Friday, November 27, 2015

மாநகர் – 5 - பிம்பங்கள்




இனிய ஜெயம்,

மாலினி ஆண்களையே தீண்டாதவள். அர்ஜுனன் சிகர ஆளுமை கொண்ட பெண்களை கண்டு கடந்தவன். மாலினி அர்ஜுனன் கனிந்திருக்கிரானா என்பதை சுபகை கொண்டு அறிகிறாள்.

அர்ஜுனன் சுபகை விழிகளில் பொங்கும் தனக்கே தனக்கான ஒன்றினைக் கண்டு அவளை அறிகிறான். இத்தனைக்கும் சற்று முன்புதான் திரௌபதியை வேறு கண்டிருக்கிறான். ஆம் அர்ஜுனன் இப்போது பெண்கள் என்பதை விட ''பெண்மை'' என்பதை அறிந்தவனாக இருக்கிறான்.

திரௌபதி குறித்த வர்ணிப்பு, அர்ஜுனன் விழிகள் வழியே துலங்கும் அவளது மென் வயிற்று பேற்று வரிகளும், புதிய பருக்களும், பேசுகையில் வாங்கும் மூச்சும், உன்மத்தம் கொள்ள வைக்கிறது.

சுஜயனின் மாறுதல் எதிர்பாராத ஆச்சர்யம். அர்ஜுனனும் நீலனும் வீரம் கொண்டு அனைத்தையும் வென்று முன் செல்கிறார்கள். நேமி அனைத்தையும் அஞ்சாமை கொண்டு வணங்கிக் கடந்து செல்கிறார்.

நேமி தனது துரியத்தில், சுஜயன் தனது கனவில் என இருவரும் எதிர்கொள்வது ஒன்றே தானே.வில்லும் வாளும் கூட தோற்கும், அஞ்சாமை எதன் முன்பும் தோற்காது. தனது பிம்பத்தின் முன்பு கூட. 

கடலூர் சீனு