Friday, November 20, 2015

துறவைக் கொண்டாடும் இல்லறத்தினர்.(காண்டீபம்-63)


   

சமண மதம் கடும் துறவை போற்றுகிறது. அனைத்தையும்  துறந்திடும் வழியே முக்திக்கான வழியெனக்கொண்டது. ஆனால் அதைப் பின்பற்றுபவர்கள் பெரும் வணிகர்களாக இருக்கிறார்கள். உலகின் செல்வமெல்லாம் தமக்கானது அதை மீட்டு தம்மிடம் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற பேராவல் கொண்டவர்கள்.  அதே நேரம் முற்றும் துறந்த ஒரு சமணமுனியின் காலில்  விழுந்து வழிபடுகிறார்கள்.    இல்லறத்தில் மிக ஈடுபாட்டோடு வாழ்ந்து குடும்பத்தின் நலனுக்கென  தன் வாழ்நாள் முழுதும் செலவிடுபவர்கள், இல்லறத்தை துறந்து இல்லற பந்தமே துன்பத்திற்கு காரணம் குடும்ப பற்றையெல்லாம் விட்டுவந்தால்தான் உங்களுக்கு உயர்கதி என போதிக்கும் துறவிகளை தன் குருவென  கருதுகிறார்கள், கொண்டாடுகிறார்கள், வழிபடுகிறார்கள். இது பெரிய முரணாக அல்லவா இருக்கிறது.


  ஏன் மக்கள் தான் பின்பற்றாத துறவின்மேல் விருப்பு கொண்டிருக்கின்றனர்? துறவின் பாதையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் நடக்கிறார்களோ அந்த அளவுக்கு துறவு அவர்களை  ஈர்க்கிறதே அது ஏன்?
 

 மனிதன்  ஆசைகள் பல கொண்டவன். ஒவ்வொரு ஆசை நிறைவேறலின்போதும் அவன் இன்பத்தை அனுபவிக்கிறான். ஆனால் அந்த இன்பத்தில் அவன் நிறைவடைவதில்லை. ஆசைகள் அவனுக்குள்ளிருந்து மழைக்கால ஈசல்கள்போல கிளம்பிக்கொண்டே இருக்கின்றன. அந்த ஆசைகளின் வழி கிடைக்கும் இன்பங்களும் அந்த ஈசல்களைப்போல அற்ப ஆயுள்கொண்டவையாக உள்ளன. ஆசைகளின் பசியை அவனால் திருப்திப்படுத்தவே முடிவதில்லை. ஆசைகளின் வழி சென்று அடையும் இன்பங்கள் சிறிது நேரத்தில் அர்த்தமற்றுபோகின்றன. ஒவ்வொருமுறையும் அவன் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறான். ஆசைகள் இயக்கும் வெறும் தோல்பாவை அல்லவா தான் என்ற உண்மை அவனைத் தாக்குகிறது.   ஆசைகளை துறத்தலில் தான்  உண்மையான ஆனந்தம் இருக்கிறது என்பதை ஒருவன் அறிந்திருந்தும் அந்த ஆசைகளின் பிணையிலிருந்து அவனால் விடுபடமுடியவில்லை.

அப்படி தன் ஆசைகளை மாய்த்து அவற்றிலிருந்து மீளும் யாரேனும் ஒருவன் மற்றவர் கண்களுக்கு பெரு வீரனாக தெரிகிறான். அவன் மற்றவர் அடைய நினைக்கும் உச்ச நிலைக்கு ஒரு வடிவம் கொடுப்பவனாக இருக்கிறான். மற்றவர் சென்று சேரவேண்டிய  இலக்கென திகழ்கிறான்.  ஆகவே அவன்  ஒரு மக்கள் நாயகனகக் கொண்டாடப்படுகிறான். ஞானமெனும் தூய வெண்களிறேரி செல்லும் அந்த பெருவீரன் பெரும் வசீகரன். ஆனாலும் பரவசத்தோடு   வாழ்த்தும் அந்த  மக்கள் கூட்டம்  அந்தப் பெருவீரனை பின்பற்றமுடியாமல் நின்று விடுகின்றனர். அதற்கு காரணமென வெண்முரசு இவ்வாறு சொல்கிறது. 


"அவர்களால் தொடரமுடியவில்லை. வாயில்கள் திறந்தே இருந்தன. ஆனால் அது அவர்களின் எல்லை. குலத்தால், வாழ்வால், நம்பிக்கைகளால், அச்சங்களால், ஊழால்."  இவற்றிலிருந்து விடுவித்துக்கொண்டு அவரைப் பின்தொடர்தல் அந்த எளிய மக்களால் முடியவில்லை என்றபோதிலும்  அவரின் தீரத்தை  உணரமுடியாதவர்களாகவோ, அதைப்போற்றத் தவறுபவர்களாகவோ  அவர்கள் இல்லை என்பதே உண்மை.  

தண்டபாணி துரைவேல்