Thursday, July 21, 2016

தன்னை உணர்ந்து ...


ஜெ

தன்னை உணர்ந்து உயிருடல் கொண்டு இங்கு வந்துள்ள அனைத்தும் அறிதலுக்கான வேட்கையுடன் இருப்பதே அதற்குச் சான்றாகும்” என்றான் ஸ்வேதகேது. - என்ற வரியை பலமுறை வாசித்தேன். எனக்கு உண்மையில் அது புரியவில்லை. தன்னை உணர்ந்தபின் உயிரும் பின்பு உடலும் கொண்டுதான் உயிர்கள் இங்கே வருகின்றனவா? இது எந்த தத்துவ அடிப்படையில் சொல்லப்பட்டது?

சிவராம்

அன்புள்ள சிவராம்

வேதாந்தம் சொல்வது அது. ஆனால் வேதாந்தம் அதை வைசேஷிகத்திலிருந்து பெற்றுக்கொண்டது. தன்மாத்திரைகளில் இருந்து மகத் அதிலிருந்து அகங்காரம். அதிலிருந்து மனம் அதிலிருந்து கர்ம இந்திரியங்கல் அதிலிருந்து ஞான இந்திரியங்கள் அதிலிருந்து ஐம்பெரும்பூதங்கள் -- இப்படித்தான் இருப்பு உருவாகிறது

மகத் என்பது ஓர் அணு ‘இருக்கிறேன்’ என தன்னை தனித்துணர்வது.  அகங்காரம் என்பது ‘நான்’ என பிரித்துணர்வது. அதன்பின்னரே அது உயிர்கொள்ளவும் உடல் எடுக்கவும் முடிவுசெய்கிறது

ஜெ