Tuesday, July 4, 2017

பகல்கனவு. (நீர்க்கோலம்-12)


   இரு தரப்புக்கிடையிலான ஒரு விளையாட்டுப்போட்டியைக் காண்கையில் நாம் ஏதாவது ஒரு தரப்பின் சார்பாக நின்று அது  வெற்றியடைகையில் மகிழ்ந்து அல்லது தோல்வியுறுகையில் வருத்தப்படுபவராக இருக்கிறோம்.   அப்படியல்லாமல் இருதரப்புக்கும் பொதுவாக இருந்துகொண்டு சார்பற்று ஒரு போட்டியைக் காண்பது இயல்பாக நடப்பதில்லை.  இதைப்போன்றே ஒரு  கதையைப்படிக்கையில் நாம் பெரும்பாலும் அதில் ஒரு  கதை நாயகரின் தரப்பாக நின்று சிந்தித்து அவன் இன்ப துன்பங்ககளை நம் இன்ப துன்பமாக கருதி     அவன் உறவுகளை நம் உறவுகளாகவும் அவன் எதிரிகளைநம் எதிரிகளாகவும் அறிந்து அவன் உள உணர்வுகளை அப்படியே நாமும் அனுபவிக்கிறோம்.      பெரும்பாலான கதைகளில் கதாசிரியரே ஒரு நாயகனின் தரப்பில் நின்று எழுதியிருப்பார்.  கதை நாயகனைத்தவிர  மற்ற அனைவரின் தரப்புகள் எவையும் போதுமான அளவில்  கூறப்பட்டிருக்காது. அவர்கள் உள உணர்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே சொல்லப்பட்டிருக்கும். அவர்கள் நம் கதை நாயகர்க்கு செய்யும்  உதவிகள், அல்லது இன்னல்கள் ஆகியவற்றுக்கான பெரிதான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்காது.  அல்லது வெகு எளியதாக அவர்கள் நல்லவர்கள், அல்லது கெட்டவர்கள் என சித்தரிக்கப்பட்டு அதுவே அவர்கள்  செயலுக்கான  காரணங்களாக சொல்லப்பட்டிருக்கும்.  ஆனால் கதைக்களனை  நிர்ணயிப்பதில் அதை மேற்கொண்டு நடத்திச்செல்வதில் கதையில்  திருப்பங்கள்  உருவாகுகையில் என அனைத்து விஷயங்களிலும் இந்த மற்றவர்களின் செயல்கள் ஆதாரமானதாக இருக்கும்.  இந்த மற்றவர்களின் செயல்களுக்கு உள்ளுறையும் காரணம் சொல்லப்படாமல் விடப்படுகையில் அக்கதை முழுமையடைவதில்லை.    

   ஒரு சிறந்த நாவலில் பல சிறிய பாத்திரங்கள் இருக்கலாம். ஆனால் முழுமையடையாத பாத்திரம் இருப்பதில்லை. ஒவ்வொரு கதாப்  பாத்திரத்தின் செயலுக்குப் பிண்ணணியிலான உளவியல் உணர்த்தப்பட்டிருக்கும்.  அப்போது  அந்தப் கதாபாத்திரத்தின் அனுபத்தை நாமும் பெறுகிறோம். நம்முடைய குறைகளை, சிறுமைகளை, அசட்டுத்தனங்களை, நமக்குக்கூட தெரியாமல் நம் மன ஆழத்தில் ஒளித்து வைத்திருக்கும் கீழ்மைக்குணங்களை நாம் அறிந்துகொள்ள இந்தச் சிறிய கதாபாத்திரங்கள் உதவுபவையாக ஆகின்றன. மேலான குணங்களை நாம அடைவதிற்கு இணையாக  நம் கீழ்மையான குணங்களை கண்டறிந்து நீக்கிக்கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

