Sunday, November 15, 2015

தோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)


   மனிதனை மற்ற விலங்குகளை காரணம் காட்டி குறைத்துக்கூறுதல்  ஒரு நடைமுறை வழக்கு. அவன் உலகை பாழாக்குகிறான் வஞ்சமும் அகம்பாவமும் பேராசையும் கொண்டவன், விலங்குகள் அப்படியில்லை என கூறுவது வழக்கம். ஆனால் முற்றும் அப்படி சொல்லிவிடமுடியாது.  தனி ஒரு மனிதனாக அவன் விலங்குகளைவிட பல மடங்கு நல்லுணர்வுகளை கொண்டவன்.  மனிதரில் தாய்ப்பாசம் தாயின் இறப்புவரை நீடிக்கிறது. மற்ற விலங்கினத்தில் அப்படியில்லை. தந்தைமையுணர்வு விலங்கினத்தில் மிக மிகக் குறைவு. மனிதரில் இருக்கும் சகோதர பாசம் என்பது விலங்கினத்தில் இல்லவே இல்லை எனக்கூறலாம். கணவன் மனைவி என சேர்ந்து ஒருவருக்கொருவர் பாசத்துடன் வாழும் வாழ்க்கை விலங்கினத்தில் மிக அரிதாக தென்படுகிறது. மனிதன் இந்த விஷயங்களில் மற்ற விலங்கினத்தை தாண்டி மிக உயர்ந்த நிலையில் உள்ளான்.   இந்த உயர்வுக்கு அவனின் சிந்திக்கும் ஆற்றல் பெரிதும் துணை புரிகின்றது. 

   மனிதர்களுக்கிடையே காணும் தோழமையுணர்வும் மிக முக்கியமானது. எவ்வித பந்தங்களும் இல்லாததாலேயே அது மிகவும் சுகமான உறவாக இருக்கிறது. துறவறம் கூட தோழமையை தவிர்க்கச்சொல்லவில்லை. அது தோழமையை அனைத்து உயிர்களூக்கும் விரித்துக்கொள்ளச்செய்கிறது. அந்த உணர்வு  விலங்கினங்களுக்கிடையில் இருக்கிறதா எனப் பார்த்தால் அரிதாக சிலசமயம் தென்படுகிறது. வெவ்வேறு இனத்தைச் சார்ந்த சில விலங்குகள் சில சமயம் தோழமையுடன் இருப்பதை டிஸ்கவரி தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். தொழமை உணர்வு விலங்குகளின் ரத்தத்தில் கடவுள் சேர்த்திருக்கவில்லை. 

ஆனால் விலங்குகள் சற்று பழக்கப்படுத்தியபின் மனிதனிடம் தோழமை கொள்கின்றன. யானை தன் பாகனிடம் அவனின் சிறு அங்குசத்தின் மேலான   அச்சத்தின் காரணமாகவா அடங்கி நடக்கிறது. ஒரு எத்து, ஒரு மிதியில் அவனை கொன்றுவிட முடியும். அது அந்த யானைக்கு தெரியாத ஒன்றல்ல.  பாகனிடம் அது கொண்ட தோழமை மட்டுமே அதைக் கட்டுப்படுத்தியுள்ளது. ஒரு சர்க்கஸ்சில் சிங்கத்தை ஒருவர் ஒரு விளையாட்டுக்கு பழக்குகிறார் என்றால் அதன் மனதுக்கு  தோழமையை கற்பிக்கிறார் என்பதுதான் பொருள். அது அதற்கே உரிய கொடிய விலங்கு குணத்தை அந்த தோழமை உணர்வின் காரணமாகமட்டுமே   கட்டுப்படுத்திக்கொள்கிறது.  குதிரை தோழமையின் காரணமாகவே ஒருவன் தன் மீது அமர்ந்து வர அனுமதிக்கிறது.

 நம்முடன் இருக்கும் விலங்குகள் உணவுக்கு நம்மைச் சார்ந்துதான் இருக்கின்றன. அவை நம்முடைய அருகாமையை, தொடுகையை, அதனுடன் விளையாடுதலை பெரிதும் விரும்புகின்றன. அதற்காக நாள் முழுதும் ஏங்குகின்றன. அவற்றின் அறிவுக்கு எட்டிய வரையில் நமக்கு ஏதாவது நன்மை செய்ய முயல்கின்றன. ஆனாலும் நாம்  அவற்றுக்கு  உணவளிக்காமலோ ஒழுங்காக பராமரிக்காமல் கவனிப்பின்றி விட்டுவிட்டாலோ நம்மிடம கோபமோ வெறுப்போ கொள்வதில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் நம்மிடம் நட்புகாட்டும் விலங்குகளின் தோழமை உணர்வு மனிதனின் தோழமை உணர்வோடு ஒப்பிடும்போது மிகப்பெரிது அல்லவா?  

தோழமை உணர்வை காட்ட ஒரு சிலை வைக்க வேண்டுமென்றால் அந்த சிலை ஒரு நாயின் சிலையாகத்தானே  இருக்கும். யானை டாக்டர் கதையில் நாய்களின் இந்த தோழமைஉணர்வைப்பற்றிய விவரிப்பை எத்தனை தடவை நான் படித்தாலும் கண்ணீர் கசிந்துவிடும்.  விலங்குகள் மனிதர்களிடம் காட்டும்  இந்த தோழமை உணர்வு காடு நாவலில் வரும் தேவாங்கு, மேஸ்திரி இடையிலான , மத்தகம் நாவலில் யானை, மன்னர் இடையிலான நட்புகளில் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கும்.


   வெண்முரசின் வெண்ணன்  மனிதர்களிடம் தோழமைகொண்டு செய்யும் குறும்புகள் மிக அழகு. இரு நாட்களாக என் மனதில் ஏறிக்கொண்டு ஒரே அட்டகாசம் செய்துகொண்டிருக்கிறான். அவன் என் மனதில் இருக்கும் சலிப்புகள் ஏக்கங்கள் போன்ற சிறு எண்ணங்களை முட்டித்தள்ளி கலைத்துப்போட்டு விளையாடிவருகிறான்.  தலை, தும்பிக்கை, வால் என அனைத்தையும் தனித்தனியாக  ஆட்டிக்கொண்டு தடதடவென ஓடிவரும்   ஒரு பெரிய குழந்தை அல்லவா வெண்ணன். அவனுடன் கட்டிபிடித்து உருண்டு விளையாட ஏக்கமாக இருக்கிறது.  யானை, நாய், குரங்கு இவற்றை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிப்பதில்லை.  மூக்கை மிகவும் நீட்டி அதற்கு பெரும்பலத்தைக்கொடுத்த இறைவன் ஒரு மகா குறும்பன்.  அவனின் அந்தக் குறும்புத்தனம்தான்  வெண்ணனின் நடத்தையிலும்  பிரதிபலிக்கிறது போலும்
தண்டபாணிதுரைவேல்