அன்புள்ள ஜெயமோகன் சார், இருட்கனியின் 27வது அத்தியாயத்தில் பாண்டவ, கௌரவப் படைகள் போர் புரியும் விதத்தை கூறியிருந்தது இப்போதுதான் மனதில் மீண்டும் தைத்தது.. நீங்கள் எப்போதும் கூறுவதுதான் " வாழ்வின் உச்ச கணங்கள்" . இதை அனைவருமே சில கணங்கள் அனுபவித்து இருப்போம் . ஆனால் அதை இப்போதுதான் இப்படி "நரம்புகள் அனைத்தும் உச்சத்தில் இறுகி நின்றிருக்க, ஒவ்வொரு கணமும் முழு வாழ்வென்று விரிய ஒவ்வொரு புலனும் வானுருக்கொண்டு அகல [வானுருக்கொண்டால் எப்படி அகலும் ?] கிடைத்ததையும் இழப்பதையும் தான் நடித்து மீள அங்கே அவர்கள் திகழ்ந்த அக்கணமே மானுடருக்கு தெய்வங்கள் மெய் அல்லது உண்மை என்று அருளியது" என வார்த்தையாய் வாசிக்கிறேன். ஆனால் அதற்கு பிறகு மானிடர் ஏன் உச்ச கணங்களுக்கு அஞ்சுகிறார்கள்................ .முதலில் இது உண்மையா என்று தோன்றியது ? அப்படி உச்சக கணங்களை மனித மனம் தவறவிடுமா என ? .ஆனால் என்னை சோதித்து பார்த்தபோது படீர் என பல்ப் எரிந்தது . சாதரணமாய் கூறினால் " புதிய மனிதர்களை தவிர்ப்பது, புதிய வேலையை தவிர்ப்பது, புதிய கருத்துகளை அறிய அல்லது ஆய்வு செய்ய மறுப்பது, புதிய உறவுகளை தவிர்ப்பது, வேலையில் சிலவற்றை தவிர்ப்பது" என நிறைய சொல்லமுடியும். உண்மையில் இதை எல்லாம் செய்ய போகும்போது முழு அட்டென்சன் தேவைபடுகிறது. குவிந்து இல்லாவிட்டால் இழப்பும் அதன் வலியும் மனக்கண் முன் வருவதினால் அதை நிறைய தவிர்த்து வந்து இருக்கிறேன். அதற்கு மிக முக்கியமாய் தேவை என்பது தாழ்வுணர்ச்சி இல்லாமை எனபது புரிந்தது. இங்கு "அவர்கள்" என்று தான் குறிப்பிடபடுகிறதே ஒழிய பிரித்து அரசன், இளையவன், படை வீரன் என்று கூறவில்லை. நாம் குவிந்து போரிட்டால் எதிரில் இருப்பவனும் மனம் குவிந்து போராடியே தீர வேண்டும். அவனுக்கும் சவால் இல்லாவிட்டால் என்ன இன்பம் இருக்கும்?. இதனால் தான் மொக்கை போடுறவர்களை, ஈடுபாடு இல்லாமல் எதையும் செய்பவர்களை கண்டால் தெறித்து ஓடிவிடுகின்றனர்.
அப்படி உச்சகட்டத்திற்கு பயப்படுபவர்கள் என்ன செய்வார்கள் என்பதும் வெண்முரசில் " சிறியவற்றை இயற்றுவார்கள், உள்ளத்தில் ஈடுபாடு தேவைப்படாத அன்றாடத்தை தன்னை சுற்றி பரப்பி [ சாப்பிடுவது, தூங்குவது, டைம் வச்சி வேலைக்கு செல்வது,...... என்று தன்னை முன்னிறுத்தி மட்டும் செய்யும் செயல்கள் என நினைக்கிறேன். ] அதில் திளைபார்கள் என்று வருகிறது. ஆனால் சலிப்பென்பது உச்சத்தை நாடும் உளஆழம் கொள்ளும் விழைவே என்றும் வருகிறது. ஆனால் இந்த வாழ்வில் 24மணி நேரத்திற்கு 12மணிநேரம் சலிப்பாய் தானே இருக்கிறது. உண்பதும் உறங்குவதும் கூட அன்றாட செயல் போல சலிப்பாய் இருக்கிறதே. இதுவும் நீங்கள் நிறைய தடவை கூறியதுதான் " உச்சங்களுக்காய் மட்டுமே மானுட உள்ளமும் உடலும் படைக்கபட்டுள்ளது. உச்சங்களிலேயே மானுடன் கொண்டுள்ள திறமைகள் அனைத்தும் பொருள் சூடுகின்றது . உச்சங்களில் வாழும் வாழ்கையை மட்டும்தான் மனிதர் வாழ்க்கை என கணக்கிடுகின்றனர் .நூறாண்டு வாழ்பவர்கள்கூட வாழ்ந்ததை ஒருசில நாட்களென்றே கருதிக்கொள்கிறார்கள்" என்று . "போர் உச்சம். ஏனென்றால் அதனருகே இறப்பு நின்றிருக்கிறது. ஊழ்கம் பிறிதொரு உச்சம். அதனருகே முடிவிலி நின்றிருக்கிறது. இறப்பு என்பது முடிவிலியின் இருட்தோற்றம்".இதை அறிந்தவன் புரிந்தவன் இறப்புக்கும் முடிவிலிக்கும் பயம் இல்லாமல் போரிட்டு கொண்டே இருக்கிறான். உயிர் பயம் உள்ளவன், இல்லை கண்டதுக்கு எல்லாம் பயப்படுகிறவன் சலிப்பில் உழல்கிறான் . நன்றி சார் .