறேன்.

கடலூர் சீனு