Sunday, November 29, 2015

சுபகை - காதலின் நாயகி



சுபகை - என்ன சொல்ல? வெண்முரசில் வந்த மற்றுமொரு அற்புதமான கதாபாத்திரம் அவள். அவள் செய்வது நாயக வழிபாடு அல்ல. அவள் தன்னை முழுமையாகவே அர்ஜுனனிடம் சமர்ப்பித்திருக்கிறாள். அதே சமயம் அவனை அப்படியே முழுமையாக அடைந்தும் இருக்கிறாள். மாலினிக்கும் இவளுக்கும் அர்ஜுனன் பால் கொண்ட அன்பில் எந்த வித்தியாசமும் இல்லை. அந்த அன்பைப் பொழியும் கண்களையே அவன் நினைவில் வைத்திருக்கிறான். அவள் அர்ஜுனனைப் பொறுத்தவரை எப்படியோ, தப்பித் தவறி நினைவில் நின்றவள் அல்ல. எந்த நிலையானாலும் அவன் சென்று சேரும் போது, எச்சொல்லும் இல்லாமல் அவனை அரவணைத்துக் கொள்ளும் சரணாலயம் அவள். அதைத் தான் அவன் காண்டீபத்தின் இறுதி அத்தியாயத்தில், "உன்னைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் நான் வயது முதிர்ந்தவனாக இருந்தேன், நீ இதை விட தொய்ந்து போன உடலுடன் இருந்தாய்" என்கிறான். 

அர்ஜுனன் பெண்களிடம் காமத்தைத் தேடவில்லை. அவன் தேடிக்கொண்டிருப்பது தாய்மையுடன் கூடிய புன்னகையை. பிரயாகையில் பிரீதி என்ற ஒரு தாசியிடம் தான் முதன் முதலில் அவன் காமத்தை அறிகிறான். அத்தாசி அவனை மடியில் சாய்த்து தலை கோதிவிடுகையில் செய்யும் ஒரு புன்னகையை அவன் நினைவில் வைத்து அவனை நீராட்டும் மாருதரிடம் சொல்வான். அவர் இனி எல்லாப் பெண்களிலும் அப்புன்னகையைத் தான் தேடுவீர்கள் என்று அர்ஜுனனிடம் சொல்வார். சுபகை அவள் இளமையில் சிரிக்கும் கண்களும், தெற்றுப் பற்களும் உடையவளாக இருந்திருக்கிறாள். தெற்றுப் பல் அழகிகளின் புன்னகை எப்போதுமே உற்சாகம் தருவது. அதை அவளிடம் கண்டதால் தான் அவன் அவளுக்கு எயினி என்று செல்லப் பெயரிட்டிருக்கிறான். அவனை முற்றும் அறிந்த மாலினி அதனால் தான் சுபகையைக் கண்டவுடனேயே அப்பெயரைக் கூறி விடுகிறாள். அப்புன்னகையை உதட்டிலும், அவன் ஏங்கிய அன்பையும், அரவணைப்பையும் கண்களிலும் கொண்டு அவனை அந்த இரவில் சந்தித்திருந்திருப்பாள் சுபகை. எனவே தான் அவன் நினைவில் அவள் நின்றிருக்கிறாள். 

மேலும் மாலினி அம்மைக்கு அடுத்து அர்ஜுனன் இவளிடம் தான் இயல்பாக இருக்க முடியும். மற்ற அனைவருமே அர்ஜுனன் மீது காதல் கொண்டிருந்தாலும் அவர்களின் வாழ்வுக்கென வேறொரு பிடிப்பையும், விழைவையும் கொண்டிருந்தார்கள். திரௌபதியும், சுபத்ரைக்கும் அவர்களுக்கே உரிய ஆணவமும் (ego), அவர்களின் அடையாளம் என்பதைத் தக்க வைத்துக் கொள்ளும் விழைவும் இருக்கின்றன. ஆனால் சுபகைக்கும் சரி, மாலினிக்கும் சரி அர்ஜுனன் என்ற எண்ணம் தவிர வேறு எந்த பிடிப்பும் வாழ்வில் இல்லை. எனவே தான் அர்ஜுனன் தான் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் திரும்பி வரும் மாலினியின் குடிலுக்கே சுபகையையும் செல்லச் சொல்கிறான். அங்கே தனக்காகக் காத்திருக்கும் படியும் சொல்கிறான். அர்ஜுனனுடன் கூடிய இரவில் நின்ற சுபகையின் காலம் இன்றிலிருந்து மீண்டும் இயங்கத் துவங்கிவிடுகிறது. மிக மிக இனிமையான ஒரு காதல் நம் கண் முன்னே, மிக இயல்பாக மலர்ந்து மணம் வீசுகிறது. உண்மையில் காண்டீபத்தில் வந்த காதல்களில் அர்ஜுனன் - சுபகை காதலே மிகச் சிறந்ததாகத் தோன்றுகிறது.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்