வெண்முரசில் மைந்தரைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் தந்தையர் ஒன்றும் புதிதல்ல. மைந்தருக்கும், தந்தையருக்குமான உறவுச் சிக்கல்களும், அவை வெளிப்படும் விதங்களும் ஏராளமாக வந்துள்ளன. கார்கடல் முழுக்க முழுக்க தந்தையரின் பார்வையில் விரியும் நாவல். மனம் துவளும், நெகிழும் கணங்களுக்கும் பஞ்சமில்லை. இருப்பினும் அவையாவற்றிலும் உச்சமென இருப்பது சல்லியருக்கும் கர்ணனுக்குமான உறவே. தன் மைந்தன் என அறிவிக்க இயலா ஒருவன். காரணம் அவன் தாய் இவரை அவ்வாறு ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சிறுமையுற்றாலும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று இருந்தவர். சகுனி சொல்வதைப்போல அரிய ஒன்றை இழந்து, விதவிதமான முகமூடிகளோடு வாழ்ந்து கொண்டிருந்தவர். இறுதி வரை சூழ இருப்பவர்களால் ஒரு இளிவரலோடேயே நடத்தப்படடவர். அதைத் தன் இயலாமைக்கு மாற்றெனக் கருதி மென்மேலும் பெருக்கிக் கொண்டவர். மைந்தனோடு எவ்விதத்திலும் நெருங்க இயலாது என ஒதுங்கியே இருந்தவர். அந்த விலக்கத்தையே அவன் மீதான வெறுப்பாக மாற்றி மேலும் விலகிக் கொண்டவர்.
தாய்க்கு கூட கொடையளித்தவன் தந்தைக்கு என்ன உதவி செய்துவிட இயலும்? தந்தை தன்னை சுமந்து சென்று, வழிநடத்தும் ஒரு தருணத்தைத் தவிர எதை அளித்திருந்தாலும் அத்தந்தை நிறைவடைய இயலுமா? ஒரு தந்தையாக இதைக் கூட அறியாதவனா கர்ணன். எனவே தான் அவரை தேர் தெளிக்க கோருகிறான். அது அவன் தந்தைக்கு அளிக்கும் கொடை. அதை உணர்ந்ததால் தான் அவரும் ஒப்புகிறார். அவன் வீழக்கூடாது என தவிக்கிறார். அவனது கொடையை, அது அவனை அழிக்கும் என்பதாலேயே பழிக்கிறார். இதைச் சொல்லியும் அவன் கேட்கப் போவதில்லை எனும் போது இறுதியாக, கையறு நிலையில் தானே அவன் குருதித் தந்தை எனக் கூறி கெஞ்சுகிறார். ஆயினும் அதை மறுதலிக்கும் கர்ணனை ஊழ் வேறுவிதமாக எதிர்க்கிறது. அக்கணத்தில் அவனது மைந்தனைக் கொல்கிறது பார்த்தனின் வாளி. அவனுள் வாழும் தந்தையைத் தொட்டெழுப்புகிறது. அவன் ஆழம் நிச்சயம் அவரை ஏற்றிருக்கும். மிக மிக உச்ச தருணம் இது.
தன் பெயர்மைந்தர்களுக்காகத் தவிக்கும் சல்யரின் சித்திரம் வெண்முரசு படைத்தளித்த உக்கிரமான ஒன்று எனத் தயங்காமல் சொல்வேன். உச்சத்துக்கு உச்சமாக 51ஆம் பகுதியின் இறுதி, இனியும் உன்னை கொலைக்களத்துக்கு கொண்டு செல்லும் பழியை இயற்ற மாட்டேன் எனக் கூறி விலகும் அவரிடம் தன்னை வாழ்த்திச் செல்லச் சொல்கிறான் கர்ணன். அவரது தவிப்பை, "உள்ளிருந்து எழும் ஒரு சொல் அவர் முகத்தை உருகச் செய்தது. உடலெங்கும் அது தவிப்பேனா வெளிப்பட்டது. ஆயினும் அதைக் கூறாமல் நடந்து படையின் பின்புறம் நோக்கிச் சென்றார்" என்கிறது வெண்முரசு. ஒரு கதகளி கண்டது போல இருந்தது இச்சித்திரம்.
வெண்முரசில் மிகவும் நெழ்வூட்டும் ஒரு தருணமாக அமையும் என எதிர்பார்த்தது கர்ணன் குந்தி சந்திப்பு தான். ஆனால் அது சற்று இயல்பான ஒன்றாகவே கடந்து சென்றது. முற்றிலும் எதிர்பாராதது சல்யருக்கும், கர்ணனுக்குமான இவ்வுரையாடல்கள்…. ஆயினும் இதுவே இயல்பும் கூட. என் தாயை விட தந்தையிடமே நான் என்றும் எண்ணி நெகிழும் கணங்கள் வாய்த்திருக்கின்றன!!!
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்