Tuesday, July 11, 2017

திரைக்கொட்டகையின் வெண்திரை (நீர்க்கோலம் -27)





கீற்றுக்கொட்டகையில் மணலில் அமர்ந்து திரைப்படம் பார்த்திருக்கிறேன். பின்னர் அவை இல்லாமல் போய் அனைத்தும் கல் கட்டிடங்களாக மாறிவிட்டன. இப்போது பேரங்காடியின் அங்கமாக இருக்கும் அரங்குகளுக்கு செல்லும்போது அரண்மனைக்குள் நுழைவதைப்போன்ற அனுபவத்தை அளிக்கின்றன. அரங்குகளின் அமைப்புகள் பெரிதளவு மாறியிருக்கின்றன என்றாலும் அன்றிலிருந்து இன்றுவரை படம் காட்சிப்படுத்தப்படும் திரை வெண்மையாகத்தான் இருக்கிறது. அந்தத் திரை வண்ணம் கொண்டோ சித்திர வடிவங்கள் வரையப்பட்டோ அது அலங்கரிக்கப்படவில்லை. அது எதனால் என்று எளிதில் நாம் புரிந்துகொள்ளக்கூடியதே. காட்சிப்படுத்தப்படும் திரை வெண்மையாக இல்லத போது அதன் வண்னம் திரைப்படத்தின் தன்மையை மாற்றிவிடும் திரையில் வேறு வடிவங்கள் இருந்தால் படத்தின் காட்சியோடு கலந்து காட்சியைக் கெடுத்துவிடும்.

ஆகவே திரை எவ்வித வண்ணங்கள் சித்திரங்களும் இல்லாமல் முழு வெண்மையாக இருந்தால்தான் திரைப்படத்தின் காட்சி சிதையாமல் முழுமையாக நாம் காண முடியும்.

ஒருவர் நடிக்கும்போது அவர் தன் உடலில் ஒரு கதாப்பாத்திரத்தை பிரதிபலிக்கச்செய்கிறார். அவர் நடை உடை பாவனைகளை அந்த பாத்திரத்திற்கேற்ப அமைத்துக்கொள்கிறார். இது ஒன்றும் எளிய வேலையில்லை. ஏனென்றால் நாம் பிறந்ததிலிருந்து நாம் நமக்கென்று பாவனைகளை உருவாக்கிக்கொள்கிறோம். பேசும் முறை, தொனி, போன்றவற்றை கொண்டிருக்கிறோம். அதனால் தான் தொலைபேசியில் ஒருவர் பேசும்போது அவர் குரலை வைத்தே அவர் யார் என நம்மால் யூகிக்க முடிகிறது. அதைப்போல் ஒருவர் தூரத்தில் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போதுகூட அவர் நடையை வைத்தே அவரை இன்னார் என அடையாளம் காண முடிகிறது. ஒருவரின் சிரிப்பு, கனைப்பு, ஏன், தும்மலை வைத்துக்கூட நாம் சிலசமயம் அடையாளம் காண்கிறோம். இப்படி நமக்கென ஒரு அரூப உருவம் நம் உடல் உருவத்துடன் ஒட்டி இருக்கின்றது. ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது அப்பாத்திரத்துக்கேற்ப நம் வழக்கமான ஆடைகளை விலக்கி வேறு விதமான உடைகளை அணிந்து, உடலில் சிற்சில மாறுதல்களை செய்து அப்பாத்திரத்தை நம் உடலில் தோன்ற வைக்கலாம். ஆனால் அது போதுமானதல்ல.

அப்பாத்திரம் நம் உடலில் அதன் ஆளுமையுடன் திகழ நம்முடைய உடலுடன் ஒட்டி இருக்கும் அந்த இன்னொரு உருவம் அனுமதிக்காது. நடிப்பு முழுமையாவதற்கு அச்சமயத்தில் நாம் நமக்கிருக்கும் அந்த அரூப உருவத்தையும் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளவேண்டும். அப்போது நம் உடல் ஒரு வெண் திரையாக மாறி அக்கதாபாத்திரத்தை முழுமையாக காட்சிப்படுத்தும். பெரும்பாலான தமிழ் நடிகர்கள் தன் ஆளுமையை முழுதும் விலக்கிக்கொள்தில்லை. ஆகவே அவர்கள் நடிப்பு முழுமையாவதில்லை. அவர்களுக்கென இருக்கும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப அவர்கள் மேற்கொண்ட ஒரே பாத்திரத்தையே உச்ச நடிகர்கள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைக்களன்களில் நடித்துவருகிறார்கள்.

