Saturday, July 25, 2020

ஒவ்வொருநாளும் காவியம்

 

அண்ணா,


ஒவ்வொரு நாளும் காலையில் காவியம் படிக்க வேண்டும் என்று வெண்முரசில் எங்கோ ஒரு வரி வரும். இத்தனை வருடங்களாய், எழுந்த முதல் வேலை என அன்றைய அத்தியாயத்தைப் படிப்பதில் விளைந்த மனநிறைவுக்கு வேறு நிகரில்லை. 


இந்த ஏழு வருடங்களில் என் வாழ்வில் பல ஏற்றங்களையும் தாழ்வுநிலைகளையும் கண்டு விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் அந்த நிகழ்வுகளோடு தொடர்பிருப்பது போல வெண்முரசு கதை நிகழ்வுகள் வருவது எனது மனப்பிரமைதான். இருப்பினும், இந்த எளிய வாழ்க்கையின் மீது ஒரு பெரும் காவியத்தின் நிழல் துளிகள் படிந்து செல்வது போன்ற பிரமையே எத்தனை மனஎழுச்சி தருவதாக இருந்தது!


நாளை முதல் வெண்முரசு புது அத்தியாயங்கள் இல்லை என்பது ஒரு வித படபடப்பை உருவாக்குகிறது. பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் விஷ்ணுபுரம் படிக்கத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.


இந்தச் சாதனையில் உங்களுக்கு உதவிய அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்; மேலும் புண்ணியம் ஈட்டிக் கொண்டவர்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.


உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.


நன்றியுடன்,


ஶ்ரீகாந்த் மீனாட்சி