Monday, November 9, 2015

துறவின் துயரம் (காண்டீபம் -55)


   ஒரு பறவைக்குஞ்சுக்கு கூடு மிகவும் கதகதப்பனது, இதமானது, பாதுகாப்பானது.  அதன் அலகுக்கே உணவுவந்து சேரும் இடம் அது.  இவை பறவைக்குஞ்சுக்கு தெரிந்திருந்தும், வானை நோக்கி செல்ல வேண்டும் என்ற உந்துதல் அதற்கு வருகிறது. சிறகுகளை அசைத்துப்பார்க்கிறது. சற்று எம்பி பார்த்துக்கொள்கிறது. எல்லாம் கிடைத்தும் எதற்காக அது வானைக் கனவு காண்கிறது?  வண்ணச்சிறு  பறவைகளை வளர்க்கும் நண்பரிடம் கேட்டேன். பாவம் அல்லவா அவை? வெளியில் போக அவை பிரியப்படாதா என்று.   அதற்கு அவர், 'ஆம், சற்று கவனக்குறைவுடன் கூண்டை திறக்கும்போது அப்படி பறவைகள் தப்பித்து பறந்துபோகும். ஆனால் அவை வெகு சீக்கிரம் காகம் போன்ற நாட்டுப்பறவைகளால் கொல்லப்பட்டுவிடும். இவை இங்கிருக்கும் சூழலில் வாழத்தெரியாதவை' எனக் கூறினார். பறவைகள் கூண்டைவிட்டு வானை கனவுகொண்ட வண்ணம் இருக்கின்றன. அவற்றிக்கு நீரும் உணவும் உறைவிடமும் மண்ணில், அல்லது மண்ணில் முளைத்த மரங்களில் தான் இருக்கின்றன. அவற்றுக்காக அவை மண்ணுக்கு வருகின்றன. ஆனால் அவற்றின் எண்ணமெல்லாம் வானில் அல்லவா இருக்கிறது.

  மனிதன் வேண்டுவதெல்லாம்  அவனுக்கு இல்லறத்தில் கிடைக்கிறது. அங்கே  அவன் உடலும் உள்ளமும் பாதுகாப்பாக இருக்கிறது. இல்லற வாழ்வுக்காக சில சமூக விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் மனிதர்கள் இல்லறத்திற்கு மேலாக ஏதோ ஒன்றை கனவு காண்கிறார்கள். அதை அடைய விழைகிறார்கள்.  ஆனால் அரிதாக யாரோ  ஒருவன்தான்  அனைத்து இல்லற சுகங்களையும் விடுத்து  துறவு பூணுகிறான். எதையோ அவன் தேடிப்போகிறான்.  இல்லறத்தில் அடையாத நிறைவை எதிலோ அடைய முயற்சிக்கிறான். 

       இல்லறத்தை துறத்தல் எளிதானதோ, இனிமையானதோ அல்ல.   துறவில் அவன் தன் உறவுகளை முற்றிலுமாக இழக்கிறான். அனைத்து உறவுகளும் அவன் மனதினில் இறந்துபோகிறார்கள். அவன் இனி மீண்டே வராத ஒரு  பிணத்தைப்போல் வீட்டைவிட்டு  போகிறான். அவன் அதே நாட்டில் இருந்தாலும் தன்னை நாடுவிட்டு நாடு கடத்தப்பட்டவனாக காண்கிறான். இனி அது இதுவரை அவன் கண்ட நாடாக இருக்கப்போவதில்லை. ஆயிரம்தான் நாம் செல்வத்தை குறை கூறினாலும் அதுதான் நம் உற்ற நண்பன். அந்த செல்வத்தின் நட்பை முற்றிலுமாக அவன் துண்டிக்க வேண்டும். அவன் இனி  ஒரு அனாதை, ஒரு பிச்சைக்காரன், ஒரு நாடற்ற ஏதிலி, ஒரு சிலர் மதித்தாலும் பலரின் பார்வையில் மனிதனுக்கான மரியாதையை இழந்தவன். துள்ளிப் பாயும்  ஐம்புலன்களின் கடிவாளத்தை கையில் பிடித்து விழிப்புடன் அடக்கி வைத்திருக்கவேண்டிய கட்டாயம்கொண்டவன். அவன் அப்படி இருக்கிறானா என தெருவில் போகும் யார் வேண்டுமானாலும் சோதித்தறிவதற்கு உட்பட்டவன்.  இல்லறத்தில் ஒரு தலைவனாக மதிப்பிற்குரியவனாக தன்னைக்கருதிக்கொண்ட அவன் இப்போது தன்னை மிக அற்பனாக, சிறு புல்லுக்கு ஈடானவனாக அறிந்துகொள்ள வேண்டியவன்.  இல்லறம் தன்னை சிறை வைத்திருந்த கூடு எனக் கண்டவன். இப்போது அந்தக்கூட்டின் வெளிப்புறத்தில் இருந்து உள்ளே பார்க்கும்போது தான் இன்னொரு கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதாய் அறிபவன். இத்தனைக்கும் மேலாக இந்த நிலையை அவனுக்கு சுட்டிகாட்டி அவன் இல்லற இன்பத்தை நொடிக்கு நொடி நினைவூட்டிக்கொண்டிருக்கும், கொடிய மனதை தன்னுள் கொண்டிருப்பவன்.  

