Friday, January 15, 2016

தாய்மாமன் மரியாதை:


 

ஜெயத்ரதன் அவமானம் ஒரு நுண்ணிய ஆடல். உண்மையில் துரியோதனன் செய்திருக்க வேண்டியது. துச்சளைக்கு வயிறு திறக்கவில்லை என வெண்முரசு சொல்கிறது. மலடு என்று நம் குடும்பங்களில் சொல்வார்கள். இன்னும் ஆழமாகத் தைக்க வேண்டுமென்றால் அப்பெண்ணின் காது படவே, 'பிள்ளை பெற வேண்டும் என்று கூட இல்லை, மலடு நீங்கினால் போதும்' என்று பேசுவார்கள். (என் தாய்க்கு நடந்தது தான் இது..) உண்மையில் துச்சளையின் நிலை பரிதாபமானது. நூற்றி ஐந்து பேருக்கு ஒரே தங்கை. துரியனை அணுகி சொல்லெடுக்கும் துணிவு கொண்டவளாக அவளே இருந்திருக்கிறாள், கர்ணன் வரும் வரையிலும். என்றுமே தங்கையின் பால் ஆழமான பாசம் கொண்டவன் துரியன். அப்படிப்பட்டவள் இந்த குரங்கு கையில் மாட்டிக்கொண்டாள்! எல்லாம் அரசியல். அதற்காக தங்கைக்கு நேர்ந்துகொண்டிருக்கும் அவமானத்தை துரியன் தாங்கிக் கொண்டிருப்பானா? உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்திருப்பான்.  நண்பனின் துயரை அவன் சொல்லித் தெரிய வேண்டிய நிலையிலா வெய்யோன் இருப்பான்! அவனுக்கும் அவள் தங்கை அல்லவா? அது தான் அத்தனை பேர் முன்னிலையிலும் அப்படி ஒரு அவமானத்தை நிகழ்த்தினான். ஒரு வகையில் அவன் சுப்ரியையை சிறையெடுக்க ஒப்புப் கொண்டது கூட ஜயத்ரதனின் இந்த திருமணம் நடைபெறுவதைத் தடுக்கத் தான். அதனால் தான் நூறு மாமன்கள் இருந்தாலும் கர்ணனை தாய்மாமனாக்குகிறான் துரியன். அதிலும் ஒரு இயல்பான உண்மை உள்ளது பாருங்கள். கர்ணன் பாண்டுவின் கானீனப் புதல்வனாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால் அவன் தானே குலத்திற்கு மூத்தவன். தாய்மாமன் சீர் எப்போதும் குடும்பத்தின் மூத்தவன் தானே செய்ய வேண்டும்!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்