Monday, November 23, 2015

கூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)

    அறிவு அறிவு என்று தேடித் தேடி தன்னை கூர் படுத்திக்கொள்ளும் மனிதர்கள் இருக்கிறார்கள்.  மேலும் மேலும் செல்வம் என்று வாழ்வெல்லாம் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருக்கிறோம். பதவிக்காக  நல்லதும் கெட்டதுமாக பல முயற்சிகளை விடாது செய்யும் பலர் இருக்கின்றனர்.  மக்கள் நலனுக்காக தன் நேரம் செல்வம் அனைத்தும் தியாகம் செய்து ஓயாது உழைக்கும்  சேவகர்களும் இருக்கிறார்கள்.   இவர்களின் சிந்தனை, ஊக்கம், செயல் எல்லாம் கூர்மையானதாக இருக்கும்.    அவர்கள் தம் நோக்கம் நிறைவேறுவதற்காக  தம்மை கூர் தீட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் கூரம்புகள் அவர்கள். இவர்கள்தான் ஒரு சமூகத்தை நகர்த்துபவர்கள். அவர்கள் சமூகத்தின் சக்கரங்களாக இருந்து சமூகத்தை நகர்த்திச் செல்கிறார்கள்.  

ஆனால் வேறு ஒரு சிலர் இருக்கின்றனர்.  அவர்களுக்கு வாழ்க்கையில் நோக்கம் என்று பெரிதாக எதுவும் இருக்காது. ஒவ்வொரு கணத்தையும் அப்போதே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இறந்த காலத்திற்கான ஏக்கமோ எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்போ இல்லாதவர்கள். எப்போதும் மனம் நிறைந்திருக்க, சாந்தமும், அன்பும் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் மற்றவர்களை உறுத்தும், இன்னலளிக்கும், வருத்தப்படவைக்கும் எந்தக் கூர் முனைகளும் இருக்காது.  தனக்கு தீங்கிழைப்பவரை எந்த தயக்கமும் இன்றி மன்னித்துவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் அந்தத் தீங்கின் வருத்தமும் நீர் மேல் எழுத்துபோல் உடன் மறைந்துபோய்விடும்.


 தனக்கு தீங்கு இழைத்ததனால்  கடிந்துகொள்ள வேண்டிய ஒருவரைப்பார்த்து அவர்களால் புன்னகைக்க முடியும். அந்த புன்னகையில் சற்று வருத்தம் கலந்திருக்கலாம் அவ்வளவுதான். தன்னெதிரில் இருக்கும் ஒருவரின் நன்மையையும் மகிழ்வையும்  மட்டுமே கருத்தில் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரின் நற்பக்கம் மட்டுமே அவர்கள் காணுவார்கள். அதனால் அவர்களை ஏமாற்றுவது எளிதுதான். ஆனால் கேட்டாலே கொடுப்பவரிடம்  ஏமாற்றிப் பெற வேண்டிய அவசியல் இல்லாததால் அவர்களை பிறர் அவ்வளவாக ஏமாற்ற வேண்டிய அவசியமிருப்பதில்லை. பிறருக்கு என்ன கொடுக்க முடியும் என்று சிந்திப்பார்களே தவிர பிறரிடம் இவர்கள் தமக்கென வேண்டுவதற்கு எதுவும் இருக்காது.   கையில் வைத்திருக்கையில் குளிர்ந்து இதமளிக்கும் கூர்முனைகளை எதுவும் அற்ற வழவழப்பான குழாங்கற்கள் போன்றவர்கள் இவர்கள்.

   குந்தி, திரௌபதி ஆகியோர் தமக்கென இலக்குகள் கொண்ட கூரம்புகள். வெண்முரசின் பாத்திரங்கள் பெரும்பாலும் இப்படி இலக்குகள் கொண்ட அதற்காக தன்னைத் தீட்டிக்கொண்டிருக்கும் கூரம்புகளாகவே இருக்கின்றன. அல்லது பீஷ்மர்போல மற்றவர்களின் அம்பறாத்தூணியில் மற்றவ்ர்களின் இலக்குகளுக்கான கூரம்புகளாக இருக்கிறார்கள்.  தருமன்கூட அறம் தவறாமல் வாழுதல் என்ற இலக்கைக்கொண்டு அதற்காக தன்னை கூர் தீட்டிக்கொள்கிறான்.    வெண்முரசில் இனிய குளிர்ந்த வழவழப்பான குழாங்கல்லாக  எற்கெனவே பானுமதியைக் கண்டிருக்கிறோம்.  இப்போது   அதைப்போன்ற ஒரு குழாங்கல்லாக தான் ஆவதை சுபத்திரை தன் வாழ்வின் நோக்கமாக கொள்வதைக் காண்கிறோம். அதை வெண்முரசு இவ்வாறு அவள் கூற்றாக சொல்கிறது: 

“என்னை தீட்டித் தீட்டி கூர்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அது பொருளற்றது என்று தோன்றுகிறது. இதோ இங்குள்ள இக்கூழாங்கற்கள் அனைத்தும் வான்மழையாலும் காற்றாலும் மென்மையாக்கப்பட்டவை. அதைப்போல இருக்கவே நான் விழைகிறேன்” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “ஒரு செயலின் பொருட்டு கூர்மையாக்கப்பட்டவை படைக்கலங்கள். இக்கூழாங்கற்கள் அப்படி ஓர் இலக்குக்கென அமைந்தவை அல்ல.”   
இவ்வுலகைப்படைத்த கடவுள்,  உறுத்தும் கூர்முனைகள் அற்ற இத்தகையவர்களைக் கண்டே மனம்  நிறைந்து புன்னகைப்பான். பிரபஞ்சப் பெருங்கடலின்மேல் ஆலிலையில் துயிலும் அச்சிறுகுழந்தை தான் விளையாட என  சேகரிக்க விரும்பும் குழாங்கற்கள் அவர்கள்.  அந்தக் கற்குவியலில் நானும் ஒரு சின்னஞ்சிறு கல்லாகும் பேறொன்றல்லவா நான் அவனிடம் வேண்டுவது.

தண்டபாணி துரைவேல்