     வெண்முரசின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும்  முழுமையாக விவரிக்கப்படுவதால்  அந்தந்த கதாப்பாத்திரத்தின் அனுபவத்தையும் நம் அடைகிறோம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் நம்முடைய ஏதாவது  சில கூறுகளை கண்டு கொள்கிறோம்.  இப்பெருங் காப்பியத்தில்  நாம் ஏதாவது ஒருதரப்பில் மட்டும் நின்று சிந்திப்பதில்லை.  பாண்டவர் தரப்பாக மட்டும் நாம் இருக்காமல், கௌரவர் தரப்பிலும் நின்று அவர்களின் செயல்களுக்கான முகாந்திரங்களை அறிந்துகொள்கிறோம்.  அவர்கள் பலவிதச் சூழல் மட்டும் உளவியல் சிக்கல்களால் கீழிறங்குகையில் அவர்களைப் புரிந்துகொள்கிறோம்.  அப்படிப்பெறும் அறிவு   நம்மைச்சுற்றி இருப்பவர்களின் நடத்தையை புரிந்துகொள்ள அவர்கள் ஒரு சிக்கலில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என சற்று கணிக்க  நமக்கு உதவுகிறது. அனைவற்றுக்கும் மேலாக நம்மையே நாம் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.  நூற்றுக்கணக்கான கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்ட ஒரு அலங்காரச் சுவற்றின் முன் நிற்கையில் அவை அனைத்திலும் நம் முகத்தின் பல்வேறு கோணங்கள்  தெரிவதைப்போல வெண்முரசின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும்  நம்மில் ஏதாவது கூறு பிரதிபலிக்கிறது.  புஷ்கரனின் பாத்திரம் ஒரு பெயரளவில் இருந்திருந்தாலும்  கதையின் புரிதலை பாதித்திருக்காது.  ஆனாலும்  புஷ்கரன் பாத்திரம் மிக நுண்மையாக வடித்தெடுக்கப்படுகிறது. அவன் உளவியல் எப்படி உருமாறி வளர்கிறது என்பதை விளக்கமாகக் கூறப்படுகிறது. அவன் எதிர் கதாப்பாத்திரம். இருந்தபோதிலும் நம்மால்  அவனிடம் நம் உளக்கூறுகளை அடையாளம் காண முடிகிறது.  எப்படி சிறு ஐயங்கள்,  பொறாமை, மற்றவர் சொற்களின் உள்ளுறையும் வஞ்சம் அறியாமல் செவிகொடுத்தல் போன்றவற்றின்   காரணமாக  நாம் தவறான கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறோம்,  தவறான முடிவுகளை மேற்கொள்கிறோம், நம்மை அறியாமலேயே தவறான பாதையில் செல்கிறோம் என்பதை  இதைப்போன்ற நுணுக்கமான பாத்திர உருவாக்கங்களில் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.  
   
    புஷ்கரன் காணும் பகல் கனவைற்றி  படிக்கையில் இதை முதலிலேயே அறிந்ததைபோல இருந்தது.  அப்புறம் தான் நினைவில் வந்தது.  என் சிறு பிராயங்களில் இதைப்போன்ற பகல் கனவுகளில் மூழ்கிவிடும் பழக்கம் இருந்தது நினைவுக்கு வருகிறது.  பகல் கனவுகள் ஒரு வித போதையை தருபவை.  பகல் கனவுகள் நமக்கான உலகத்தை நாம் உருவகித்துக்கொண்டு நாம் மட்டுமே கதாநாயகனானாக  உலவும் இடம் அவை. வீர தீரச் செயல்கள் புரிந்து,  பெரும் நாசத்திலிருந்து  தேசத்தை காப்பாற்றுபவனாக, பேரழகுப் பெண் ஒருத்தி உயிரினும் பெரிதாக  நேசிக்கும் காதலனாக,  தீய சக்திகளிடம் தனியனாக நின்று போரிட்டு மனித குலத்தைக் காப்பாற்றுபவனாக என  எத்தனை எத்தனை கற்பனைகள்.  வெண்முரசு இந்த எண்ணங்களில் ஒருவர் கொள்ளும் இனிமையை புஷ்கரன் வாயிலாக எடுத்துரைக்கிறது.
இனிய வெம்மையான எண்ணங்கள். எத்தனை இனிமையான எண்ணங்களிவை! இவையெல்லாம் நிகழுமா? இவற்றில் ஒரு துளி நிகழ்ந்தால்கூட வாழ்க்கை எத்தனை பொருளுள்ளது. காமம் நிறைந்த எண்ணங்களில்கூட அவன் அடையாத அகக்கிளர்ச்சி.  அவனால் படுத்திருக்கமுடியவில்லை. நெஞ்சில் குருதி நிறைந்து கொப்பளித்தது. எழுந்து நெஞ்சிலும் தலையிலும் அறைந்து ஓலமிடவேண்டும்போலத் தோன்றியது. கைகளை விரித்தபடி ஓடி சுற்றிவர வேண்டும். தலையை மரங்களில் முட்டி மோதி உடைக்க வேண்டும்.

  நானும் இதைப்போன்று  கற்பனைகளில்  மணிக்கணக்காக நீடித்து இருந்தது  எல்லாம் நினைவுக்கு வருகிறது.அவற்றில் பெரும்பாலும் உயிர்த் தியாகம் செய்பவனாக இருப்பேன். எனக்காக இவ்வுலகமே கண்ணீர் சிந்தி கதறி அழுவதாக  கற்பனை செய்யும்போது என்னுடைய கண்களிலும் உண்மையிலேயே கண்ணீர் பெருகி இருக்கிறது.  பதின்பருவத்தில்  இத்தகைய பகல் கனவுகளில் மூழ்கி  நேரத்தை கடத்திய நாட்களை புஷ்கரனின் கதாபாத்திரம் இப்போது நினைவு கூறச்செய்துவிட்டது.  புஷ்கரன் தன் கற்பனையில் அடையும் பெருமைகளை மெய்யாக அடைந்துவிடுவோம் என்பது பொய்யாகி வெறும் கனவாகி மறையும்போது   அவன் மேல் எனக்கு பரிதாபம்தான்  தோன்றுகிறது.  அதற்கு காரணம் அவனின் பாத்திர வார்ப்பில்  தென்படும் இந்த என் பதின்பருவ கூறாகக்கூட இருக்கலாம்.