Friday, November 20, 2015

நஞ்சு சிதறல்:



மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு தருணம், சுபத்ரையின் சிவயோகி தன்னை வெளிப்படுத்தும் தருணம் இன்று வந்தே விட்டது. சுபத்ரைக்கும் அர்ஜுனனுக்குமான உறவை மாலினி இந்த அத்தியாயங்களின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டாள். அவன் எங்கெங்கு அலைந்தாலும் மீண்டும் மீண்டும் சென்று சேரும் இடமாக அவளே இருக்கிறாள். ஆயினும் அவனை அவள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதற்கு காரணம் அவள் கணவனை விட மேலானவனாக அவள் தமையன் இருப்பது தான் என்கிறாள் மாலினி.

எப்படி இருந்தாலும் காதல் கொண்ட ஒரு பெண் தன் கணவனை விடச் சிறந்தவனாக மற்றொருவரை, அது கிருஷ்ணனாகவே இருந்தாலும் எண்ணுவது என்பது சாத்தியமற்றது. மிகச் சிறந்த உதாரணம் சததன்வாவின் காதலி மாலினி. அவளிடம் சததன்வா சென்ற இடம் கேட்கும் கிருஷ்ணன் அவள் மனதில் தன்னைத் தானே எண்ணியிருந்தாள் என்று சொல்கிறான். அதற்கு அவள் ஆம், என் நெஞ்சில் உங்கள் மயில்பீலியைச் சூடியிருந்தவர் என்னவரே என்கிறாள். எனவே நிச்சயம் சுபத்ரையின் அந்த புறக்கணிப்பிற்கு அவள் கிருஷ்ணனின் தங்கை என்பது நிச்சயம் காரணமல்ல.

ஆண் – பெண் உறவு சீராக அமைந்திருக்க மிக முக்கியமான ஓர் அம்சம் இருவருக்குமிடையேயான பரஸ்பர நம்பிக்கை. புரிதலை விடவும் மிக அடிப்படையான ஒன்று இது. இந்த அம்சம் முழுமையாக அடி பட்டு விடுகிறது இவர்களின் உறவில். அதைத் தான் அர்ஜுனன் அஞ்சுகிறான். அவள் நம்பிக்கையை உடைக்கப் போவதை அஞ்சுகிறான். அது உடைபட்ட பின் அவர்களின் உறவின் நிலையை எண்ணி அஞ்சுகிறான். அந்த அவன் அச்சமே அவர்களின் உறவை இனி அமைக்கிறது. அவளைப் புண்படுத்திய இந்த தருணத்துக்காக மன்னிப்பு கேட்கும் மனநிலையிலேயே அவன் அவளைத் தேடி மீண்டும் மீண்டும் வருகிறான். அந்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியதாலேயே அவனை அவள் புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறாள். முடிவுறா சுழற்சி இது.

சரி... அவன் தான் நம்பிக்கையை உடைத்து விட்டானே. விலகி இருக்க வேண்டியது தானே. அவள் விலகினாளா? இல்லை. சற்றே சிக்கலான உறவு அவர்களுடையது. அவன் யோகியாக இருக்கும் போதே, அவன் பால் அவள் மனம் சென்ற போதே அவளின் ஆழ்மனம் நிச்சயம் அறிந்திருக்கும் அவன் யோகியல்ல என்று. இன்னும் கூர்மையாக அவன் இளைய பாண்டவனாகவே இருக்க வேண்டும் என்று கூட அறிந்திருக்கும். அதை அறிய பெரிய அறிவு ஒன்றும் தேவையில்லை. ஒரு வகையில் அவள் அர்ஜுனனை விரும்பியவள் தானே. ஆனால் அவன் பெண்களை அடைந்து விலகிச் செல்கிறான் என்று அறியும் போது அவன் மஞ்சத்தில் வந்து சென்ற எத்தனையோ பெண்களில் ஒருத்தியாக அவள் இருக்க விரும்பவில்லை. எனவே அவள் அவனை நிராகரித்து விடுவதாகக் கூறுகிறாள். ஆயினும் அவள் விரும்பியவன் அவன் தான். இதை உணர்ந்ததால் தான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் அவளை மணக்கும் படி கூறுகிறான். இது அர்ஜுனனுக்கும் தெரிகிறது. சுபத்ரையின் மணம் பற்றிப் பேசுவதற்கு முன் அர்ஜுனனுக்கு வரும், ‘பாண்டவர்களில் ஒருவருக்கு மணம் செய்து கொடுப்பதால் வரும் அரசியல் பலன்கள் தான் காரணமென்றால் நகுலனுக்கோ அல்லது சகதேவனுக்கோ அவளைத் திருமணம் செய்து வைத்திருக்கலாமே, அவர்களின் வயதும் இவளின் வயதுக்கு ஏற்றது’, என்ற சந்தேகமும் அர்ஜுனன் பால் அவளுக்கு இருக்கும் ஈர்ப்பை உறுதிப்படுத்துகிறது.

எனினும் தன் பெண்மையை அவன் மதிக்க மாட்டான் என்று எண்ணி அவனை வெல்லும் ஒருவனைத் திருமணம் செய்வதன் மூலம் அவனை வெல்ல நினைக்கிறாள். அதனால் தான் சிவயோகியை அர்ஜுனனை வெல்ல வேண்டும் எனப் பணிக்கிறாள். இவற்றையெல்லாம் சொல்லும் போதும் இந்த சிவயோகி அர்ஜுனன் தான் என்று உள்ளூர உணர்ந்தும் இருக்கிறாள். ஒருவகையில் அவள் இந்த உண்மை உடைபடும் தருணத்தை எதிர்நோக்கித் தான் இருக்கிறாள். அவளுக்குள் இருக்கும் இந்த இருமையே அவள் வாழ்வின் நஞ்சு. அதை சிதறடிப்பது அவளை மொத்தமாகச் செயலிழக்க வைக்கும் என்பதை அறிந்தும், மிகச் சரியாக அவள் நெஞ்சின் மேலிருந்த அந்த மையப் பெரு நரம்பை அடிக்கிறான் அர்ஜுனன். நீலகண்டனாக அந்நஞ்சை அருந்தவும் செய்கிறான்!!! சிவயோகியல்லவா....

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்