Tuesday, July 10, 2018

குண்டாசியின் மனநிலை


ஜெ

குண்டாசியின் மனநிலையை அவன் பேசிக்கொண்டிருந்தபோதே நான் ஊகித்தேன். அவனுடையது தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளும் மனநிலைதான். அது நம் குடும்பங்களில் ஊதாரியாகவும் குடிகாரனாகவும் இருக்கும் பலரிடம் இருக்கும் அதே மனநிலைதான் .அவர்கள் அவ்வப்போது பிறரை வசைபாடி இழிவுபடுத்தி அதன்பின் கண்ணீர் சிந்துவார்கள். அவர்கள் அப்படி துன்புறுத்துவது அப்பா அம்மா மனைவி என நெருக்கமானவர்களைத்தான். அந்த மனநிலையைப்புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். அவர்கள் நம்மைப்புண்படுத்தும்போது நாம் அவர்களை வெறுப்போம். அவர்கள் நம் வெறுப்பை உருவாக்கி நம்மை அவர்களை திட்டச்செய்து நமக்கு குற்றவுணர்ச்சியை உருவாக்கி கொள்வார்கள். அந்தக்குற்றவுணர்ச்சியால் நாம் கண்ணீர் சிந்தும்போது அதை அன்பு என்று எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். குண்டாசி நான் தப்பாகச் சொல்லிட்டேனா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறான். பெரும்பாலான குடிகாரர்கள் அப்படிக் கேட்பதுண்டு  அதைவிட நீங்கள் துயர் கொள்வீர்கள். அத்துயரை உங்கள்மேல் ஏவிக்கொள்ளவேண்டும் என்றே அவற்றை சொன்னீர்கள்என்று யுயுத்ஸு சரியாகவே குண்டாசியை கண்டுபிடிக்கிறான்.