Tuesday, July 7, 2020

இளைய யாதவரின் இறப்பு



அன்புள்ள ஜெ

நலம்தானே?

இளைய யாதவரின் இறப்பு ஏன் அப்படி எளிதாக நடந்தது? அதை விவாதத்திலேயே பலர் கேட்டார்கள். உண்மையில் அதுதானே கேள்வி. அவர் தெய்வமா என்றால் தெய்வமும்கூடத்தான். ஆனால் அவர் மைந்தர்கள் அவர் சொன்னதை கேட்கவில்லை. அவருடைய நகரம் அவர் கண்ணெதிரே அழிந்தது. அவருடைய வம்சமே மறைந்தது. அவர் ஒன்றுமே செய்யவில்லை.

மகாபாரத மூலத்தில் அவர் மைந்தர்களுக்கு உபதேசம் செய்வதாகவும் திருத்தமுயல்வதாகவும் அவர்கள் சொன்னபேச்சு கேட்கவில்லை என்பதனால் கோபம் கொள்வதாகவும் வருகிறது. மகாபாரத மூலம் என்பது கிருஷ்ணனை ஒருபக்கம் தெய்வம் என்று துதித்துக்கொண்டே சாமானியனாகவும் காட்டிக்கொண்டிருக்கும். தெய்வமென்னும் துதிகள் எல்லாம் பிற்காலத்தில் வந்தவை என்று தோன்றும்.

ஆனால் இங்கே வெண்முரசு ஆரம்பம் முதலே தெய்வாம்சம் கொண்டவராகவும் ஞானியாகவும் யோகியாகவும்தன அவரைக் காட்டுகிறது. ஆகவே அவரை இந்த அழிவை முன்னால் அறிந்து அதை தானே ஏற்றுக்கொண்டு முழுமையாக விலகிநிற்பவராகவே இந்நாவலில் காண்கிறோம்.

ஒரு சொல் கூட பேசாமல் அவர் அந்த அழிவை கேட்ட்க்க்கொண்டிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம். செய்யவில்லை. செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. அது விதி என அறிந்திருக்கிறார். அவருடைய சாவும் அதுபோலத்தான். ஒரு சருகுபோல அவர் உதிர்ந்து மறைகிறார். அது ஒரு பெரிய பிரபஞ்ச மர்மம் என நினைக்கிறேன்

சரவணக்குமார்