Tuesday, June 5, 2018

கைக்கலத்து நீர்



ஜெ,

கிருஷ்ணனுக்கும் சாத்யகியின் பிள்ளைகளுக்குமான உரையாடலின் தன்மை குறித்த கடிதங்களைக் கண்டேன். நானும் அதை யோசித்தேன்.

சாத்யகி அவர்களை தன் கைக்கலத்து நீரென நினைக்கிறான். அவன் தலைவனின் பாதங்களில், கொஞ்சம் கொஞ்சமாக தான் விரும்பும் போது, விரும்பிய அளவில் ஊற்றவே எண்ணுகிறான். ஆனால், உள்ளூர அது பெரு நதியொன்றின் சிறு குடத்து நீரென அறிந்திருக்கிறான். இந்தத் தன்மையால்தான் அவர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புகிறான். தான் பெரிதாக எண்ணும், வாழ்க்கையையே கொடுத்த பாண்டவர்களுக்கும், கிருஷ்ணனுக்கும் முன் கொஞ்சம் கொஞ்சமாக தன் கையிலிருந்து 'தான்' சமர்ப்பிப்பதாக எண்ணிக் கொள்கிறான், அந்தக் கடலுக்கு அவன் செய்யக் கூடிய திருமஞ்சனம் அது மட்டும்தான். அதனால்தான் காண்பவரிடத்திலெல்லாம், அனைவரையும் போருக்கு அனுப்பப் போகிறேன். மிகச்சிறியவனையும் கூட என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பது. 

ஆனால், அவன் பிள்ளைகள் அப்படி அவன் கலத்து நீராக இல்லாமல், கடலைக் கண்ட நதியென கிருஷ்ணனோடு இணைந்து கொண்டனர். அவன் வெறும் கலத்தோடு அங்கு தனியாக நிற்க நேர்கிறது. கர்ணனின் தந்தை அதிரதனைப் போலவேதான் சாத்யகியும். இன்று அவையில் கடந்த காலம் உரைக்கப்படும் போது அவன் மெய்ப்பு கொள்கிறான். ஆனால், பிள்ளைகளுக்கு அது பொருட்டாக இல்லை என்பது அவனை எரிச்சலூட்டுவது அதனால்தான். 

இளைய யாதவர், அவர்களை சிறுவர்களாகக் காணவில்லை. ஆகவே அவர்களோடு இணையாக விளையாடுகிறார். போருக்குப் போக வேண்டியதன் காரணத்தை விளக்குகிறார். அவருக்கு பாண்டவர்களுக்கும், அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லோருக்கும் இழப்புண்டு, ஆனால் அது அனைவரின் கடமையும் கூட என்று எண்ணுகிறார். அவர் அப்படித்தான் இருக்க முடியும். அவருக்கு குற்ற உணர்ச்சியெல்லாம் இல்லை. அவர்களை குழந்தைகளாகக் காண்பவருக்கே குற்ற உணர்ச்சியும் பெருமிதமும் எல்லாம். 

பெரிய மனிதர்களின் அருகிலோ, பெரிய விஷயங்களின் அருகிலோ பணிவோடு இருப்பவர்களுக்கு ஒரு மிதப்பும் பணிவும் இணைந்த உடல்மொழி இருக்கும். திருப்பதி பெருமாளுக்கு தங்க கவசம் அர்ப்பணிப்பவர், மாலை மரியாதையோடும், பூர்ண கும்பம், குடையோடும் அதைக் கையில் எடுத்துக் கொண்டு போகும் போது முகத்தில் நான் இதை கடவுளுக்கு வழங்குகிறேன் என்ற ஃபாவமும், அர்ப்பணிக்கிறேன் என்ற அசட்டு பணிவும் மாறி மாறி வெளிப்படும். அதுதான் சாத்யகியின் இந்த சித்திரம் என எனக்குத் தோன்றியது.  

இதோடு சேர்த்து பொருள் கொள்ளக் கூடிய இன்னொரு சித்திரம், தன் பிள்ளைகள் பத்து பேருமே தன்னைப் போலிருப்பதாக எண்ணிக் கொள்வது. உடனேயே அந்த நிரையில் தானும் நின்றால் தன் தந்தையைப் போலிருப்போம் என தோன்றிவிடுவதும். கலத்தையும் கடலையும் எண்ணிக் கொள்வதுதான் அது எனவும் தோன்றியது

ஏ.வி.மணிகண்டன்