Wednesday, November 11, 2015

பார்வைக்குவியலில் சிக்கித்திணறும் பெண்.


ஒரு ஆண் மற்றொரு ஆணைப் பார்க்கும் போது ஒரு மனித உயிரைப்பார்க்கிறான், ஆனால் அவன் ஒரு பெண்ணை பார்க்கும்போது அவள் அப்போது வெறும் மனித உயிர் அல்ல.  அவள் ஒரு  பெண் மனித உயிர் என தனித்து தெரிகிறாள். அவள் பெண் என்பது அவன் மனதை உசுப்பி எழுப்புகிறது. சோம்பி இருக்கும் மனம்  பெண் என்றதும் சுறுசுறுப்படைகிறது. பார்வை கூர்மையடைகிறது. அப்போது அவன் புலன்களெல்லாம்  விழிகளாக மாறி அவளைப் பார்க்கிறான்.   அவள் வயது, அழகு, நளினம், அனைத்தையும் தன் தராசில் இட்டு நிறுத்துப்பார்த்துக் கொள்கிறான்.


இப்படி பெண்னை உற்றுப் பார்த்தல் அவன்  ஆண் என தன்னை அறிந்த வயதில் தொடங்கி அவன்  புலன்கள் அனைத்தும் மங்கி மறையும் காலம் வரை தொடர்ந்து போகிறது. ஒரு பெண்,  ஒரு வயதுக்காலத்தில், ஒரு சிலரின் பார்வையை விரும்பினாலும், அதற்காக எதிர்பார்த்தாலும்,  சிறுவர் முதல் வயதானவர்வரை ஒருவர் விடாமல் அவளை பார்த்துக்கொண்டிருப்பது அவளை நிச்சயம் தொந்தரவு செய்யும். அவள் இயல்பாக இருப்பதை தடுக்கும். ஒவ்வொரு கணமும் தன் ஆடை அணிகலகள், நடை , பாவனை, பேச்சு சிரிப்பு என அனைத்து செயல்களும் அவள் சரிபார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். எப்போதும் ஒப்பனையில் இருக்க வேண்டும். இந்தப் பார்வைக்குவியலில் நீந்தியபடியே ஒவ்வொரு பெண்ணும் கல்லூரிக்கு, வேலைக்கு சென்று வருகிறாள்.


   பெண்களின் உடலை மட்டுமென அல்லாமல் அவளின் நடவடிக்கைகளையும் ஆண்கள் கவனிக்கிறார்கள். ஒரு பெண் தனக்கு தெரிந்தவளோ அல்லது தெரியாதவளோ எவராயினும், அவள் ஏன் குனிகிறாள், ஏன் நிமிர்கிறாள், ஏன் நடக்கிறாள், ஏன் உட்காருகிறாள், ஏன் அவள் திரும்பிப்பார்த்தாள், ஏன் அவள் திரும்பாமல் செல்கிறாள், ஏன் அவள் வந்தாள், ஏன் அவள் வரவில்லை, ஏன் சிரிக்கிறாள், ஏன் முறைக்கிறாள், ஏன் பேசினாள், ஏன் பேசவில்லை என எல்லாம்  ஆண்களின் விவாதப்பொருள்களாகின்றன.   இரு ஆண்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொள்ளும்  விஷயம் பெரும்பாலும் ஒரு பெண்ணைப்பற்றியதாக இருக்கிறது.   இதனால் பெண்கள் தாம் செய்யும் எல்லாச் செய்கைகளையும் இது ஒருவேளை சரியோ இல்லையோ என சந்தேகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் அவள் செயல்களை செய்கையில்  சில சமயம். தடுமாற்றம் வருகிறது. ஒருவேளை இந்த தடுமாற்றங்கள்தான பெண்மையின் நான்கு குணங்கள் என மாறுகிறது போலும்.  வேறுவழியின்றி அந்த நான்கு குணங்களையும் தன் அணிகலன்கள் என ஒரு பெண் சூடிக்கொள்கிறார்கள்.

  சுபத்திரையைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல் யாதவகள் பேசிக்கொள்வதைப் பார்க்கும்போது எனக்கு அவள் மேல் பரிதாபமாக இருந்தது.  கதையாசிரியர் அவள் மனநிலையை வெளிப்படுத்த உதவும்  உத்தியாக இதை பயன்படுத்தியிருக்கலாம்.  ஆனால் ஆண்கள் இப்படி பேசக்கூடியவர்கள்தானே?  ஒரு பெண்ணைப்பற்றி அவள் காதல் காமம் மகிழ்ச்சி சோகம் கோபம் எல்லா பொதுவில் வைத்துப்பேசும் ஆணுலகம் அவளுக்கே உரித்தான  அந்தரங்கத்தில் அத்துமீறி நுழையும் செயல் அல்லவா? இவ்வளவும் செய்துவிட்டு ஒரு ஆண் பெண்ணைப்பார்த்து கேட்கிறான், நீ ஏன் இயல்பாக இல்லாமல் இருக்கிறாய் என.

தண்டபாணி துரைவேல்