Monday, May 13, 2019

துச்சாதன வதம்



இனிய ஜெயம் 

பீமன் துச்சாதனனை வதம் செய்யும் காட்சி. கனவில் வந்து துன்புறுத்தும் அளவு அமைந்து விட்டது.   இந்த நிலையை எய்துவோம் என உள்ளறிந்தே  அன்று கர்ணன் வசம் இறுதி விருந்தின் போது துச்சாதனன்  பேச, கர்ணன் வாயை மூடு என்று சொல்லி அந்த பேச்சை நிறுத்துகிறான்.  

துச்சாதனனை கொல்ல தேவையான அறம் உன் வசம் உண்டு, ஆனால் அதறகான ஆற்றல்  அதுவும் உன்னிடம் உண்டு என்று தருக்காதே அது என்னை மீறி நடைபெற வேண்டிய ஒன்று என கர்ணன் பீமனுக்கு அறிவுறுத்தும் செயலே, களத்தில் கர்ணன் பீமனை பந்தாடும் செயல். 

சர்வதனும் சுதசோமனும் பீமனை, தங்கள் தந்தையை உள்ளும் புறமும் அறிந்தவர்கள். அப்படி அறிதவர்களே பீமனின் குருதிக் குளியல் கண்டு பயந்து நடுங்கி மயங்கி விழுந்து விடுகிறார்கள். 

இக் குருதி பூசிக் குழல் முடியும் காளியே தங்கள் அன்னை என்பதைக் கண்டால் என்ன ஆவார்கள்? காண்பார்களா ? களம் மீள்வார்களா? 

பதைக்கவைக்கும், துன்புறுத்தும் சித்திரங்கள் கொண்ட அத்யாயங்கள் கொண்டு விரைகிறது இந்த இருட்கனி

கடலூர் சீனு