நடிப்பில் நாம் ஒரே பாத்திரத்தையே நீண்ட நேரம் நடிக்கிறோம். ஆனால் நாட்டியத்தில் வினாடிக்கு வினாடி நாட்டியமாடுபவர் வேடங்களை பூணவேண்டியுள்ளது. அதுவும் அவர் தன் உடை, ஒப்பனைகளை மாற்றாமல், பாவனைகள் வாயிலாகவே அவர் ஒவ்வொரு பாத்திரத்தையும் சித்தரிக்க வேண்டியிருக்கிறது. ஒரு வெண் திரையில் நொடிக்கு நொடி காட்சிகள் மாறுவதற்கு ஒப்பானது அது. எப்படி திரை வெண்மையாகவும் தொய்வின்றி இழுத்துக்கட்டபட்டதாக இருக்க வேண்டுமோ அப்படியே ஒரு நடனமாடுபவர் தன் உடலை வைத்திருக்க வேண்டும். அது எப்படி என்பதை பிருகநள்ளையாக இருக்கும் அர்ச்சுனன் விளக்குவது அருமையான நடனம் கற்பதற்கான ஒரு கையேடு எனக் கொள்ளலாம்.
முதலில் நாம் க்ற்க விழிவதன் மூல நாம் அடிஅய நினைக்கும் நோக்கம் என்ன என்பதை அறிந்துகொள்ள வேன்டும். பிருகந்நளை நடனத்தின் இறுதி நோக்கத்தை அவன் விவரிக்கிறான். அவள் நடனத்தை ஒரு யோகமென ஆவதை நமக்கு கற்பிக்கிறாள்.

நடனமென்பது அதுவேதன்னை தன் உடலை கற்பனையினூடாக பிறிது பலவாக ஆக்கி பெருக்கிக்கொள்ளுதல். தன் அன்னையாக தந்தையாக உடன் பிறப்பாக சுற்றங்களாக குடியாக குலமாகமேலும் விரிந்து மரக்கிளைகளாக நீர்த்துளிகளாக புகையாக காற்றாக கனலாக வானாகஎன்றாள் பிருகந்நளை.

நடனக்கலை என்பது நம் தன்னிலையை இங்கிருந்து விலக்கி பிறவெனச் சூழ்ந்துள்ளவையாக முற்றிலும் ஆக்கிக் கொள்ளுதலே .மேடையில் ஆடுவதல்ல அது. நடனத்தின் முழுமையென்பது தானன்றி எவருமே இல்லாத இடத்தில் ஆட்டன் அடையும் நிறைவு மட்டுமே.”

நோக்கற்கோ சுவைப்பதற்கோ அல்ல அது, பிரம்மம் புடவியை நிகழ்த்துவதுபோல ஆடற்கென நிகழும் ஆடல் அது. உடல் உருமாறி எழுந்து உடலின்மையை எய்தும் ஒரு கணம்.


ஆனால் அவ்வாறு ஒருவர் தன்னை நடனத்தில் விரித்துக்கொள்வதை தடுப்பது எது?

வ்வெண்ணம் பிறிதாகி பெருகி முழுமை கொள்வதற்கு தடையென்றிருப்பது உடல் கொண்டிருக்கும் தன்னிலையே. ஒவ்வொரு உடலிலும் அவ்வுடலை உள்நின்று வடிவமைக்கும் தன்னுணர்வொன்று உள்ளது. பார்த்திவப் பரமாணு என கருவறைக்குள் நுழைகையிலேயே அவ்வுணர்வு உருவாகி விடுகிறது என்கிறார்கள்.”

முதலில் நடனம் கற்றுக்கொள்வதற்கான சூழல். அது விளையாட்டு போன்று கூடி நிகழ்த்தும் ஒன்றல்ல. நடனத்தில் முழு தனிமையை உணர வேண்டும்.
எப்போது அவ்வாறு உடன்வருபவர்கள் வேண்டியதில்லை என்று அவளுக்குத் தோன்றுகிறதோ அப்போதே நடனம் அவளுக்குள் செல்லத் தொடங்குகிறது. இந்நகரின் அனைவரும் சூழ இருந்தாலும் முற்றிலும் தனிமையிலிருப்பதாக தோன்றுகையில் நடனம் நிகழத் தொடங்குகிறதுஎன்றாள்.

