Sunday, July 19, 2020

வெண்முரசு நிறைவில்



பேரன்பிற்குரிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு

    நமது தளத்தில் வெண்முரசு-வின் கடைசி அத்தியாயம் "முதலாவிண்"
தற்பொழுது வெளியாகி கொண்டிருந்தாளும், தாங்கள் நாவலை முழுதும் எழுதி முடித்திருப்பதாகவே உணர்கிறேன். தங்களுக்கு என் நல்வாழ்த்துக்களை வாசகனாக நின்று பணிவுடன்  தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

26 நாவல், 25,000 பக்கம், 7 வருடங்கள் தொடர்ந்து எழுதி முடிக்கப்பட்ட நாவல் வெண்முரசு என்பது யாவருக்கும்  பிறமிப்பூட்டுவதுதான். இவ்வரலாற்று நிகழ்வில் நானும் ஒரு வாசகனாக தொடர்ந்து வாசித்து பங்கு பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு என்றும் பெருமிதத்திற்குறியது.

2017 முதல் வெண்முரசை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மகாபாரதப்போர் முடிந்ததும் (22. தீயின் எடை) உருவான வெறுமையின் காரணமாக அடுத்த 8  மாதங்களாக வெண்முரசே படிக்கவில்லை. சில கொரியா நாவல்களையும், புனைவு அல்லாத ஆக்கங்களையும் படித்து கொண்டிருந்தேன். நான் வெண்முரசு 30 நாவல்கள் - 30,000 பக்கங்களாக  விரியும் என்று நினைதிருந்ததால் இன்னும் கொஞ்சகாலம் களித்து மொத்தமாக வாசித்து கொள்ளலாம் என்றிருந்தேன்.

தாங்கள் கடைசி நாவலாக 26 ஆம் நாவலை அறிவித்தவுடன், வெண்முரசை மீண்டும் தொடர முடிவெடுத்தேன். தாங்கள் எழுதி முடிக்கும் பொழுதில் நானும் தங்களுடன் சேர்ந்து படித்து முடித்திருக்க வேண்டும் என்பதே என் ஆசானுக்கு நான் செய்யும் குறைந்தபட்ச கடமையாக இருக்க முடியும் என்று நினைத்தேன், அது என் அவாவும் கூடத்தான்.

கடந்த மூன்று வாரங்களில் வாரத்திற்கு ஒன்றாக மூன்று நாவல்களையும் (நீர்ச்சுடர், களிற்றுயானை நிறை, கல்பொரு சிறு நுரை) படித்து முடித்தேன். சரியாக இன்று இரவில்  (ஜூலை 11) முதலாவிண் 11 வது அத்தியாயதுடன் தங்களின் வரலாற்று நிகழ்வில் வந்து மீண்டும் இணைந்துள்ளேன், தங்களுடன் இருப்பேன் என்பதே உவகையையும் நிறைவையும் அளிப்பதாக உள்ளது. மீண்டும் என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கள் ஆசானுக்கு..

கடந்த குரு பூர்ணிமா அன்று இணைய உரையாடலில் கொரியா விலுறுந்து நானும் பங்கேற்றேன். கொரியா நேரப்படி இரவு 12:30 வரை நிகழ்வின் உள்ளே இருந்தேன், நேரம் காரணமாக கடைசி வரை என்னால் பங்கேற்க முடியவில்லை.  என்னில் தோன்றும் கேள்விகள் அனைத்திற்கும் தங்கள் தளத்தில் ஏற்கனவே பதில் இருப்பதால், உண்மையில் தங்களிடம் கேட்பதற்கு என்று என்னிடம் எந்த ஒரு புது கேள்வியும் இல்லை என்றே உணர்கிறேன்.

உதாரணமாக, மகாபாரதம் மண்ணிர்காக உறவுகளுக்குள் நடந்த போர் என்ற அளவிலே தான் முதலில் எனக்கு தெரிந்திருந்தது, நான்கு தொல் வேதத்திலிருந்து வேத முடிபு நோக்கிய காலப்பயணத்தில் இறைவனால் போடப்பட்ட அடித்தளமே இப்போர் என்று வெண்முரசில் இருந்து தான் உணர்ந்து கொண்டேன். இறைவன் உரைத்த தகுதியின் அடிப்படையில் என்ற வேத முடிபு ஏன் ஒரு தலைகீழ் மாற்றத்தை அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கையில்  உருவாக்கவில்லை என்ற கேள்வியே குரு பூர்ணிமா நிகழ்வில் நான் கேட்க எண்ணினேன். ஆனால் கடந்த வாரம் படித்த கல்பொருசிறுநுரை நாவலில் அதற்கான பதில் இருந்தது. அனைத்தும் இத்தலத்தில  உள்ளது தேடி படிக்க தான் வேண்டும்.

வெண்முரசு என்ற வரலாற்று நிகழ்வில் நானும் உடனிருந்தேன் என்று எனக்கு நானே சொல்லி பெருமை பட்டு கொள்ளவே இக்கடிதம். தொடர்ந்து எங்களுக்குள் நேற்மறை எண்ணங்களையே விதைத்து, வெறுப்பில்லாமல் சிந்திக்க பழகிகொடுக்கும் ஆசானின் பாதம் பணிகிறேன்.

தங்கள் நலம் விரும்பும்
பாண்டியன் சதீஷ்குமார்
தென் கொரியா