Wednesday, November 25, 2015

மாநகர் - 2 புதிர் விளையாட்டு.



இனிய ஜெயம்,

பால்யம் முதல் எனது மனம் கவர்ந்த விளையாட்டுகளில் ஒன்று, புதிர் வழிப் பாதை [ maze ]  விளையாட்டு.  இந்தப் பூனை குட்டி பால் கிண்ணம் இருக்கும் இடத்தை அறிய வழி காட்டுங்களேன் என்ற தலைப்பின் கீழ் வரையப் பட்டிருந்த புதிர்வழி பாதையே என் நினைவறிந்து நான் விளையாடிய முதல் புதிர் விளையாட்டு.

அடுத்து இரும்புக் குண்டுகள் அடங்கிய சுழல் வட்ட பாதை புதிர் தட்டு. இரும்புக் குண்டுகள் அனைத்தையும் புதிர் வழியின் மையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.

முன்னதில் மையத்தில் இருந்து வெளியேற வேண்டும். பின்னதில் வெளியில் இருந்து மையம் நோக்கி செல்ல வேண்டும். இரண்டிலும் அதை வெல்ல செய்யும் முயற்சியே, அந்த செயலுக்கு தடையாக அமையும் வசீகர அமானுஷ்யமே பித்துக் கொள்ள வைத்தது.

வயது முதிர முதிர வித விதமான புதிர் பாதை விளையாட்டுக்களை விளையாடி இருக்கிறேன். மிக மிக பின்னால் அவ் விளையாட்டின் கூடவே ஒரு வினாவும் துரத்தியது. இந்த புதிர்களை வெல்வதன் வழியே நான் எதனை வெல்கிறேன்? 

பின் புதிர் வழி குறித்து வாசிக்க வாசிக்க, இத் தகு புதிர் வழி அமைப்புகள் மானுட[ பொது துரியத்தில் உறையும் வேட்கை அல்லது பீதி என்று அறிந்தேன். நமது இல்ல வாசலின் பிருமாண்ட இழை கோலம் துவங்கி  உலகின் பல பகுதிகளில் ஏக்கர் கணக்கில் வானிலிருந்து பார்த்தால் மட்டுமே விஸ்தீரணம் முழுதும் தெரியும் புதிர் சித்திரங்கள்,வரை அதன் ஊற்றுமுகம் என்ன என்று  இன்னமும் விளக்கம் பெறாமல் விரிந்து கிடக்கிறது.

மானுடம் தோன்றிய காலம் முதல் இந்தப் புதிர் வட்டப் பாதை விளையாட்டை உருவாக்கி விளையாடி மானுடம் எதை வெல்ல நினைக்கிறது?. 

பத்ம வியுகம் கதை இதை மீளவே இயலா விதியின் புதிர் பாதை என்கிறது. அத்தனை புதிர் பாதை விளையாட்டு வழியே நான்  மானசீகமாக வெல்ல விழைந்தது இந்த விதியைத் தானா? இது எனது ஆட்டம் மட்டும் தானா? அல்லது இப் புவியில் ஒவ்வொருவரும் அவரவருக்கான புதிர் பாதையில் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறார்களா? இந்தப் புதிர்ப் பாதையை வென்றவுடன் எஞ்சுவது என்ன ? விடுதலையா அல்லது இதுவரை வென்று மீண்ட புதிரைக் காட்டிலும் சிக்கலான புதிரின் தலை வாயில் முன் நிர்ப்போமா?

