Friday, July 28, 2017

புஷ்கரன் காட்டியது


அன்புள்ள மது,

"மாலினி ஷத்ரியப்பெண், முற்றிலும் அழிக்கப் பார்க்கிறாள். புஷ்கரனின் கீழ்மைக்கு நடுவிலும் தான்  காளகக் குடியை சேர்ந்தவன் என்று நிருபிக்கிறான். முற்றிலும் அழிக்காமல் சற்று எஞ்ச விடுகிறான்." - நல்ல அவதானிப்பு.-
குடி
புஷ்கரன் காட்டியது நிஷாதர்களின் இயல்பு தான். ஆயினும் இத்தகைய நிகழ்வுகள் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. புஷ்கரன் இந்திர சேனனையும், இந்திர சேனையையும் வருண விலக்கில் இருந்து விடுவித்தது அக்பரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நினைவூட்டுகிறது. ஹுமாயுனை ஷேர்ஷா துரத்தி துரத்தி அடித்த சமயம். அதனுடன் கூடவே ஹுமாயுனின் தம்பியர் அஸ்காரி மிர்சாவும், காம்ரான் மிர்சாவும் அரியணைக்குப் போட்டியாக களமிறங்குகின்றனர். ஷேர்ஷாவை எதிர்க்க அண்ணனுக்கு படையுதவி செய்ய வேண்டிய காம்ரான் டெல்லி போனால் என்ன காபூல் இருக்கிறது என காபுலுக்கு போக, எங்கே ஒரு வேளை அண்ணன் வென்று விட்டால் என்ன செய்வது என்று எண்ணி எதற்கும் அவரை கொன்று வைப்போம் என மற்றொரு தம்பி அஸ்காரி தலைமையில் ஓர் படையை அனுப்பி துரத்தத்துவங்குகிறான். ஹுமாயுன் காந்தகார் அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்த டிசம்பர் மாதம். தம்பியின் படை வருகையின் நோக்கம் அறிந்த அவர் தப்பிச் செல்ல முடிவெடுக்கிறார். இள அக்பர் இன்னும் எழுந்து நடக்கத் துவங்காத பருவம். தப்பிக்க ஒரே வழி பகலில் வெம்மையும், இரவில் நடுக்கும் குளிரும் கொண்ட வன்பாலையைக் கடந்து பெர்சியாவுக்குச் செல்வது தான். 14 மாதமேயான அக்பர் இப்பயணத்தைத் தாங்க இயலாது எனக் கண்ட ஹுமாயுன் அக்பரை காந்தகாருக்கு வெளியே அமைத்திருந்த அந்த குடிலுக்குள் விட்டுச் செல்கிறார். ஹுமாயூன் நீங்கிய பிறகு அவ்விடத்துக்கு வந்து சேரும் அஸ்காரி ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக குழந்தை அக்பரைக் கொல்லாமல் விட்டதோடு, அவரை எடுத்துச் சென்று காபுலில் வைத்து வளர்க்கவும் செய்தார். அந்த நீலக்குருவி எப்படியோ தப்பிவிடுகிறது!!!

ஆனால் மாலினி காட்டியது ஷாத்ரம் அல்ல. அந்த ஒட்டுமொத்தமே கீழ்மை மட்டுமே. இயலாதோருக்கு இருக்கும் கீழ்மை, அழுக்காற்றின் கீழ்மை, அவளுடையது தமயந்தியாக ஆக இயலாமையின் ஆங்காரம் மட்டுமே!! ஷாத்ரம் முற்றழிக்கச் செய்வது, வஞ்சத்தின் முளையைக் கொல்வது. கிருஷ்ணன் காண்டவ வன எரிப்பின் போது தட்சனின் அப்போது தான் பிறந்த மகனான அஸ்வசேனனைக் கொல்லச் சொல்லியதே ஷாத்ரம். இங்கே மாலினி வேண்டுவது நள மைந்தரை அடிமை கொள்வதால் நளனும், தமயந்தியும் அடையும் தலைகுனிவை. அதன் மூலமாக நிகழக் கூடுமென எண்ணும் தன் ஆணவ நிறைவை!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்