Tuesday, January 26, 2016

உணர்வுகளை உருப்பெருக்கும் மது (வெய்யோன் - 36)




   நான் மது அருந்துபவனல்ல. அதன்காரணமாக மது அருந்துபவரை ஆர்வத்துடன் உற்று நோக்கும் ஒருவனாக இருக்கிறேன். மது உள் நுழைகையில்  மனிதன் என்ன மாற்றத்தை அடைகிறான் என்பதை கண்டிருக்கிறேன். ஒரு குளத்தின் நீரில் நீந்திக்கொண்டிருக்கும் ஒருவன் குளத்தை காண்பதைவிட குளத்தின் கரையிலிருந்து குளத்தைப் பார்ப்பவன் அதிகம் காண்கிறான் அல்லவா?

   நாம் விலங்குகளைவிட அதிகமாக பல உணர்வுகளை கொண்டவர்கள். விலங்குகளுக்கு சில உணர்வுகள் தான் உள்ளன. ஆனால் அவற்றை அவை எப்போதும் மறைத்துக்கொள்வதில்லை. ஒரு விலங்கு கோபமாக, மகிழ்வாக, உற்சாகமாக, காமம் கொண்டதாக அல்லது சோர்வாக இருக்கிறதா என அதன் நடவடிக்கையில் தெளிவாக தெரிந்துவிடும்.   தன் உணர்வுகளை அது ஒருபோதும் மறைக்க முயல்வதில்லை. ஆனால் வளர்ந்த மனிதன் தன் பெரும்பாலான உணர்வுகளை பிறர் அறியாமல் மறைத்துக்கொள்பவனாக இருக்கிறான். கோபத்தை, வெறுப்பை, சோகத்தை மட்டுமல்லாமல், மகிழ்வை, ஆசையை, ஒப்புதலைக்கூட வெளிக்காட்டத் தயங்குகிறான்.  அப்படியே வெளிக்காட்ட வேண்டிய தருணங்களில் அதன் உண்மையான அளவுகளில் வெளிப்படுத்துவதில்லை. ஒன்று  சுருக்கமான அளவுகளில் வெளிப்படுத்துகிறான்  அல்லது யாரையவது ஏமாற்ற மிகையாக வெளிப்படுத்துகிறான். அவன் உலக வாழ்வே பெரும்பாலும் நடிப்பாக மாறுகிறது. அப்படி நடிப்பதே ஒரு நாகரீகம் என ஆகிவிட்டது.  ஒரு விலங்கைப்போல அல்லது ஒரு குழந்தையைப் போல தன் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்திக்கொள்பவன் சமூகத்தின் கண்களில் நாகரீகமற்றவனாக, கோமாளியாக, ஏமாளியாக, மன வளர்ச்சியற்றவனாக காணப்படுகிறான்.

      இதனால் ஒரு சாதாரண விஷயத்தில் கூட மனிதர்கள் என்ன நினக்கிறார்கள் என சரியாக நாம் அறிந்துகொள்ள முடிவதில்லை.  இதன் காரணமாக ஒருவருக்கொருவர் புரிந்தல்கள் குறைந்துவிடுகின்றன. மாறாக தவறான புரிதல்கள் நிகழ்கின்றன். அதன் காரணமாக மனிதர்களுக்கிடையேயான  சிக்கல்கள் அதிகரிக்கின்றன. நல்லவன், அன்பானவன்கூட தன் மன உணர்வை வெளிக்காட்டுவது பிறரை துன்புறுத்திவிடுமோ என மறைத்துக்கொள்கிறான். ஆகையால் மன உணர்வுகளை  மறைத்துக்கொள்ளுதல் முழுக்க தவறென்று கூறிவிட முடியாது. மனிதர்கள் வாழ்வுமுறையில் மன உணர்வுகளை மறைத்துக்கொள்வது  வழக்கமென இருக்கிறது
.
     ஒருவனின் மனதை முழுமையாக திறந்துகாட்ட ஏதேனும் வழிமுறை இருக்கிறதா?  உண்மை பேசுகிறானா என்பதைக்காட்டக்கூட கருவிகள், மருந்துகள் இருக்கின்றன.  ஆனால் ஒருவனின்  மன உணர்வுகளை வெளிக்காட்ட வழிமுறை எதுவுமில்லை. ஒருவன் தானாக விருப்பபட்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்தினால்தான் உண்டு. அது கூட எவ்வளவு சதவீதம் உண்மையானது யாருக்கும் தெரியது.  வெளிப்படுத்தும் அவனுக்கே கூட தெரியாது என நினக்கிறேன்.

