Tuesday, July 26, 2016

சொல் பொருள்




உத்தாலகரும் ஸ்சுவேதகேதும்போல் ஆணும் பெண்ணும் வாழ்க்கையை சொல் பொருள் என்றுதான் பார்க்கிறார்கள். ஆணுக்கு வாழ்க்கை சொல்மட்டும்தான். பெண்ணுக்கு வாழ்க்கை பொருள்நிறைந்தது.

அஸ்தினபுரி அரச அவையில் உலகம் காணாத ஒரு கொடுமை பெண்ணுக்கு நிகழ்த்தப்பட்டது. அங்கு இருந்த ஆண்கள் அனைவரும் அதை சொல்லாக சொல்லிச்சொல்லி கதையாக்கிவிடும் மனநிலையில் இருந்தார்கள். அவர்கள் பொருள் உணர்ந்தவர்களாக இருந்தார்களா? அங்கு இருந்த துரியன் மகள் லட்சுமணை சொல் உணர்ந்தவள் இல்லை ஆனால் பொருள் உணர்ந்தவள். அவள் பொருள் உணர்ந்ததாள் அஸ்தினபுரி அவையில் இருந்து பாஞ்சாலி மீண்டாள். இல்லை என்றால் அந்த கீழ்மையின் ஆழம் இன்னும் எத்தனை கொடூரமாக இருந்து இருக்கும்.  

இதோ இங்கு கண்மூடி இருக்கும் காந்தாரியும், கண்ணின்றி இருக்கும் திருதராஸ்டிரனும் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்? வழக்கம்போல திருதா ஆண் என்பதால் சொல்லாகப்பார்க்கிறான். காந்தாரி அதை பொருளாகப்பார்க்கிறாள் இல்லை என்றால் அவளுக்குள் ஏன் இந்த சீற்றம்?

// எழுந்து சென்று உடைவாளை உருவி அவன் கழுத்தில் பாய்ச்சியிருக்கவேண்டும் உங்கள் பிதாமகர். அந்த அவையில் நாக்கை இழுத்து அறுத்து விழுந்திருக்கவேண்டும் நீர். இனி எத்தனை சொற்களில் எத்தனை அறமுரைத்தாலும் அதன் பொருள் என்ன? வென்றது எந்த அரசியலும் அல்ல. வென்றது ஆண் எனும் கீழ்மை. பெற்று முலையூட்டி வளர்த்து மண்ணில் விட்ட அத்தனை அன்னையருக்கும் ஆயிரமாண்டுகாலமாக ஆண்கள் இழைக்கும் கீழ்மறம்…”//

பெண்கள் வாழ்க்கையை பொருளாகப்பார்ப்பதால்தான் பெண்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்று ஆணுலகம் சொல்லிவிடுகிறதா?

சொல் மாயவெளியை உருவாக்குகிறது பொருள் நிதர்சன உண்மையை காட்டுகின்றது. பாஞ்சாலி துகில் உரியப்பட்டாள் என்ற சொல்லுக்குள்ளே மட்டும் நிற்கும் திருதராஸ்டிரன் சொல்தரும் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க பாஞ்சாலி பாதம் சென்னி சூடுகின்றேன் என்கிறான். மாறாக பாஞ்சாலி துகில் உரியப்பட்டாள் என்பதன் பொருள் உணரும் காந்தாரி ஆண்களின் கீழ்மையை அறிகிறாள்.   பாஞ்சாலியில் இருந்து சம்படைக்குள் நுழைகிறாள். காந்தாரிக்கு சம்படை என்பது ஒரு உயிரின் வாழ்க்கை. சம்படை என்பது திருதராஸ்டிரனுக்கு ஒரு சொல் அதனால்தான் அந்த சொல்லை அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. புரிந்துக்கொள்ளும்போது தவிக்கிறான். சீறுகிறான் சினம் கொள்கிறான்.

 சொல்வெளியில் இருந்து மீண்டு திருதராஸ்டிரன் பொருள்வெளியில் நுழையும்போது காந்தாரியின் கண்ணீரின் பொருள் உணர்கிறான். அதை உணர்ந்தற்கு அடையாளமாக அவள் கண்ணீரை நான் தொடவேண்டும் என்பதில் உணர்த்துகிறான், அங்கு காந்தாரியின் தாயாக நிற்கிறான். அற்புதம் ஜெ.

ஆணோ பெண்ணோ சொல்லாக உள்ள வாழ்க்கையை பொருளாக ஆக்கும்போது தாய்மை மலர்கிறது.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.