நடனம் கற்பதின் முதல் கட்டம் நடனத்தைப் பார்ப்பது. நடனத்தைப் பார்ப்பது என்பது அதே நடனத்தை நம் அகத்திலும் நிகழ்த்துவது.
முதலில் ஆடலை நோக்குவதை பயில்க!” என்று சொன்னாள் பிருகந்நளை. “ஆடலை வழக்கமாக விழிகளால் நோக்குவோம்என்று ஒரு தோழி சொன்னாள். பிருகந்நளை அவளை நோக்கி திரும்பிஆம், ஆனால் விழிகளுக்குப்பின் பிறிதொரு ஆடற்பெண் வந்து அமரவேண்டும். உடன் ஆடாது எந்த ஆடலையும் எவரும் அறிய முடியாதுஎன்றாள்.

பிறகு நடனம் என்றால் என்ன என்பதற்கான ஒரு விவரணை. நீ உண்மையில் கற்கப்போவது எது என்பதை பிருகநள்ளை உத்தரைக்கு தெரியப்படுத்துகிறாள். அது ஒர் ஆசிரியரின் முதல் வேலை அல்லவா? நடனத்தை நடனமாடியல்லாமல் வேறு எப்படி தெரியப்படுத்தமுடியும்.
முழு உடலும் உறைந்து அக்கணம் திரைவிலக்கி வைக்கப்பட்ட சிற்பமென்றாகியது. பின்பு நுண்சிற்பங்கள் அவ்வுடலினூடாக ஒழுகத் தொடங்கின. அசைவென புறவுலகில் அவன் கண்ட அனைத்தும் தங்கள் தூயஉருவில் அவ்வுடலினூடாக நிகழ்ந்து சென்றன. அனலும், புனலும், மலர்மரமும், முகிலும். மானும் மயிலும் புரவியும் யானையும் சிம்மமும். குழந்தையும் கன்னியும் காளையும்.

ஆசிரியரின் பெருமையை உணர்ந்தவனே அவரிடம் கற்க முடியும். ஆசிரியர் மதிக்காதவன் அவரிடம் எதையும் பெற முடியாது. ஆசிரியர் தன் திறனை மாணவர்க்கு உணர்த்துவது முதலில் செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. தன் ஆசிரியர் மேல் உயர்வும் பெருமிதமும் நிறைந்திருக்கையில் மட்டுமே கற்பது நிகழ்கிறது. உத்தரைக்கு அதை பிருகந்நளை ஏற்படுத்துகிறாள்.

குரல் தழுதழுக்க உடல் துவள வேறேதோ சொல்ல நாவெடுத்தபின் கால் மடித்து அமர்ந்து பிருகந்நளையின் கால்களில் தன் தலையை வைத்துஎனக்கு அருள்க, தேவா! ஒருகணமேனும் இவ்வுடலால் அவ்வாடலை ஆடமுடிந்தேன் என்றால் பிறவி கொண்டதன் பொருளை அடைவேன்என்றாள். “நன்று! அது நிகழ்க!” என்றாள் பிருகந்நளை.

நடனம் நிகழ்வதற்காக உடலை சீர் படுத்த முதலில் அதிலிருக்கும் தன்னுணர்வை நீக்க வேண்டும். தன்னுணர்வினால் அடையும் ஆளுமையை நடனத்தின்போது எப்படி விலக்கி வைப்பது என்பதை அவள் முதல் பாடமாக உத்தரைக்கு அவன் கற்பிக்கிறாள். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அவள் கொண்டிருக்கும் தன்னுணர்வை நீக்குகிறாள். முதலில் மார்பகங்கள் மேல் எப்போதும் கொண்டிருக்கும் கவனத்தை நீக்கச் சொல்கிறாள், பின்னர் இடை. இப்படி ஒவ்வொன்றாக அவள் உடலை அவள் தன்னுணர்விலிருந்து விலக்கி எடுக்கிறாள். உலர்ந்த மண்ணில் இருக்கும் பிடிப்பெல்லாம் நீரில் ஊறி அகன்று களிமண் என ஆகையில் அது நெகிழ்ச்சிகொள்வதைப்போல அவள் உடல் நெகிழ்ச்சிகொள்கிறது. வெண்திரையில் பல காட்சிகள் எளிதில் தோன்றுவதைப்போல இனி நடனம் வாயிலாக எளிதாக பல உருக்களை அவள் உடலில் தோற்றுவிக்க இயலும்.

தண்டபாணி துரைவேல்