இனிய ஜெயம்
இன்றைய அத்தியாயத்தில் நீலன் பார்த்தனை தேடும் சித்திரம் துணுக்குற வைத்தது. முதல் பிரிவு. மொத்தப் போர் வழியாகவும் மூவர் முற்றிலும் தனியனாக மாறும் சித்திரம் மெல்ல மெல்லத் திரண்டு வருகிறது.
முதலாமவன் பீமன். கணுக்கணுவாக இனித்த திரௌபதி இன்று பேய்க்கரும்பாகி நிற்கிறாள். உப்புக் கடலாக கரித்து நிற்கும் குந்தி. கல்லாகி நின்று விட்ட பைமி. வேறு என்ன செய்ய இருக்கிறது பீமனுக்கு? கடன் முடித்து வன வாழ்வு ஏகுவது தவிர ?
சொல்வளர் காட்டில் எழப்போகிறது நாராயண வேதம் என்று சூதன் முழங்குகையில் பார்த்தனின் கை தன்னியல்பாக காண்டீபம் வேண்டி நீள்கிறது. அந்த பார்த்தன் இன்று நீலனை தனியே விடுத்து எங்கோ சென்று தனிமையில் அமர்ந்திருக்கிறான். துரோணர் பீஷ்மர் அபிமன்யு அனைத்தையும் இழந்து விட்டு நிற்பவன், நீலன் இனி என் பொருட்டு வில்லெடு என கேட்ட பிறகு நிகழும் முதல் பிரிவு . இங்கே துவங்கும் பார்த்தனின் தனிமைப் பயணம் இனி எங்கே நிறைவு எய்தும் ?
அனைத்துக்கும் மேல் நீலன். இத்தனை குருதி சிந்தி அவன் நிலை நாட்ட வந்த சமத்துவ வேதம் அவனக்கு அளிப்பது என்ன ? தனிமயன்றி ? வித விதமான மனிதர்கள் அனுபவிக்கும் விதவிதமான துயரங்கள் அனைத்தும் களத்தில் அரங்கேறி விட்டது. இந்த அத்தனை மனிதர்களின் துயரங்களை கொண்டு தாழும் துலாவின் தட்டு நீலன் ஒருவனின் துயரம் மறு தட்டில் நிற்க சமன் கொள்கிறது. இங்கு மண் மறைந்தோர் அனைவரும் அவனுடயவரும் தானே ? யானையும் குதிரைகளும் உட்பட. இந்த மொத்த மாந்தத் திரளில் ஒருவர் ஒரே ஒருவர் கூட நீலனின் துயரை அரிதவர் என எவரும் இல்லை. மைந்தா தம்பி என்றெல்லாம் உறவு சொல்லி கதறி அழுத அத்தனை பேர் இடையேயும் செத்து குவிந்தவர்களில் நீலனின் உறவுகள் குறித்து கவலை கொண்டோர் எவர்? அவர்களின் பொருட்டு ஒற்றை ஆறுதல் சொல்லேனும் நீலன் வசம் உரைத்தவர் எவர்?
ஆம் இவ்வுலகின் ஒரே ஒரு தனியன் நீலன் மட்டுமே. பிரிதற்ற தனிமையின் வெறுமையின் பீடத்தில் அமர்ந்திர்க்கும் மெய்மை இத்தனை குருதி கொண்டு அடிக்கோடிட்டே தன்னை வெளிக்காட்ட முடிவு செய்திருக்கிறது. அதை அறிந்தவன் நீலன் மட்டுமே .அதற்க்கு நிகரனான தனிமையில் அமர்ந்திருப்வன் என்பதால் .
கடலூர் சீனு