   ஒருவனை மது அருந்தி மனதை மயங்கவைத்து அவன் மன உணர்வுகளை அறிந்துகொள்ள முடியுமா? மதுமயக்கத்தில் ஒருவன் தான் சொல்ல மறைத்த தன் உணர்வை சொல்லிவிடுவானா? இல்லை எவ்வளவு மது அருந்தினாலும் ஒருவன் தான் சொல்லவே கூடாது என நினைத்த ஒன்றை  சொல்வதில்லை. அரசியல் வியாபார நோக்கங்களை கொண்டிருக்கும் ஒருவர் தன் உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை. அது அவர்களின் நோக்கங்களை பாழாக்கிவிடும்.  ஆனால் அவர்களில் பலர் மது அருந்துபவர்கள். மதுமயக்கத்தில் அவர்கள்  ஒருவரிடம் தேவையற்று  தன் மனதை திறந்துவிடுவதில்லை.    

   ஆனால் மது குடித்திருக்கும் ஒருவன் உளரத்தானே செய்கிறான்.  மதுமயக்கம் இல்லாதபோது சொல்லாத ஒன்றை உரத்து சொல்லத்தானே செய்கிறான். மது அருந்தாத நிலையில் செய்யத் துணியாத ஒன்றை தயக்கமின்றி செய்கிறான். அத்தகைய நிலையில் எளிதில் ஒருவரிடம் நட்புகொள்கிறான், பகை கொள்கிறான், காமம் கொள்கிறான், நம்பிக்கை கொள்கிறான் எனத் தெரிகிறதே? உண்மையில் மதுமயக்கம் மனிதனின் மனதை எவ்விதத்தில் பாதிக்கிறது.

   மது மனிதனின் மனதின் கட்டுக்களை தளர்த்துகிறது. அவன் உணர்வுகளின் அளவு பெரிதாகிறது. அது இல்லாத உணர்வை உண்டாக்குவதில்லை. இருக்கும் உணர்வை அதிகரிக்கிறது. நம்பிக்கையற்ற ஒருவன் மேல் மது அருந்துவதன் காரணமாக நம்பிக்கை ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மயக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கிறது. அதைப்போலவே காமம், கோபம், வெறுப்பு, மகிழ்வு என அத்தனை உணர்வுகளும் மது அருந்துகையில் அதிகரிக்கின்றன. அதன் காரணமாக செயலை செய்வதற்கான தயக்கத்தின் அளவு குறைகிறது. அதனால் மது அருந்தாத போது செய்யாத செயலை மது அருந்தியபோது ஒருவன் செய்கிறான். ஆனால் ஒருவன் தயங்கிய செயலைத்தான் செய்கிறானே தவிர , செய்யக்கூடாது என்று முடிவெடுத்த செயலை செய்வதில்லை.  அதனால் எவன் ஒருவனும் தன் செய்த செயலின் பொறுப்பை மதுவின்மேல் போட்டு தட்டிக்கழிக்க முடியாது.

     மதுவின் மயக்கத்தில் துரியோதனன், கர்ணன் மேல் கொண்டிருக்கும் அன்பு, நட்பு, மதிப்பு, பாசம், அக்கறை அனைத்தும் பொங்கி மேல் வருவதை இன்றைய வெண்முரசில் காண்கிறோம். முன்னரே நமக்கு தெரியும் என்றாலும்  மது அவற்றை உருப்பெருக்கி காட்டுகிறது. ஜெயத்ரதன் கர்ணன் மேல் கொண்டிருந்த வன்மம் விலகி அவன் மேல் மதிப்பு உருவாகி இருந்தது, இம்மது மயக்கில் அவன் கர்ணன் மேல் கொண்டிருந்த மதிப்பு அதிகரிக்கிறது.    கௌரவர்களின் சகோதர பாசம், கர்ணன் மேல் அவர்கள் கொண்டிருக்கும் அன்பு, மதிப்பு போன்றவை, மது என்ற உருப்பெருக்கியின் மூலமாக முழுமையாக அறிந்துகொள்ளும்படி வெளித்தோன்றுகிறது. 

தண்டபாணி துரைவேல்