Saturday, January 23, 2016

பிள்ளைகளின் களிவிளையாடல். (வெய்யோன் 29-30)


   

குழந்தைகள் எந்தச் சூழலையும் கொண்டாட்டமாக்கிவிடுகின்றன. மென்மையும் அழகும் கொண்ட குழந்தைகள். படிக்கும்போதே மார்பிலும் தோளிலும் தவழ்வது போன்ற உணர்வு. அந்தக் குழந்தைகளின் உடலுக்குள் தினவு இருக்கும் என நினைக்கிறேன். அதனால் அவை நம்மிடம் மோதி விளையாடி தீர்த்துக்கொள்கின்றன போலும்.    அதே நேரத்தில் குழந்தைமையில் ஒரு ஆபத்து உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். யானைக்கன்றுகள் நம்முடம் ஆவலுடனும் அன்போடும் விளையாடும். அவ்வளவு பெரிய குழந்தை நம்முடன் கொஞ்சி விளையாடுவதைப் பார்ப்பது மிக இன்பம். ஆனால் நாம் எச்சரிக்கையில்லாமல் இருந்தால்அவை நம்மை விளையாட்டாக  சுவற்றில் முட்டி மோதுகையில் நம் மார்பெலும்புகள் நொறுங்கிவிடக்கூடும்.
  

  குழந்தைகளிடம் மாட்டிக்கொள்ளும் எறும்புகள், பூனைக்குட்டிகளின் அவலங்களை கண்டிருக்கிறீர்களா?  நாம் கவனிக்கும்போது அவற்றை குழந்தைகளிடம் காப்பாற்றிவிடலாம். ஆனால் நாம் கவனிக்காத நேரத்தில் குழந்தைகளின் இனிய அறியாமையின் காரணமாக  அந்த எளிய உயிர்கள் கடும் துன்பம் அடையும். ஒரு குழந்தை,  பூனைக்குட்டியை வாளித் தண்ணீரில் முக்கி முக்கி விளையாடுவதைப் பார்த்து  தடுத்திருக்கிறேன். சிறிய நாய்க்குட்டியின்மேல் ஒரு குழந்தை உட்காரப்பார்த்ததைக் கண்டு திடுக்கிட்டிருக்கிறேன். ஒரு பாவமும் அறியாத ஓணானை சிறுவர்கள் துரத்தி துரத்தி அடித்து காயப்படுத்துவதை அறிந்திருக்கிறேன்.  தும்பியைப் பிடித்து துன்புறுத்துவதில் களிக்கும் சிறூவர்களை கண்டிருக்கிறேன்.

    குழந்தைகள் மற்றவரின் துயரத்தை அறிவதில்லை. எல்லாமே விளையாட்டு என ஆகின்றபோதினால் விளைவுகளைப்பற்றிய பொறுப்பு ஏதுமற்று அவை இருக்கின்றன. தானே ஒரு கோபத்தை கொண்டு அதற்கான ஞாயத்தை கற்பித்துக்கொண்டு அவை  மற்ற உயிர்களுக்கு துன்பமூட்டும் செயல்களை  செய்கின்றன.  சிறு விளையாட்டுப்பொருள் கிடைக்காமைக்காக விலை உயர்ந்த கலைப்பொருளை எந்த சிந்தனையும் இன்றி உடைத்தெறிகின்றன.  ஆகவே குழந்தைகள் எவ்வளவு இன்பத்தை தம் உருவத்தாலும் செய்கைகளலும் நமக்கு வாரி வழங்கினாலும் அவர்கள் வளரவேண்டும். அவர்கள் அறவழி எதுவென அறிந்து அதன்படி நடக்கும் பக்குவம் பெற்றாக வேண்டும்.

     வெண்முரசில் கடந்த மூன்று அத்தியாயங்களாக நாம் காண்பதெல்லாம் குழந்தை மனங்கள், குழந்தைப் பேச்சுகள், குழந்தையின் செயல்கள்.  துரியோதனனும் அவன் தம்பிகளும் வயதானாலும்கூட இன்னும் மனதளவில் குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்கள் ஓடி விளையாடவில்லையென்றாலும் உண்பதிலும்,  சிந்தனையிலும் பேசுவதிலும், நடத்தையிலும், பாசத்தை வெளிப்படுத்துவதிலும் அவர்கள்  தம் உள்ளத்து மழலையை வெளிப்படுத்துகிறார்கள்.  அவர்களின் குழந்தை நடத்தையை பானுமதி கடிந்துகொள்கிறாள்.  கர்ணனுக்கும் சேர்த்து திட்டு விழுகிறது.

 “நான் சொல்கிறேன் இவர்களுக்கு…” என்றான் கர்ணன். “ஆம், நீங்கள் சொல்லி இவர்கள் கேட்கிறார்கள்… மூத்தவரே, நீங்கள் இவர்களை மாற்றவில்லை. இவர்கள் உங்களை மாற்றிவிட்டார்கள்” என்றாள் பானுமதி.
 
  பெண்களுக்கே உரித்தான பானுமதியின் உள்ளுணர்வு இந்த பெரிய வயதினரின் குழந்தைத்தனத்தில் இருக்கும் அபாயத்தை கண்டுகொள்கிறது. நாளை ஏதோ ஒரு சிறிய காரணத்தைப் பெரிதெனக்கொண்டு இவர்கள் யாரையாவது ஒருவரை ஒரு அபலைப் பூனைக்குட்டியென அவலத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள் என அவள் மனம் ஐயுறுகிறதுபோலும். ஒருவேளை அத்தனைபேரும் அறம் எது என அறியாமல் அற்பமான ஒன்றை காரணம் காட்டி   பெருந்தவறு இழைத்துவிடுவார்கள் என்று அவளுக்குள் இருக்கும்  பெண் தெய்வம் அறிந்திருக்குமோ?

தண்டபாணி துரைவேல்