அன்பு ஜெ
"கல்விமுடிந்தது என்பதை முடிவுசெய்பவர் ஆசிரியர். அதன்பின் அவன் அவருக்கு அயலவன். மாணவனிடம் அவர் காணிக்கை கேட்பதே அவன் அயலவனாகிவிட்டான் என்பதனால்தான். அம்முடிவை நோக்கிச் செல்வதென்பது ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இடையே நிகழும் நுண்மையான சமர். தான் கற்றதென்ன என்பதை மாணவன் அறிவான். ஆகவே அவன் விடுபட விழைகிறான். அவன் மேலும் கற்கவேண்டியதென்ன என்று ஆசிரியரே அறிவார். அவர் அதை அவனுக்கு உணர்த்த விழைகிறார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதிப்பிடுகிறார்கள்.
இளவரசே, ஆசிரியனை மாணவன் அடைவதென்பது பேரன்பு கணம் தோறும் வளர்வது. பிரிவதென்பது வளரும் பெருவலியுடன் ஒவ்வொரு சரடாக வெட்டிக்கொள்வது. எத்தனை எழுச்சியுடன் அணுகினார்களோ அத்தனை துயர் மிக்கது அகல்வது. நான் அவரது ஒவ்வொரு சொல்லில் இருந்தும் என் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தேன். என் சொற்களில் அவர் தன்னை கண்டெடுத்துக்கொண்டிருந்தார். துலாமுள் நிலையழிந்தாடிக்கொண்டிருந்த நாட்கள்."
வெண்முரசு என்பது மானுடரை சிறுத்து காண்பிக்கும். இதில் கற்பவை தோறும் மானுடரை இயக்க அவ்விசை பேருருவம் கொள்கின்றன. கீழிருக்கும் இச்சொற்கள் வெண்முரசுக்கான சொற்கள்.
"நூல்கள் மானுடரை மிகச்சிறியவர்களாகவே காட்டுகின்றன. கற்கும்தோறும் மானுடர் சிறுத்துக்கொண்டேதான் செல்கிறார்கள். மானுடரை இயக்கும் அடிப்படை விசைகள் பேருருவம் கொள்கின்றன. அவ்விசைகளை வைத்து விளையாடும் விசும்பின் கரவுகள் தெரியவருகின்றன. அந்த நுண்மைகளின் வாயிலற்ற கோட்டை முன் நம்மைக் கொண்டுவிட்டுவிட்டு நூல்கள் திரும்பிவிடுகின்றன. நூலறிந்தவன் அங்கே திகைத்து நின்று அழிகிறான்"
வெண்முரசு முடிந்தவுடன் ஒரு பெருவலியை அகல்வதின் துயரை கடக்க அதே எழுச்சியுடன் உங்கள் கதைகளை அணுகுகிறேன். நாங்கள் கற்க விழைவதனைத்தும் அள்ளி அள்ளி கொடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும் ஒவ்வொரு கற்றல் நிதழ்கின்றன. உங்களிடம் இருந்து இனி விலகிப்போகவே முடியாது. வெண்முரசு மூலம் நாளும் உங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில்தான் இருப்போம்.
வெண்முரசு எனும் பெரும் படைப்பை கொடுத்த உங்களுக்கு என் பனிவான வணக்கம். உங்கள் ஆசியை என்றும் விழையும் வாசகன்.
அன்புடன்
ரா. பாலசுந்தர்