அன்புள்ள ஜெயமோகன் சார்,
இருட்கனியின் 37ம் அத்தியாயத்தில் சுபாகு சார்வாகரை சந்திந்த நிகழ்ச்சியை நினைவு கூர்வது அந்த இடத்தில் பொருத்தமாய் இருந்தது. இந்த நிமிடம் வரை நான் அடுத்த ஜென்மம் என்றோ,இல்லை விண்ணுலகு என்றோ ஆழமாய் நம்பியதும் இல்லை,சிந்தித்ததும் இல்லை. அப்படி ஆழமாய் இன்றைய உலகில் யாராவது சிந்திக்கிறார்களா? என்றும் தெரியவில்லை. இன்று நான் சந்திக்கும் எழுபது முதியவர் கூட அடுத்த நிமிடம் பற்றிதான் பேசுகிறார். ஆனால் அதை கேட்டுகொண்டிருக்கும் போதே உள்ளே மனம் லேசாய் நலுங்குவது தெரிகிறது.அவர் மீது கடுப்பு வருகிறது. அதற்கான விடையும் கிடைத்தபாடில்லை.
சார்வாகர் " எதன் பொருட்டேனும் இந்த உலகை நீத்துவிடுங்கள் என்று உங்களுக்கு அறிவுறுத்துபவர்களே அந்த உலகை பற்றி கூறுகிறார்கள் ஆனால் அவ்வுலகு என்பது பொய். அணையும் உயிர் எழுவதில்லை. ஏனெனில் இந்த பூமி கடந்த புள்ளிக்கு திரும்பி வர பொழுதில்லை . நாம் வாழும் இந்த உலகே மெய்.இங்கிருந்து பெறுவன அனைத்தும் மெய்.இதற்கப்பால் மனிதன் அடைவதற்கும் பெறுவதற்கும் எதுவும் இல்லை" என்கிறார். இப்போது இது மட்டும்தான் அறுதி உண்மையோ என்று தோன்றுகிறது.ஆனால் இந்த மாதிரியான சிந்தனைகளும் இங்கிருந்துதான், இங்கு ரத்தமும் சதையுமாய் வாழ்ந்தவர்களிடம் இருந்து தான் தோன்றுகிறது. கண்டிப்பாய் அது விண்ணுலகில் இருந்து வருவது எல்லாம் கதைகளில் மட்டும்தாம் முடியும். பிறகு ஏன் அவர்கள் விண்ணுலகை உருவாக்கினார்கள் ? மரண பயமா? இல்லை நீடுழிகாலம் வாழவேண்டும் என்ற ஆசையா? .
சாவின் விளிம்பில் நின்று தத்தளிக்கும் சுபாகு தனது கடைசி கேள்வியான "அவ்வுலகு ஓன்று உண்டு என்பதை நம்புகிறீர்களா? என கர்ணனிடம் கேட்க, கர்ணன் மிகவும் சந்தோஷமான மூடில் இருக்கும் ஒருவனைப்போல் " அப்படி ஒண்ணு இல்லை என்றால் நாம் உருவாக்கவேண்டும்" என்கிறான். பிறகு சுபாகுவிடம் " நாம் பயிலும் நூல்கள்,கதைகள், நினைவுகள் வழியாய் சேகரிப்பது எல்லாம் எதற்காய் ? வாழும் வாழ்வை பொருளேற்றுவதற்காக.அனைத்தையும் தொடுத்து தொகுத்து உட்பொருள் ஒன்றை உருவாக்க முயல்வதற்காய் " என கூறும்போது கர்ணன் தான் சுபாகு சந்தித்த சார்வாகனோ என சந்தேகம் வந்தது.கர்ணன்
இன்னொரு பொருளில் " விண்ணிலோ பாதாளத்திலோ , நீத்தார் உலகோ ,தேவர் உலகோ இருப்பதை நம்மால் அறிய முடியாது. ஆனால் காவியம் இங்கிருக்கும் .இங்கிலாத அனைத்து பொருளும் அதில் இருக்கும் . இங்கு மரிந்தவர்கள் அங்கு வாழ்வார்கள்.நீயும் நானும் கூட அங்கு சென்று சேர்வோம் அங்கு ஒருவரை ஒருவர் கண்டு தழுவிகொள்வோம் என்பது எவ்வளவு உண்மை. புதிய திறப்புதான். பாண்டவர்களையும் கவ்ரவர்களையும் இளைய யாதவனையும் நினைக்காமல் [ அட்லீஸ்ட் வெண்முரசு வாசிக்கும் போதாவது] தழுவாமல் ஆறுவருடத்தில் ஒரு நாளும் கடந்து சென்றதில்லை. ஆனால் "மகாபாரதம்,ராமாயணம், பைபிள், அட்லஸ் ஸ்ரக்ட், மெயின் கொம்ப் என நிறைய காவியங்களை அல்லது விண்ணுலகை வாசித்து அதில் வாழ்பவர்களை தழுவுவதுதான் சத்திய சோதனையாய் இருக்கிறது.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்