Tuesday, May 21, 2019

புதுவை வெண்முரசு கூடுகை - மே 2019இம்மாத புதுவை வெண்முரசு கூடுகையில் கோதையின் கழிமுகத்தில் அமைந்த அரசப்பெருநகர் பகுதி குறித்து பேசினோம். மாலிருஞ்சோலை அழகர் கள்ளர் வேடந்தரித்து மதுரை பயணிக்கும் அழகோடு  உரு மாற்றம் பற்றி பேச்சு துவங்கியது. நெடுங்காலத்துக்கு குரு சீடன் என்னும் உறவின் முதல் அடையாளமாக திகழப்போகும் துரோணரின் வருகை, அத்தோடு சில திருக்குறள்களும் சேர்ந்து விவாதத்தை வேறு தளங்களுக்கு எடுத்துச்செள்கிறது.

சித்தம் மகத் அகங்காரம் என்னும் மானுட உயிர் இயல்பு, இயற்கை சொல்லும் தம்யத, தத்த, தயத்வ என்னும் சொற்களை மறுத்து மேலெழும் இடம் உணர்வெழுச்சியோடு அனைவராலும் வாசிக்கப்பட்டிருக்கிறது.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை

***

விடூகரிடம் துரோணர் கொண்டுள்ள உறவு, அதை உதறுவதன் உறுதி, தனக்கான அடையாளத்தை தேடும், தந்தையால் அங்கீகரிக்கப்படாத இளையவன் ஒருவனின் பயணத்துக்கான துவக்கம் எனலாம். இளிவரல்களை சித்தத்தில் ஏற்காத தன்மை, துரோணன் தான் என்னவாக ஆகப்போகிறோம் என்னும் திட சிந்தை அவனை பிறர் வணங்கும் இடத்தில் வைக்கிறது. ஆனால் தனது திறனால் தான் அடைந்த வணங்கத்தக்க அடையாளத்தை விடுத்து தனது தந்தையின் குலத்தவனாக தன்னை வைக்க அவர் செய்யும் முயற்சி அவரது ஆன்மாவை துயர் நிறைந்ததாக்குகிறது.


இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

***


விற்தொழில் வேதம் அவரைத்தன் மகவென கைக்கொண்ட போதும் தந்தையின் காயத்ரிக்கே தன்னை ஒப்புக்கொடுக்க எண்ணுகிறார் துரோணர். ஊழ் அவரது எண்ண அம்புகளை, இலக்கு பிழைப்பிக்கிறது. 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

***

தந்தை சொல் மீறியே காயத்ரியை அடைகிறார் துரோணர், இளிவரலை பற்றின்மையால் கடக்க எண்ணியே குருதட்சினைகளை தவிர்க்கிறார், குருவின் சொல்லை மீறியே துருபதனை சீடனாகக்கொள்கிறார், சரத்வான் தன்னையே உதாரணம் கூறியும் மனஅமைதி பெறவில்லை, அவரது வில் அளிக்கும் மெய்ம்மையைத்தாண்டி அவர் அடையத்துரத்தும் அடையாளமே அவரைத் தாளமுடியாத நெருப்பில் வீழச்செய்கிறது.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

***

அக்னிவேச குருகுலத்தில், துருபதனில் துரோணர் கண்டும் காணாமலும் விட்டு விட்ட வஞ்சமும் சூழ்ச்சியும் அவரை பெருங்குரோதத்தில் ஆழ்த்துகிறது.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலற் கொளல் 
****

எந்த பிராமண அடையாளத்தை வரிந்தாரோ அதை விடுத்து சத்ரிய நிலைக்குத்தள்ளும் குரோதம். தர்ப்பையை உதறி வடவாக்னியை அள்ளி நிறைத்துக்கொள்ளும் குரோதம். அதுவே அவரை எரித்து, அவரது சீடனை விலக்கம் கொள்ளச்செய்யும், பெரும்பழி அள்ளி தலையில் சூடச்செய்யும், தான் முடிந்த பின்னும் தன் மகனை மீளா நரகில் உழலச்செய்யும் குரோதம்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்