Thursday, May 23, 2019

வண்ணக்கடல் வாசிப்பு
என் இனிய எழுத்தாளருக்கு வணக்கம்,

என்னுடைய வாழ்வில் மிக சிக்கலான இடத்தில் - என்னுடைய தனிப்பட்ட சுயநலன்களால் நானே இட்டுக்கொண்டு விட்டேன். நான் வெண்முரசு படிக்க வேண்டும் என்று எடுத்ததே - சோகங்களால், ரேகிரெட் களாலும் மூழ்கி இராமல் மனதே சமன் செய்வதற்கே. 

வெண்முரசு - வண்ணக்கடல் தொகுதியே படித்து முடித்ததும், நான் உடனே எழுதும் மடல். சென்ற இரு நாட்களாக நான் நீங்கள் உங்கள் கற்பனையில் சமைத்தளித்த உலகில் வாழ்ந்து மீண்டேன். எதோ சில தற்செயல் விளைவுகளால் உங்களே, உங்கள் எழுத்தை கணடைந்தேன், அங்கே என்னை நோக்கி செலுத்திய தெய்வங்களுக்கு நன்றி !

கர்ணன் தூரியோதனின் நண்பன் , என் அறத்தின் புதல்வனாக இருந்தும்- துரியோதனன் உடன் களமிறங்கினான் என்று யோசித்ததுண்டு. கர்ணன் அவமதிப்பு செய்யப்பட்டு நின்ற பொழுது, அவனே அறைவனைத்தவன் துரியோதனன் - அந்த பகுதியே படித்த பொழுது, என் அகம் திறந்து அழுதே விட்டேன் ! இந்த பகுதி முடிக்கும் பொழுது - என்னுடைய அகம், துரியோதனன் பேரன்பும், பெருங்குடையுமே மற்றும் கர்ணன் பேரரமுமே என் மனதில் எஞ்சுகிறது.

கர்ணன் பற்றி படிக்கும் பொழுது, என்னுடைய சுய நலனுக்காகவும், என்னுடைய நன்மைக்காகவும் நான் சொன்ன பொய்களையும், மற்றவர் முன் நான் செய்த virtue signalling செயல்களுக்காகவும் நான் கூசினேன். 

மனதில் நிறைய தாக்கங்கள், பாடங்கள் உங்கள் எழுத்தின் மூலம் அடைந்தேன், என்னையே மாற்றி அமைத்துக்கொள்ள முயற்சி செயகின்றேன். எதையும் என்னால் எழுத்தில் திரட்டி கோர்வையாக எழுத முடியவில்லை. என்னளவில் இது ஒரு கதை அல்ல - ஒரு அற நூல், ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் பதியும் வாறு திரட்ட அளிக்கப்பட்ட ஒரு பெரும்காப்பியம். இதை நீங்கள் திரட்டி அளித்ததற்கு ஒரு எளிய வாசகனின் நன்றிகள்.

நான் முதல் எழுதும் மடல் - மொழியாக்க செயலி இதற்கு முன் பயன்படுத்தியதில்லை பிழை இருப்பின் மன்னிக்கவும். 
கோபி

அன்புள்ள கோபி

வாழ்த்துக்கள். இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் வெண்முரசு போன்ற பெரிய நாவலை தொடர்ச்சியாக வாசிக்கமுடிவதேகூட ஒரு வகையான வெற்றிதான். கவனச்சிதைவு இல்லாமல் சிலமணிநேரங்கள் தொடர்ச்சியாக செலவழிக்க முடியாத சூழல் இன்றுள்ளது.

வெண்முரசு ஒரு சரடாக அறம், நெறி, தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றை சொல்லிச்செல்கிறது. இன்னொரு சரடாக காமகுரோதமோகங்களின் தொகையான வாழ்க்கையை. வெறும் உணர்ச்சிகளின் குதிப்பை. உள்ளுணர்வுகளால் இயக்கப்படும் மனிதர்களை. இரண்டு சரடுகளுக்கும் நடுவே உள்ள முரணியக்கமே அதனால் முன்வைக்கப்படுகிறது. எது ஒன்றை மட்டும் தொடர்ந்தாலும் பாதிச்சித்திரமே கிடைக்கும்.

ஜெ