   இவற்றில் அடைவதுதான்   அவன் தன் துறவில் கொள்ளும் பெருந்துயரமாகும்.  இந்த நிலை ஒருவன் துறவில் சுமக்கவேண்டிய சிலுவை. இந்த சிலுவையில் அவன் தன்னை அறைந்துகொள்கிறான். பின்னர் முழுமை ஞானத்தை அடையும்போதுதான் அவன் அந்தச் சிலுவையிலிருந்து விடுபட்டு உயிர்த்தெழமுடியும். இக்கடுந்துயரத்தை கணக்கில் கொண்டே மனிதர்களில் ஒரு சிலரைத்தவிர வேறு யாரும் துறவு மேற்கொள்வதில்லை. இந்தத் துயரத்தின் வலியைத் தாங்க முடியாதவர்கள் சிதைந்து போகிறார்கள். அல்லது தன்னையும் பிறரையும் ஏமாற்றிக்கொள்ளும் போலித்துறவிகளாக கீழ்மையடைகிறார்கள்.

   அரிஷ்டநேமி கொள்ளும் துறவின் துயரத்தை  வெண்முரசு ஒரு உருவகமாக சித்தரிக்கிறது.  அவர் குகை எனக்கூறுவதை துறவுவாழ்வு எனக்கொண்டால் எல்லாம் பொருத்தமாக அமைகின்றன.

நாளெல்லாம் இந்த சிறிய குகை வாயிலில் தயங்கியும் அஞ்சியும் விழைந்தும் வெறுத்தும் அமர்ந்திருந்தேன். பின்பு முழந்தாளிட்டு கால்களை நீட்டி கைகளை உந்தி இதனுள் நுழைந்தேன். கருவறை விட்டு வெளிவரும் குழந்தை அதற்குள்ளேயே திரும்பிச் செல்வது போல என்று தோன்றியது. உள்ளே குளிர்ந்து இருண்ட அமைதி செறிந்திருந்தது. சில கணங்களுக்குள் என் முதுகெலும்பு வலி கொள்ளத்தொடங்கியது. அதற்குள் நெடுநேரம் அமரமுடியவில்லை. என்னால் முடியாது என்றபின் மீண்டும் வெளிவர முயன்றேன். கைகளை ஊன்றி தவழத்தொடங்கியபோது என்னால் என்னும் சொல் எனக்கு அறைகூவலாகியது. என்னால் முடியாததா? வெளியேறினால் மீண்டும் இக்குன்றுக்கோ அருகநெறிக்கோ வரமுடியாது என்று உணர்ந்தேன். எனவே உள்ளம் திரும்பி உள்ளேயே அமைந்து கொண்டேன். அன்றிரவு முழுக்க இதனுள் எனது தனிமையை நானே உணர்ந்தபடி அமர்ந்திருந்தேன்.” 


“மறுநாள் புலரியில் தவழ்ந்து வெளிவந்தபோது என் முதுகு பல துண்டுகளாக உடைந்துவிட்டது போல் வலித்தது. வெளியே விரிந்துகிடந்த ஒளிப்பெருக்கில் கண்கள் கூசின. காற்று நாற்புறமும் என்னைத் தழுவியது. பின்னர் விழிதிறந்து நோக்கியபோது காற்றில் புகை என சிதறடிக்கப்பட்டேன். கரைந்து மறைந்தேன். கைகளை விரித்தபடி இங்குள்ள ஒவ்வொரு பாறையிலிருந்தும் இன்னொரு பாறைக்கு தாவினேன். வானை நோக்கி அண்ணாந்து பெருங்குரலெடுத்து கூவினேன். நெஞ்சில் அறைந்து பொருளற்ற ஒலியை எழுப்பினேன். பின்னர் கண்ணீருடன் சோர்ந்து ஒரு பாறை மேல் அமர்ந்து விம்மினேன்.”
“தன்னுணர்வடைந்தவுடன் எழுந்து ஓடி மீண்டும் குகைக்குள் ஒண்டிக் கொண்டேன். நத்தை தன் ஓட்டுக்குள் என. நத்தையல்ல ஆமை. கைகால்களை நீட்டினால் மட்டுமே உண்ணமுடியும், செல்லமுடியும். ஆனால் எத்தனை நல்லூழ் கொண்டது? விழைந்தகணமே கருவறையிருளுக்குள் மீண்டுவிடும் வாய்ப்புள்ள உயிர்கள் பிறிதெவை? எத்தனை நாள் என் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது என்று இன்று எண்ணினால் வியப்பேற்படுகிறது. இக்குகை என் அகம். இம்மலையுச்சிப் பாறைவெளி என் புறம். இக்குகை என் ஊழ்கம். அந்த வானம் என் விழைவு. துலாக்கோலில் முடிவிலா அசைவு என்று உள்ளத்தை அருக நெறி சொல்கிறது. துலாக்கோலின் முள் புயலில் ஆடும் பாய்மரக்கலத்தின் சுக்கான் என கொடுநடனமிட்ட நாட்கள் அவை.
 
    அவர் குகையைவிட்டுப்போவது துறவைவிட்டு போவதற்கான குறியீடாக ஆகிறது. அரிஷ்டநேமி மீண்டும் அவரின் குகைக்கு திரும்புவாரா?  திரும்பச்செல்லும் இல்லறம் மற்றொரு குகை என ஆகுமா? அங்கிருந்து அவர் பார்க்கும்போது துறவு ஒரு விரிந்த வான்வெளியென தெரியுமா? துறவளிக்கும் விடுதலையை நம் பந்தப்பட்ட அறிவு  துயரமெனகொள்கிறதா? இறப்பின் பின் என்ன என்பதை இறந்துதான் அறிந்துகொள்ள முடியும் என்பதைப்போல துறவின் துயரம் என்பது மாயை என்பது துறந்துதான் அறிந்துகொள்ள முடியுமா?  

 தண்டபாணி துரைவேல்