ஹளபேடு கோவிலில் சிறிய புடைப்பு சிற்பம் கண்டேன். அபிமன்யு சக்கர வியுகத்தை உடைத்து முன்னேறும் சித்திரம். அந்த சக்கரத்தை கவனிக்கையில் ஒன்று புரிந்தது. அந்த சக்கரம் வழியே அதன் அணைத்து தடைகளையும் உடைத்து மையத்தை தொடும் போது நமது மொத்த ஆற்றலும் தீர்ந்து விடும். அதாவது நாம் நூறு சதவீதம் காலி எனும் போது, அந்தப் புதிர் ஐம்பது சதவீதம்தான் காலி ஆகி இருக்கும். அதாவது உள்ளே நுழைவதில் ஆற்றல் தீர்ந்துவிடும். மீள இயலாது. துவாரகையின் அமைப்பு இதுவே. மீள்கையில்  சுபத்ரை சொல்கிறாள். எனது துணை இருந்ததால் நீங்கள் தப்பினீர்கள். [இன்னொரு எல்லையில் அர்ஜுனன் இருந்ததால் சுபத்ரை தப்பினாள்] அதன் காரணம் இதுவே. அர்ஜுனன் சுபத்ரை இருவரும் பங்கிட்டு நூறு சதவீத ஆற்றல் வழியே அந்த புதிரிலிருந்து மீள்கிறார்கள். [ நேமி அறுத்து கொண்டு வெளியேறுவது அகத்தால் இத்தனை ஆற்றலை கொண்டுதான் ].

துவாரகை வெளியேற விடாது எனில், இந்தரப் பிரஸ்தம் உள்ளே வர விடாது. எறும்புத்தின்னி போல தன்னை மூடிக் கொள்ளும் புதிர்க் கோட்டை அமைப்பு கொண்டது . அர்ஜுனனின் பார்வையில் இந்தரப் பிரஸ்தம் நகர் விரிகிறது. [இது சுஜயனுக்கு சொல்லப் படும் கதயாகிலும்] முதல் கோட்டை வாயிலின் இரு பக்க காவல் கோபுரங்களும் சும்மா கணக்கு போட்டாலே பிரும்மாண்டம் எகிறுகிறது.

வீரர்கள் நின்று அம்பு தொடும் அடுக்கு. ஒரு வீரன் சராசரியாக ஆறு அடி உயரம். அவன் வில்லுயர்த்த கூடுதல் நாலு அடி. ஆக ஒரு அடுக்கு பத்து அடி உயரம். இப்படி பதினெட்டு அடி. அந்த ஸ்தூபி எப்படியும் ஒரு இருபதடி பீடத்தின் மேல் தான் நிற்கும். ஆக கோட்டை வாயிலின் இரு புற ஸ்தூபி உயரம் இருநூறு அடி. அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரத்தின் உயரம்.

அதன் பின் பிரும்மாண்ட பாறைகள் உயர்ந்து அமையும் நிறை நிறையான கோட்டை வரிசைகள். ப்ரும்மாண்டத்தின் உச்சம்.

அனைத்தையும் உடைத்து எறிகிறது அர்ஜுனனின் உள் உறையும் சிவயோகியின் தரிசனம் 

''வடிவமிலாது காலவெளியில் நின்றிருந்த பாறைகள். ஒவ்வொன்றையும் சூழ்ந்திருந்தது முடிவில்லாத தனிமை. வடிவம் கொண்டு ஒன்றோடொன்று பொருந்தி அவை உருவாக்கும் வடிவம் அக்கணத்திற்கு முன் இல்லாதிருந்தது. அப்போதென உருவாகி எழுவது. அது காலத்தின் முன் நிற்கும். ஆயிரம் காலம். பல்லாயிரம் காலம். ஆனால் ஒருநாள் உதிர்ந்து அழியும். அதில் மறுப்பே இல்லை. அவ்வகையில் நோக்கினால் மாலையில் வாடி உதிரும் மலரும் அதுவும் ஒன்றே. ஆனால் பாறைகள் அங்கே கிடக்கும். மிகமெல்ல அவை கறுத்து விளிம்புகள் உதிர்ந்து தங்கள் வடிவமில்லா தோற்றத்தை மீட்கத்தொடங்கும்.''

ரமணர் குகையின் வாசலில் அமர்ந்து அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரத்தை நோக்குகையில் அகத்தில் பொங்கும் உருவமற்ற தத்தளிப்பின் முகம் இந்த வரிகள் என்று இப்போது உணர்கிறேன்.

இந்த வரிகளின் முகம் அந்தக் கோவிலின் உள் உறையும் கிடை கல் மேல் நிற்கும் நடுகல்  என இப்போது அறிகிறேன்
 
கடலூர் சீனு