Tuesday, November 17, 2015

காவியச் சுவை: (காண்டீபம் 62)



நாம் அனைவரும் நன்றாக அறிந்த கதை. எப்படியும் நேமி பலியிடப்படும் ஆடுகளைக் கண்டு துறவு பூணப் போகிறார். இந்த கதை இன்றைய அத்தியாயமாக மலர்கையில் நம் மனதில் ஒரு அதிர்வையும், நேமியின் உணர்வுகளை மேலும் அந்தரங்கமாகவும், மேலும் காத்திரமாகவும் நம்மிடம் கடத்தி விட்டது. இன்று எந்த தத்துவ விசாரணைகளும் நடைபெறவில்லை. சொல்லப்போனால் பெரிய உரையாடல்கள் எதுவும் நடைபெறவும் இல்லை. இன்றைய அத்தியாயம் முழுக்க நிகழ்வுகளின் வர்ணனை தான். முழுவதும் உவமைகள் மூலமாகவே இவ்வுணர்வுகள் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன. 

ஆடுகளின் மன்றாடலைக் கேட்ட நேமி ஒன்றும் சொல்லாமல் சுப்ரதீபத்தின் மேல் ஏறி நின்று தன் அணிகலன்களைத் துறக்கிறார். அதை ஜெ "காறித்துப்பப்பட்ட வெண்சளி போல. பறவை எச்சம் போல. அழுகியுதிரும் கனிகள் போல. பொன்னகைகள் மலம் போல விழுந்து மஞ்சள் மின்னின." என்கிறார். அவர் அணிந்திருந்தவை அனைத்தையும் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளாகப் பார்க்கிறார் அவர். ஆடைகள், சிகை என அழகு தரும் அனைத்தையும் அவர் உடலால் வெளியேற்றப்படும் ஒன்றாகவே கருதித் துறக்கிறார். வெண்முரசின் உவமைகள் எப்போதுமே தனித்தன்மை வாய்ந்தவை தான். அவை எவ்வாறு கூறப்படும் உவமேயங்களைத் துலக்கிக் காட்டுகிறது என்பதில் இருக்கிறது வெண்முரசின் காவியச் சுவை.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.